திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

திருவானைக்காவல்

பகுதி 1

காவிரி வடகரைத் தலமான திருவானைக்காவல், பஞ்சபூதத் தலங்களுள் ‘அப்பு’ [நீர்] தலமாகப் போற்றப் படுகிறது. அருணகிரிநாதரும், தேவார மூவரும் ‘திரு ஆனைக்கா’ என்றே குறிப்பிடுகின்றனர்.

கா = சோலை. முன்பு யானைகள் நிறைந்த சோலையாகத் திகழ்ந்ததால்,
திரு ஆனைக்கா என்று பெயர் பெற்றது.
‘துங்க கஜாரணியம்’ என்பார் அருணகிரியார்.

“அனித்தமான” எனத் தொடங்கும் ஆனைக்கா திருப்புகழில்,
“மனித்தராதி சோணாடு தழைக்க மேவு காவேரி,
மகப்ரவாக பானீயம் அலைமோதும்,
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோகம் ஆள்வாரும்,
மதித்த சாமியே தேவர் பெருமாளே”
– என்று பாடுகிறார்.

[“மனிதர் முதலான அனைத்துஉயிர்களும் சோழநாடும் தழைக்கும் பொருட்டு பெருகி ஓடும் காவேரியின் பெருத்த அலைகளால் மோதப்படுவதும், நறுமணம் கமழும் நல்ல சோலைகள் சூழப்பெற்றதுமான திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள, எல்லா உலகங்களையும் ஆள்கின்ற சிவபெருமான் போற்றுகின்ற தேவர் பெருமாளே”] என்று சிவகுமரனையும் சேர்த்துப் போற்றுகிறார். அன்னை அகிலாண்டேஸ்வரியுடனாகிய ஜம்புகேஸ்வரர் உறையும் திருத்தலமாகிய திருவானைக்கா பற்றிய புராணக் குறிப்புகளை இனிப் பார்ப்போம்.

ஆனைக்கா இறைவர் – ஜம்புகேஸ்வரர். தலமும் ஜம்புகேஸ்வரம் எனப்படுகிறது. இறைவன், ஜம்பு எனப்படும் வெண் நாவல் மரத்தின் கீழ் தோன்றியதால் இப்பெயர் அமைந்தது. இத்தலத்தில், முற்காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடு இருந்தது. இக்காட்டில், சம்பு முனிவர் சிவனை வணங்கித் தவம் செய்து வந்தார். அவர் எதிரே ஒரு வெண் நாவல் பழம் விழுந்தது. அதை சிவனாருக்கு நிவேதனமாகப் படைத்துவிட்டு, பழத்தையும் கொட்டையையும் சேர்த்து விழுங்கிவிட்டார். இறைவன் திருவிளையாட்டால் அது முளைத்து முனிவர் தலை வழியே வெளிவந்து, முழு மரமாக மாறியது. இறைவன், இம்மரத்தடியில் குடிகொண்டு, முனிவரின் பூஜைகளை ஏற்றதால், ஜம்புலிங்கம் என்று பெயர் பெற்றார். அருணகிரியார், அம்பிகையை “வெண் நாவல் அரசு மனை வஞ்சி” என்று அழகுற அழைக்கிறார். ‘ஆலம் வைத்த’ என வரும் பாடலில்,

“ஏழிசைத் தமிழில் பயனுற்ற
வெணாவலுற்றடியில் பயில் உத்தம
ஈசன் முக்கண் நிருத்தன்”
– என்று குறிப்பிடுகிறார்.

