என்றென்றும் அன்புடன் 13
நீங்கள் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறீர்களா அல்லது வேறு யாரேனும் தீர்மானிக்கிறார்களா?
ஒருவரின் வாழ்க்கை அவர் பழகும் ஐந்து நபர்களின் சராசரி வாழ்க்கையைச் சார்ந்தே இருக்கிறது.நாம் யாரோடு இருக்கிறோம். எவரோடு பழகுகிறோம். நம்முடைய நட்பு வட்டங்கள், நம் சூழலே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, நாம் சிறிய விஷயங்களில் சிக்கி, எதிர்மறையான எண்ணங்கள் இருப்பவர்கள், மனதில் ஒரு நொய்மையுடன் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிட்டால், படுகுழியில் வீழ்வது நிச்சயம்.அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய புகாருடன் திரிவார்கள். அவர்களுடைய திருப்தியின்மை நம்மையும் தொற்றிக் கொள்ளும். சிலசமயங்களில் நாம் முட்டாளாக்கப்படுவோம். ஏனென்றால், இந்த மனோநிலையில் இருப்பவர்கள், நன்மை நடந்தால் அதை நம்முடன் பெரிதாகப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய அதிருப்தியை சொல்லவும், ஏமாற்றங்களையும் கோபத்தையும் பகிர்ந்து கொள்ளவே வைத்திருப்பார்கள்.
மஹாபாரதம் இரு வேறு மனநிலையின் போராட்டமே. ஒரே குடும்பத்தின் வாரிசான பாண்டுவும் திருதராஷ்டிரனும் அவரவர்களின் மனநிலையின் பிரதிபலிப்பே பாரத போர்.பாண்டு ஒவ்வொரு தடைகளையும் தன்னுடைய வாய்ப்பாய் மாற்றிக் கொண்டான். வாழ்க்கையை இனிமையாக வைத்துக் கொள்ளவும், குரு வம்சத்தின் வளர்ச்சியை பற்றிய சிந்தனைகளில் இருந்தான். தவறு இழைக்கும் பொழுது அதற்கு பொறுப்பேற்று ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினான். பொறாமை கொள்ளாமல் தன் குடும்பம் ஒற்றுமையாய் இருக்க குந்தியின் வரத்தை மாதுரியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டினான். திருதராஷ்டிரனுக்கோ அனைத்தும் இருந்தும், வாழ்க்கையைப்பற்றிய கசப்பு மேலோங்கி இருந்தது. மனதில் ஒரு வறட்சியும், வெறுப்பும் மண்டிக் கிடந்தது.
பாண்டுவின் குணத்தை அர்ஜுனனிடம் பார்க்க முடியும். ஒருசமயம் தருமரிடம் தவறு இழைத்த பொழுது, அந்தத் தவறுக்கு பொறுப்பேற்று சிலகாலம் கானகத்துக்குச் சென்றான். அங்கு இருக்கும் பொழுது அசுர பயிற்சி மேற்கொண்டான். தடைகளை வாய்ப்பாக மாற்றிக் கொண்டான். அவனுடைய மனநிலைக்கேற்ற நண்பர்களை ஈர்த்தான். கண்ணன் நண்பன் ஆனான்.காந்தாரியும் திருதராஷ்டிரனும் அவர்களின் வாழ்க்கையைப்பற்றி நொந்து கொண்டே இருந்தனர். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமல் இருந்தனர். நூறு குழந்தைகள் இருந்தும் நம்பிக்கை இல்லை. சந்தோஷம் இல்லை. அவர்களின் தவறுகளை பிறர் இழைக்கும் அநீதிகளாக கற்பனை செய்து கொண்டனர்.
வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிக்க முடியவில்லை குழந்தைகளும் கை மீறி போயினர்.திருதராஷ்டிரனின் குணம் துரியோதனனுக்குள் இறங்கியது. கோவமும், வெறுப்பும், அதிருப்தியும் மிஞ்சியது. சேர்க்கையும் அதன்படியே என்றும் வாழ்க்கையை பற்றிய குறை இருந்த கர்ணனே நண்பனாக வாய்த்தான்.துரியோதனின் பேராசை, பாண்டவர்களுக்கு ஐந்து வீடுகள் கூட தரவிடாது தடுத்தது.
பாண்டவர்கள் எந்தவொரு நேரத்திலும் முயற்சியை கைவிடவில்லை. அதற்கு ஏற்றார் போல் கண்ணனும், அவர்களை உற்சாகப்படுத்தியபடி இருந்தான். பாண்டவர்களுக்கு உறவுகளின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. வாழ்க்கையின்மேல் பெருமதிப்பு இருந்தது. துரியோதனன் அவனுக்குக் கிடைத்த வாழ்க்கையின் மதிப்பு தெரியாமல் போட்டி போடுவதிலும், பொறாமை கொள்வதிலும் கழித்தான். கர்ணனுடன் நட்பு கொண்டவனுக்கு கர்ணனின் கொடை குணம் ஒட்டவில்லை. ஏனென்றால், அவன்உறவுகளின் மீது பெரும் அக்கறை கொண்டு இருக்கவில்லை.
Neuro lingustic program என்று ஒன்று உண்டு. அதிலுள்ள பல கோட்பாடுகளில் முக்கியமானது, நாம் பிறரிடம் காணும் குணமானது நம்மிடம் ஆழ்ந்து இருக்கும் குணமே.துரோணர் ஒருநாள் துரியோதனனை அழைத்து அந்த ஊரில் அவனைவிட சிறப்பான குணங்கள் உள்ளவரை அழைத்து வரச் சொன்னார். வெகுநேரம் கழித்து வந்த துரியோதனன், எல்லோரிடமும் ஏதோ ஒரு குறை இருப்பதாகக் கூறினான்.
தருமரிடம் அவரைவிட கீழான குணம் இருக்கும் நபரை அழைத்து வரச் சொன்னார். தருமர் துரோணரிடம், “நான் இன்று முழுவதும் தேடினேன். அனைவரும் என்னை விட சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். யாரிடமும் எந்தக் குறையும் இருப்பதாக தெரியவில்லை.”நாம் கண்ணாடி போன்றவர்கள் என்றும் நம்மைச் சூழ்ந்து இருப்பவர்களை பிரதிபலிப்போம். நம்முடன் இருப்பவர்களின் மொழி, குணம், உடல் மொழி நம்மை வெகுவாக பாதிக்கும்.
நாம் நம்மை கூர்ந்து கவனித்து சுய மதிப்பீடு செய்தால், நம் சுற்றம் எப்படி இருக்கிறது? நாம் எதனால் பாதிக்கப்படுகிறோம்? நம் குறிக்கோள் நம்முடையதா அல்லது நம்முடன் இருப்பவர்களின் குறிக்கோளை நாம் நம்மை அறியாமல் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமா? வாழ்க்கையை பற்றிய நம்பிக்கை மாறி இருக்கிறதா?இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால், நாம் நம் வாழ்க்கையை வாழ்கிறோமா அல்லது நம்மைச்சுற்றி இருப்பவர்களை நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறார்களா என்பது தெரிந்து விடும்.
(தொடரும்)
ரம்யா வாசுதேவன்
