கடந்த இரு இதழில், தான்தோன்றி மலை தோன்றிய விதமும், ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி சுயம்புவாக உருவான காரணங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த இதழில், துவார பாலகர்கள் அருகில், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும், அனுமனைப் பற்றி பார்க்கலாம்.
புரந்தரதாசரால் பாடல் பெற்ற தலம்
மத்வ மகான்களான வியாசராஜர், புரந்தரதாசர், கனகதாசர் ஆகிய மூவரும் சமகாலத்தவர்கள். இவர்கள், இந்த தான்தோன்றி மலைக்கு வந்திருந்து, ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமியை தரிசித்துள்ளார்கள். அப்போது புரந்தரதாசர், “சகல கிரக பல நீனே’’ (Sakala graha bala neene) என்னும் கன்னட பாடலை பாடியுள்ளார். (முழு பாடல் கீழே)
“சகல கிரஹபல நீனே சரஸிஜநாபா,
நிகில ரக்ஷக நீனே ஸ்ரீனிவாசா,
அகலங்க நீனே ஆதி கேசவா,
பக்தர பாலிசுவ வேங்கட ரமணா,
நின்ன நாம ஸ்மரணே சாலது என்னகே,
என்ன மனவு ஸதா நின்னலி நிலேசிரலி,
புரந்தர விட்டல நீனே பரப்ரம்மா,
கருணிசோ ஸ்ரீநிவாசா…’’
இதன் பொருள்:
“எல்லா கிரகங்களின் பலமும் நீயே,
எல்லோரையும் காக்கும் ஒரே ஆதாரமும் நீயே,
களங்கமற்ற ஆதிகேசவா,
பக்தர்களை காத்து அருள் புரியும் வேங்கடரமணா,
உன் நாமஸ்மரணையே எனக்கு போதும்,
என் மனம் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கட்டும்,
பரபிரம்மமான புரந்தர விட்டலா,
என்மேல் கருணை புரிவாயாக’’
– என்று `அடாணா’ (Atana) ராகத்தில், `கண்ட சாபு’ (Khanda Chapu) தாளத்தில் புரந்தரதாசர் உருக்கமாக, மனமுருகி கல்யாண வெங்கடரமண சுவாமியின் முன்பாக பாடுகிறார். அப்போது, மகான் ஸ்ரீ வியாசராஜர் இக்கோயிலில் அனுமனை பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது. இவருக்கு “ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ என்னும் திருநாமம்.
புரந்தரதாசர் பாடிய பாடல் வரிகளை, கன்னட மொழியில், கோயில் உள்ளே ஒரு பாறையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. காலப் போக்கில் அவை மறைந்துவிட்டதாம். இதனால், இக்கோயிலை “புரந்தரதாசர் பாடல் பெற்ற தலம்’’ என்றே சிலர் கூறுகிறார்கள்.
புறப்பாடு சமயத்தில் அனுமார்
இக்கோயில் அமைந்துள்ள கரூர் மாநகரின் அருகில் `சிந்தலவாடி’ என்னும் ஊர் உள்ளது. இங்கு, “ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்வாமி’’ கோயில் கொண்டு அருளிவருகிறார். இக்கோயில், மத்வ சம்ரதாயத்தை பின்பற்றி வரும் கோயிலாகும். இங்கும், வியாசராஜர் ஓர் அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதன் பிறகே, கல்யாண வெங்கடரமண சுவாமி மகிமைகளை அறிந்த வியாசராஜர், இக்கோயிலுக்குள்ளும் அனுமனை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன்களில், இந்த அனுமன், 28 அல்லது 29வது அனுமனாக இருக்கலாம் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, திருப்பூரில் ஒரு அனுமனையும், தாராபுரத்தில் ஒரு அனுமனையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
இன்றும் தாராபுரத்தில், “காடு ஹனுமந்தராய’’ என்னும் பெயரில், அனுமன் அருள்பாலித்து வருகிறார். தற்போது இக்கோயிலில், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஓரிரு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வியாசராஜர், புரந்தரதாசர், கனக்கதாசர் ஆகியோர் சுமார் பத்து நாட்கள் வரை இக்கோயிலில் தங்கியிருந்து, பூஜைகளை மேற்கொண்டதாக மத்வ சம்ரதாய நூல்கள் தெரிவிக்கின்றன.
இக்கோயில் அனுமனின் திருவடிகள், ஒன்றன்பின் ஒன்றாக காட்சியளிக்கிறது. இரு கண்களும் நம்மை நோக்கிய வாறு கம்பீரமாக கருடாழ்வார் சந்நதிக்கு எதிரில் சேவை சாதிக்கிறார். அதே போல், ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனின் வாலில் சிறிய மணி இருக்கும், இவருக்கும் இருக்கிறது.
சிறப்பிலும் சிறப்பு என்னவென்றால், மற்ற வைணவ திருத்தலத்தில் ஸ்வாமி புறப்பாடு சமயங்களில், முதலில் சுதர்சனம்தான் செல்வார். இக்கோயிலில், ஸ்வாமி புறப்பாடு சமயத்தில், அனுமன்தான் முதலில் செல்கிறார். இது இத்திருத்தலத்தில், சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
குறிப்பு: இக்கோயிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், இரு கோயில்கள் இருக்கின்றன. ஒன்று, பாதாள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி, பாதாளத்தில் இருந்து அருள்கிறார். இவர் அருகில், ஸ்ரீ அங்கையர் கண்ணி மற்றும் ராமானுஜரும் இருக்கிறார்கள். மற்றொரு கோயில், ஸ்ரீ ஜலநாராயண பெருமாள் ஆகும். இவரும் பாதாளத்தில், தண்ணீருக்குள் அருள்கிறார். பாதாள நரசிம்மர் கோயிலுக்கு எதிரில் ஜலநாராயணர் கோயில் உள்ளது. கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வெங்கடரமண ஸ்வாமியை தரிசிப்பவர்கள், நிச்சயம் இந்த இரு கோயில்களுக்கும் சென்று வாருங்கள்!
மெட்டுல் உற்சவம்
ஒரு காலத்தில், ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு, மத்வ சம்ரதாயத்தின்படி பூஜைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இன்றும் தான்தோன்றி மலை அருகில், “ராயர் சத்திரம்’’ என்று ஒரு சத்திரம் உள்ளது. இந்த சத்திரம் 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு, வருடா வருடம் “மெட்டுல் உற்சவம்’’ சிறப்பாக நடைபெறும். “மெட்டுல் உற்சவம்’’ என்பது, படி பூஜைகள் ஆகும். அதாவது, தான்தோன்றி மலையின் அடிவாரத்தில் உள்ள முதல் படியில் தொடங்கி, கல்யாண வெங்கடரமண சுவாமி வீற்றிருக்கும் கருவறை படிவரை, ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் – குங்குமம் வைத்துக்கொண்டே படிகளை ஏற வேண்டும். இதுதான் மெட்டுல் உற்சவமாகும். அந்த சமயத்தில் பக்தர்கள், புரந்தரதாசரின் கீர்த்தனைகள், ஸ்லோகங்கள் என பக்தி மயமாக இருக்கும்.
இந்த மெட்டுல் உற்சவமானது, பிரதி ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். சுமார் 25 ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், ஒவ்வொரு ஆண்டுற்கும் ஒவ்வொரு மத்வ மடாதிபதிகள் வந்திருந்து சிறப்பு செய்வார்கள். கரூர் தான்தோன்றி மலை இடமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஒரே நிவேதனம்
கோயில்களில் உள்ள பிற சந்நதி தெய்வங்களுக்கு, தனித் தனியேதான் நிவேதனம் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில், ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு நிவேதனம் செய்தவற்றையே.. ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கும் நிவேதிக்கப்படுகிறது. இந்த சம்ரதாயம் இங்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. அதே போல், மாசி உற்சமும் இக்கோயிலில் பிரபலம். சுமார் இருபது நாட்கள் வரை சிறப்பாக நடைபெறும். அதே போல், புரட்டாசி மாதத்தில் நடைபெறுகின்ற உற்சவமும் சிறப்பு!
சிறப்பான செயல்
தான்தோன்றி மலையை சுற்றி வெளிச்சம் இல்லாமல் இருந்தது, அதனை சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அறநிலைய துறையின் சார்பில் சரிசெய்யப்பட்டது. மேலும், கழிவறை வசதிகள், கோயில் வளாகத்தில் இருந்த முடி காணிக்கை இடத்தை மாற்றி தனியாக மண்டபம் கட்டியமைத்தது, தெப்பக்குளத்தை புனரமைத்துக் கொடுத்தது, தேர் மண்டபம் பழுதடைந்து இருந்தது, அதனை சரிசெய்து கொடுத்தது என அறநிலையத்துறை சிறப்பாக வசதிகளை செய்துகொடுத்திருக்கிறார்கள். அது மட்டுமா!
பெருமாளுக்கு தங்கவிமானம் செய்து கொடுத்து, தற்போது கோயில் அழகுற காட்சியளிக்கிறது!
பிரசாதம்
புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கல்யாணஉற்சவம் செய்பவர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
விழாக்கள்
புரட்டாசியில் பிரம்மோற்சவம், மாசியில் பிரம்மோற்சவம், ஆவணியில் பவித்தோற்சவம், இவையெல்லாம் பெரிய விழாக்கள். இவை தவிர, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, தை மாதம் பொங்கலுக்கு புறப்பாடு, சித்திரை பிறப்புக்கு புறப்பாடு, தெலுங்கு வருடப்பிறப்புக்கு புறப்பாடு, ரத சப்தமி அன்று புறப்பாடு ஆகியவை நடைபெறும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 6.00 மணி முதல் 1.00 வரை, மாலை 4.00 முதல் 8.00 வரை.
எப்படி செல்வது?: கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு மினி பேருந்துகள் செல்கின்றன.