[ஏழிசைத் தமிழாகிய தேவாரப் பாடல் களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் விளங்குகின்ற உத்தமராகிய சிவபெருமான்] க்ஷேத்திரக் கோவைத் திருப்புகழில், ‘செம்புகேசுரம்’ (ஜம்புகேசுவரம்) என்ற பெயரில் தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ கணங்களுள் இருவரான புஷ்பவந்தன், மாலியவான் என்போர் சிவத்தொண்டில் இடையறாது ஈடுபட்டிருந்தனர். பொறாமை காரணமாக ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். இதன் விளைவாக, மறுபிறப்பில் புஷ்பவந்தன் யானையாகவும், மாலியவான் சிலந்தியாகவும் பிறந்தனர். வெண் நாவல் மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தை இருவருமே தீவிரமாகப் பூஜை செய்தனர். யானை, காவிரியில் தினந்தோறும் நீராடிவிட்டு, துதிக்கை நிறைய நீர் முகந்து சென்று சிவலிங்கத்திற்கு அன்புடன் அபிஷேகம் செய்தது.

மலர்கள் கொய்து வந்து அர்ச்சனையும் செய்தது. பின்னர் வந்த சிலந்தி, லிங்கத்தின் மீது மலர்ச்சருகுகள் கிடப்பது கண்டு அவற்றைச் சுத்தம் செய்துவிட்டு, தன் வாய் எச்சில் நூலால் (வலை) பந்தலிட்டு, கோபுரம் போலவும், கோயில் போலவும் அமைத்து, சிவனை வணங்கியது. [‘உரைக்காரிகை’ எனத் தொடங்கும் திருப்புகழில், “திரைக்காவிரிக்கே கரைக்கானகத்தே சிவத்யானமுற்றோர் சிலந்தி நூல் செய் திருக்காவணத்தே இருப்பார்” என்று பாடுகிறார் அருணகிரியார்]லிங்கத்தின் மேல் சிலந்தி வலையைக் கண்டு, “வாய் எச்சிலால் சிவனை வணங்குவதா?” என்று சிலந்தி மேல் கோபம் கொண்ட யானை, அப்பந்தலை நீக்கி, வழக்கம் போல் காவிரி நீராலும் மலர்களாலும் பூசித்தது.

மறுதினம் தன் பந்தல் அழிக்கப்பட்டு, மீண்டும் சருகுகள் விழுந்து கிடப்பது கண்டு வருத்தமுற்று மீண்டும் வாய் நூலினால் பந்தல் இட்டது சிலந்தி. தினமும் யானையும் சிலந்தியும் மாறி மாறி இவ்வாறு செய்து வந்தன. ஒரு நாள், தான் கட்டும் நூல், கோயிலை அழிக்கும் யானையை, ஒளிந்திருந்து கண்ட சிலந்தி, அதன் மேல் கோபமுற்று, அந்த யானையின் தும்பிக்கையின் வழியே உள்ளே சென்று குடைந்தது.

சிலந்தியின் கடியைத் தாங்காமல், நிலத்தில் வீழ்ந்து யானை புரண்டபோது, சிலந்தியோடு சேர்ந்து அதுவும் மடிந்தது. இறந்த யானை சிவகணம் ஆயிற்று. சிலந்தி, சோழர் குல இளவரசனாகப் பிறந்தது. கருவாயிலிருந்து சற்று காலம் கடந்து பிறந்ததனால் குழந்தையின் கண் மிகவும் சிவந்திருந்தது.

எனவே இளவரசன் கோச் செங்கட்சோழன் எனப்பட்டான். முற்பிறப்பு வாசனையால், இளவரசன், சிவபெருமானுக்கு யானை கருவறைக்குள் புகாதபடி எழுபது மாடக் கோயில்கள் கட்டினான். அவற்றுள் ஒன்று திருவானைக்கா. [ஆக்கூர் (தான்தோன்றி மடம்), குடவாயில், மருகல், உறையூர் (மூக்கீச்சரம்), பழையாறை (வடதளி) இவை ஒரு சில உதாரணங்கள்].

கருவறையின் குறுகிய வாயிலை அடைகிறோம். மூலவர் இருக்குமிடம், காவிரி – கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட தலத்தில், தரை மட்டத்திற்கும் கீழே உள்ளதால், உள்ளே நீர்க்கசிவு இருந்து கொண்டே இருக்கும். (வெள்ளம் பெருகி வரும் காலத்தில் நீரை இறைக்க, தனிக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்). அம்பிகை நீரையே திரட்டி லிங்கம் அமைத்து சிவனாரைப் பூஜித்ததால், சுவாமியின் திருநாமம் “செழுநீர்த்திரள்” என்றும் வழங்கப்படுகிறது.

இறைவன் சந்நதிக்கு எதிரே ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் ஒன்று மேற்குச் சுவரில் உள்ளது. இவற்றின் வழியே இறைவனைத் தரிசிப்பவர்கள் நவதீர்த்தங்களில் முழுகிய பலனைப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. சாளரம், ‘சாலகம்’ என்ற பெயர் உண்டு. ‘திருச்சாலகச் சோதி தம்பிரானே’ என்கிறார் அருணகிரியார்.

“அந்தண் மடவார் அனவரதம் சிந்தித்துச்
சேவிக்கும் எல்லைத் திருச்சாலக நலமும்”
என்றும்
“பரமன் சிறக்கும் திருச்சாலகத்தொளிர் தேவேசன்
கறைக்கண்டன் என்னானைக் கன்று”
– என்றும் குறிப்பிடுகிறது திருவானைக்கா உலா.

‘ஆனைக்கா அண்ணல்’ என்று இறைவனை அன்புடன் அழைக்கிறார் சம்பந்தப் பெருமான். “ஆனைக்காவில் அண்ணலை வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே” என்கிறார். ஆனைக்கா திருப்புகழில், ‘சிவதரும ஸ்தாபகர்’ என்று புகழப் படும் சம்பந்தப் பெருமானை, ‘அறத்தாய்’ என்றழைக்கிறார் அருணகிரியார்.

“தமிழ்க் கூடலிற் போய் அனற்கே புனற்கே
வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர் படைத்தாய்”

[தமிழ் வளர்ந்த மதுரையம்பதிக்குச் சென்று, பதிகம் எழுதிய ஏட்டினை, நெருப்பிலும் நீரிலும் இட்டு, அனல் வாதம், புனல் வாதம் செய்த அறப்பெருந்தலைவன் என்று புகழப்பெற்றவரே]
நீலகண்ட யாழ்ப்பாணர், ஞானசம்பந்தர் அருளிய பாக்களை யாழில் இட்டு, பாக்களுக்கேற்ப சங்கீத யாழை இசைத்தார் என்றும் குறிப்பிடுகிறார் அருணகிரியார்.

“செந்தமிழ்ப் பாணப்பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென் திருவானைக்கா உறை பெருமாளே”
– என்கிறார். [தென் – அழகிய]

ஆனைக்கா அண்ணலுக்கு மிக வித்தியாசமான ஒரு பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தேவி அப்புலிங்கம் நிறுவி இறைவனை வழிபட்ட ஐதிகத்தை ஒட்டி, உச்சி கால வழிபாடு நடத்தவரும் அர்ச்சகர், அகிலாண்டேஸ்வரி சந்நதியிலிருந்து தேவி போன்றே கிரீடம் தரித்து, புடவை உடுத்தி, ருத்ராக்ஷ மாலை அணிந்து, பூவும் நீரும் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் இறைவன் சந்நதிக்கு வருகிறார். மூன்றாம் பிராகாரத்தை வலம் வந்து இறைவன் சந்நதிக்குள் சென்று தன்னை அம்பிகையாகப் பாவித்துப் பூஜை செய்கிறார்.

தொடர்ந்து கோ பூஜை நடக்கிறது. அகிலாண்டேஸ்வரி ஆதியில் மிக உக்ரமான சக்தியாகக் காட்சி அளித்தமையால், பக்தர்கள் கோயில் உள்ளே செல்லாமல் வெளியிலிருந்தே வழிபாடு செய்து வந்தனர். ஆதி சங்கரர் இந்நிலையை மாற்றி, அன்னையை சாந்த சொரூபிணி ஆக்கும் பொருட்டு, அவள் எதிரில் பிரசன்ன கணபதியைப் பிரதிஷ்டை செய்தார்.

