நெல் மலை தந்த ஈசன் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை

அமைவிடம்: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குவளை, ஆன்மிக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மிக முக்கியமான ஒரு தலமாகும். காவிரி தென்கரைத் தலங்களில் 123-வது சிவத்தலமான இக்கோயில், அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரியது.

ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணி

இந்த ஆலயம் வரலாற்று ரீதியாக கோசெங்கேட் சோழனால் கட்டப்பட்ட ஒரு மாடக் கோயில் எனக்கருதப்படுகின்றது. சோழர் காலத்திற்குப் பிறகு, பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் இக்கோயிலின் திருப்பணிகளில் ஆர்வம் காட்டி, இதனை இன்றைய நிலைக்கு உயர்த்தினர்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் சோழர் (ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன்) மற்றும் பாண்டியர் (ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன்) காலத்தைச் சேர்ந்த 19 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் இறைவன், `திருக்கோளிலி உடைய நாயனார்’ என்றும், தியாகேசர் `அவனிவிடங்கத் தியாகர்’ என்றும் போற்றப்படுகின்றனர்.

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் (கோளிலிநாதர்). இங்கு இறைவன் வெண் மணலால் ஆன சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
இறைவி: வண்டமர் பூங்குழலி.

சப்த விடங்கத் தலம்

ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான இங்குள்ள தியாகராஜர் `அவனிவிடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது நடனம் `பிருங்க நடனம்’ (வண்டு மலரைக் குடைந்து செல்வது போல் அசைந்து ஆடும் பாணியைக் கொண்டது) என்று சிறப்பிக்கப்படுகிறது.

சுந்தரரும் நெல் மகோற்சவமும் `நெல் மலை தந்த ஈசன்’

இத்தலத்தின் மிக முக்கியமான வரலாறு சுந்தரமூர்த்தி நாயனாருடன் தொடர்புடையது. சுந்தரரும் அவரது மனைவி பரவை நாச்சியாரும் சிவனடியார்களுக்கு உணவளித்து வந்தனர். இதற்காக குண்டையூர் கிழார் என்பவர் நெல் வழங்கி வந்தார். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டபோது, இறைவனின் அருளால் குண்டையூர் கிழாரின் இல்லத்தில் நெல் மலை போல் குவிந்தது. குவிந்திருந்த அந்தப் பெரும் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, சுந்தரர் திருக்குவளை இறைவனிடம் பதிகம் பாடினார்:

“….கோளிலி எம்பெரு மான் குண்டையூர்ச் சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே’’

சுந்தரரின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், தனது பூதகணங்களை அனுப்பி, ஒரே இரவில் அந்த நெல் முழுவதையும் திருவாரூர் முழுவதும் நிறையச் செய்தார். இவ்வரலாற்றைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 5 நாட்கள் “நெல் மகோற்சவம்’’ சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மகத்தன்று இறைவன் குண்டையூருக்குப் புறப்படும் நிகழ்வும், பக்தர்கள் பூதகணங்களைப் போல வேடமணிந்து நெல் அள்ளும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

சிற்ப சிறப்புகள்

வெளிப்புற கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, அர்த்த நாரீஸ்வரர், உமா மகேஸ்வரர், பிச்சாண்டார் மற்றும் துர்க்கை ஆகியோரின் எழில் சிற்பங்கள் உள்ளன. இரண்டாம் கோபுர மதிலில் பிரம்மன் பூஜிப்பது, பஞ்சபாண்டவர்கள் வழிபடுவது போன்ற அரிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மது ஜெகதீஷ்

 

Related Stories: