?ஒரே கடவுளை பல்வேறு விதமான பெயர்களைச் சொல்லி அழைக்கிறோம். ஒவ்வோர் அங்கமாகச் சொல்லி வர்ணிக்கிறோம். நூற்றெட்டு பெயர்களாகவும், ஆயிரத்தெட்டு பெயர்களாகவும் கூறி வணங்குகிறோம். இதற்கு அவசியம் என்ன?
– விஸ்வநாதன், மதுரை.
ஒரே விதமான பருத்தியிலிருந்து எடுத்த நூலைக் கொண்டு வெவ்வேறு விதமான துணிகளையும் உடைகளையும் தயாரிக்கிறோம். அவை எல்லாவற்றிலும் இருப்பது பருத்தி நூல்தான். ஆனாலும் நாம் அவற்றை வெவ்வேறு விதமான பெயர்களைச் சொல்லி அல்லவா அழைக்கிறோம்? அதுமட்டும் அல்ல….. ஒவ்வொரு பகுதிக்கு அணியும் உடைக்கு ஒவ்வொரு பெயரைச் சொல்லுகிறோம். ெபண்கள் ஒரேவிதமான புடைவைகளை நூற்றுக்கணக்கான பெயர்களை வைத்து அழைக்கிறார்கள். ஆனால், எல்லோருக்குமே இவற்றின் அடிப்படை ஒரே விதமான துணிதான் என்பது தெரியும். மனிதன் தனது உணவுக்கு அடிப்படையான அரிசியை வைத்து எவ்வளவு விதமான உணவு வகைகளையும் சிற்றுண்டிகளையும் தயாரிக்கிறான்? அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சுவை இருப்பதாகவும் நினைக்கிறான். ஆனால் அவை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது அரிசி மட்டுமே என்பது எல்லோருக்குமே தெரியும். அதேபோல, இறைவனை ஒவ்வோர் அங்கமாக வர்ணிக்கும்போதும், கல்யாண குணங்களை ஒவ்வொரு விதமாகப் புகழ்ந்து சொல்லும்போதும், நமக்கு ஒவ்வொரு விதமான திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுகிறது. அவை எல்லாவற்றுக்கும் உரிய இறைவன் ஒருவனே என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், அப்படிப் பலவிதமாக வர்ணிப்பதில் நமக்குப் பலவகையிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது. சாதாரண உணவுக்கும், உடைக்குமே பொருந்தக் கூடிய இந்த உணர்வு, உன்னதமான பக்தி உணர்வுக்கு மிகவும் பொருத்தமானதேயாகும்.
?ஆத்மாவே நம்மை இயக்குகிறது என்று சொல்லுகிறோம். ஆனால், மனிதன் இயங்கச் செய்யும் சக்தி மூளைப் பகுதியில் இருப்பதாக விஞ்ஞானம் சொல்லுகிறது. கடவுள் இதயத்தில் அமர்ந்திருப்பதாக நாம் சாஸ்திர நூல்களில் படிக்கிறோம். உண்மையில் நம்மை இயக்குவது எது? அது எங்கே இருக்கிறது?
– மதுசூதனன், அரக்கோணம்.
வேதாந்த நூல்கள் இதயம் என்று குறிப்பிடுவது, நம்முடைய மார்பில் இடதுபுறம் அமைந்திருப்பதாக நாம் விஞ்ஞான நூல்களில் படிக்கும் உறுப்பு அல்ல. ஆன்மிகம் குறிப்பிடும் இதயம் என்பது யோக நூல்களில் குறிப்பிடப்படும் வலது புற மார்புக்கு இரண்டு விரற்கட்டைக்கு அருகேயுள்ளது. நான் என்று உங்களை நீங்கள் சுட்டும்போது உங்களையும் அறியாமல் அந்த இடத்தை சொல்லிக் கொள்வதை கவனியுங்கள். அதுவே மனதின் உற்பத்தி ஸ்தானம், அதுவே எண்ணங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆனால், தொடர்ச்சியாக எண்ணங்கள் நம்மை அலைகழிக்கும்போது நம்மால் உணர முடியவில்லை. எண்ணங்கள் அடங்கும்போதுதான் அதை உணர முடியும். நம்முடைய எண்ணங்கள் அடங்கி ஓயும்போது, எல்லா புலன்களும் அடங்கிய நிலையில் உணரமுடியும். ஒரு சக்தி வாய்ந்த மின்சார பல்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து பிரகாசமாக ஒளி பொழியும்போது நமக்கு அந்த ஒளிதான் கண்ணுக்குப் புலப்படுகிறது. அதற்கு ஆதாரமான கம்பிகள் தெரிவதில்லை. விளக்கின் ஒளி அடங்கியதும் பல்பின் உள்ளே இருக்கும் நுட்பமான கம்பிகள் தெரிகின்றன. அவற்றிலிருந்து வரும் ஒளியே அவற்றை மறைத்து விடுகின்றன.
அதேபோல, நமது பல்வேறு ஆசைகளைத் தூண்டும் எண்ணங்கள் அலைமோதும் வேகத்தில், இவற்றை இயக்கும் பின்னணியான உண்மையான உணர்வு (Pure Consciousness) நமக்குத் தெரிவதில்லை. விளக்கொளியில் மற்ற யாவும் தெரியும்போது பல்பின் கம்பிகள் தெரியாமல் இருப்பதைப் போல, உலக உணர்வுகள் அவ்வளவையும் நாம் புரிந்து கொள்ள முடியும் போது, இந்த உண்மையான உணர்வை மட்டும் அறிய முடிவதில்லை. எண்ணங்கள் யாவும் ஒடுங்கிய நிலையே சச்சிதானந்த நிலை. அதில் நாம் நமக்குள்ளே இறைவன் இருப்பதை உணரலாம். இதை உடலில் ஒரு பகுதியாகவோ, உறுப்பாகவோ நாம் அடையாளம் காணமுடியாது. சூட்சுமமாக ஒரு இடத்தை குறிப்பிட்டு இங்கு இருக்கிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். அதுவுமே தசையால் ஆனது அல்ல. அதனாலேயே இதயம் என்றும் இருதயம் அதாவது ஹ்ருதயம் என்கிறார்கள்.
?அத்வைதம் என்றால் என்ன? அது நமக்கு எப்படி நிரந்தரமான அமைதியைக் கொடுக்கிறது?
– ராஜேஷ் , பெங்களூரு.
நமக்குப் பல பிறவிகள் உண்டாகின்றன. அந்தப் பிறவிகளுக்கெல்லாம் காரணம் என்ன? உடம்பு எதனால் வருகிறது? முன் ஜென்மத்தில் பண்ணிய பாப புண்ணிய பலன்களை நாம் அனுபவிக்க வேண்டும். ஆத்மாவால் பாப புண்ணியங்களை அனுபவிக்க முடியாது. ஆத்மாவை நெருப்பில் சுட முடியாது. ஆகையால் கர்மாவை அனுபவிப்பதானால் ஓர் உடம்பு வேண்டி இருக்கிறது. நாம் செய்த பாப புண்ணிய பலனாகக் கடவுள் நமக்கு உடம்பைக் கொடுத்து, அதையே ‘நான்’ என்று நினைக்கச் செய்து கர்மாவை அனுபவிக்க வைக்கிறார்.
பாப புண்ணியத்துக்குக் காரணம் என்ன? அவற்றைச் செய்யாமல் நிறுத்த இஷ்டமிருக்கிறது. ஆனால் முடியவில்லை. வீட்டுக் கூரையிலே திரும்பக் திரும்பக் கரையான் புற்று உண்டாகிறது என்றால் மேலெழுந்தவாரியாக அந்தக் கூட்டைப் பெயர்த்தால் முடியுமா? அதற்குக் மூலகாரணமான தாய்பூச்சியை அகற்றினால் தான் மீண்டும் புற்று எழும்பாமல் இருக்கும். அதுபோல, பாபத்துக்கு மூலகாரணத்தை அறிந்து அதையே அழிக்க வேண்டும். பாபத்துக்கு மூலம் என்ன? கெட்டகாரியத்தினுடைய பலன்தான் பாபம். கெட்டகாரியம் தான் பாபமும்.
கெட்டகாரியம் எதனால் செய்கிறோம்? நமக்கு ஒரு வஸ்து வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை அடைவதற்குக் குறுக்கு வழிகளில் போகிறோம். அது பாபம். அதாவது, பாபம் செய்யக் காரணம் ஆசை. ஒரு வஸ்து அழகாக இருந்தால் ஆசை ஊண்டாகிறது. நல்ல பதார்த்தங்களைக் கண்டால் நமக்கு வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அது நல்லது என்ற இச்சை உண்டாகிறது. அந்த இச்சையைப் பூர்த்தி பண்ணக் காரியங்கள் செய்கிறோம். இந்திரியங்கள் ஒன்றை அழகானதென்று அறிவதுதான் ஆசைக்குக் காரணம்.
துவேஷமும் ஆசையும் நமக்கு அந்நியமாக, நம்மைவிட வேறாக, இரண்டாவதாக இருக்கும் வஸ்துக்களிடத்தில் தான் உண்டாகின்றன. நம்மிடத்திலேயேதான் நமக்கு ஆசையும் உண்டாவதில்லை; வெறுப்பும் உண்டாவதில்லை. இப்போது ‘வேறு’ என்று இருக்கும் பொருட்களிடத்தில் ஆசை உண்டாவதால், அவற்றையும் நாமாகவே பண்ணிவிட்டால் ஆசை உண்டாகாது அல்லவா….? ஆசை இல்லாவிட்டால் கெட்டப் பிரயத்தனம் இல்லை. அதனால் பாபம் இல்லை. பாபம் இல்லாதபோது தேகமும் இல்லை. அது இல்லாவிட்டால் துக்கம், கவலைகள் எதுவும் இல்லை. வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பிரயத்தனம் பண்ணினாலும் கிடைக்காத மன அமைதி, இப்படி நமக்கு வேறாக-இரண்டாவது இல்லை என்று ஆக்கிக் கொள்ளும்போது, நமக்குக் கிடைத்துவிடுகிறது. இதுவே ‘இரண்டாவது இல்லை’ என்று நாம் உறுதிப்படுத்திக் கொள்ளும். அத்வைதம். துவைதம் என்றால் இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டு அல்ல என்று பொருள்.