அத்துடன் நவரத்தினங்கள் பதித்த, ஸ்ரீசக்ர, சிவ சக்ர யந்திரங்கள் அமைத்த இரு தாடங்கங்களைச் செய்து, அவற்றை அன்னையின் செவிகளில் அணிவித்தார். ‘தாடங்க ரூபிணி’, ‘தாடங்க நாயகி’ எனும் திருநாமங்களும் அன்னைக்கு உண்டு. இத்தாடங்கங்களின் மகிமையாலேயே இறைவன், ஆலகால விஷத்தை அருந்தியும் ஜீவித்திருப்பதாக சௌந்தர்ய லஹரியில் கூறும் ஆதி சங்கரர், “தவ ஜனனி தாடங்க மஹிமா” என்கிறார்.

ஆதி சங்கரர், இதே போன்று, காஞ்சி காமாட்சி கோயிலிலும், ஸ்ரீ சக்ரப் பிரதிஷ்டை செய்தார் என்று முன்பு பார்த்தோம். “ஸ்ரீ மாத சிவ வாமாங்கே” எனத் தொடங்கும் கீர்த்தனையில், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், “ஸ்ரீ சக்ர ரூப தாடங்கே” என்று குறிப்பிடுகிறார். தேவிக்கு அணிவிக்கப்படும் தாடங்கங்கள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படுவதை “ஜீரணோத்தாரணம்” என்பர். ஆதி சங்கரர் வழியில் வந்த காஞ்சி ஆச்சாரியார்களே இப்பணியைச் செய்வது வழக்கம். தாடங்கங்கள், கைதேர்ந்த பொற்கொல்லர்களால் கோயில் வளாகத்திற்குள்ளேயே வைத்துப் பழுதுபார்க்கப்படுகின்றன.

1908, 1923 ஆம் ஆண்டுகளில், காஞ்சி மஹாபெரியவராலும், 1992 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளாலும், சமீபத்தில் [16-02-2025] ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களாலும், தாடங்கங்கள் ஜீரணோத்தாரணம் செய்யப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன. பிரசன்ன விநாயகரை வணங்கி, ஆனைக்காவில் அருணகிரிநாதர் பாடிய, அழகிய விநாயகர் துதி ஒன்றைச் சமர்ப்பிக்கிறோம்.

“குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு
அங்குச பாச கர ப்ரசித்தன் ஓர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்றறுப் பவன்
எங்கள் விநாயகன் நக்கர்
பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப் பிளை இளையோனே”
அருணகிரியார் சாக்தரோ என்று
வியக்குமளவு அகிலாண்டேஸ்வரியின் பெருமையைப் பல பாக்களிலும் வர்ணிக்கிறார்.

“கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநகர் உறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்ற தாய் உமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி…”

[பகைவர்களது முப்புரங்கள் அழிந்து தூளாகுமாறு மேரு மலையை வில்லாக வளைத்த நாரணி, (மாதொருபாகனின் இடக்கரம் உமைக்குரியது; ஆதலால் சிவனார் வில்லை வளைத்த போது, பார்வதி தேவியே மேருவை வளைத்தார் என்று கூறுகிறார்), சிலம்பு அணிந்த மலைமகள், காஞ்சியில் வீற்றிருக்கும் காமாட்சி, மகிழ்ச்சியுடைய மயில் போன்றவள், சிவனாருடன் வாழும் அழகி, கடலையே ஆடையாக உடுத்த இவ்வுலகை ஈன்ற அன்னை, உமை, கரிவனம் எனப்படும் திருவானைக்காவில் வாழும் அகிலாண்ட நாயகி]

[“பரிமள மிகவுள” எனத் தொடங்கும் பாடல்]
(அடுத்த இதழில்)

Related Stories: