மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்

மாணிக்கவாசகர் குரு பூஜை - 13.7.2021

மதுரையம்பதியை ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டியன், ஒருமுறை நல்ல குதிரைகளை வாங்கி வந்து படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தம்முடைய அமைச்சராக இருந்த வாதவூரார் என்பவரிடம், குதிரைக்கான விலையைப் பொன்மூட்டையாகக் கொடுத்து அனுப்பினான். குதிரையை வாங்கிவர, வடக்கு நோக்கிப் புறப்பட்டார் வாதவூரார். அறந்தாங்கிக்குப் பக்கத்தில் ஆவுடையார்கோயில் என்று ஒரு தலம் இருக்கிறது. திருப்பெருந்துறை என்பார்கள்.

அங்கே ஒரு குருந்த மரம். அதனடியில் ஒரு சிவஞானச்செல்வர் அமர்ந்திருந்தார். அமர்ந்திருந்தார் என்று சொல்வது கூட சரியல்ல. அவருடைய நிலை, யாரோ ஒருவரின் வருகைக்காகக் காத்திருந்தது போல இருந்தது. அந்தப் பக்கம் பலர் போனார்கள்; பலர் வந்தார்கள். அவர்கள் இவரைப் பார்த்தாலும், அவர்களைக் குறித்து இவர் கவலைப்படவில்லை. யாருக்கோ காத்திருப்பதைப்போல சாலையைப் பார்ப்பதும், பின் தவம் செய்வதுபோல கண்ணை மூடி அமர்வதும் என இருந்தார்.

சித்தம் ஒடுங்கிய சிவனடியாருக்குக் கூட பதட்டம் இருக்குமா? இருந்ததே!அப்பொழுதுதான் குதிரை வாங்க வந்த வாதவூரார் இவரைக்  கடக்க முயன்றார். அதுவரை அரசனுக்குரிய குதிரையை வாங்குவதிலேயே குறியாக இருந்தவர், ஏதோ ஒரு விஷயம் தன்னைத்  தடுப்பதை உணர்ந்தார். குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த சிவனடியாரை அவரால் கடந்து செல்ல முடியவில்லை. அவர்தான் இவருக்காகவே காத்திருக்கிறாரே! இப்பொழுது சிவனடியாரின் பார்வை கூர்மையாக வாதவூரார் மேல் சென்றது.

அந்தப் பார்வையை அரசனுக்கு அமைச்சராக பெரும் பதவியில் இருந்த வாதவூராரால் தவிர்க்க முடியவில்லை. ஒரு சில வினாடிகள்தான் சிவனடியார் வாதவூராரைப் பார்த்தார். மலை உச்சியிலிருந்து ஒரு கல் சடாரென கீழேவிழுவதுபோல தன்னுடைய மனம், எண்ணங்கள், வாழ்வின் நோக்கங்கள், எல்லாம் சடசடவென சரிந்து, சிவனடியாரோடு ஒடுங்கி நிற்பதுபோல உணர்ந்தார். அவருடைய உருவத்தையும் முகப் பொலிவையும் கண்டு வணங்கினார். அவர் கையில் ஒரு ஏடு வைத்து படித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, “இது என்ன நூல்?” என்று விசாரித்தார்.

அப்பொழுது அந்த ஞானி சொன்னார், “இது சிவஞானபோதம்”.அடுத்த நிமிடம் அந்த வார்த்தை வாதவூராரின் நெஞ்சில் நிறைந்து, அந்நூலின் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் பிறந்தது. உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும், இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்தார். சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகும் எண்ணம் சிவனருளால் பிறந்தது. குதிரை வாங்கி வரச் சொன்ன வேலையை மறந்தார். சிவஞானத்தை அவருக்குப் போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான். ஞானியின் சீடராக அங்கேயே தங்கியதோடு தாம் கொண்டு வந்த பொன்னைக்கொண்டு ஒரு ஆலயம் கட்டத் துவங்கினார்.

மன்னனுக்கு இந்தச்  செய்தி சென்றது. குதிரையை வாங்கி வரச் சொல்லி நாளாகியும் வரவில்லை; பணத்தையும் செலவழித்து விட்டார் என்ற கோபத்தில் அவரைக் கைது செய்து அழைத்து வருமாறு ஆணையிடுகிறான்.இதுவரை இந்த விஷயத்தையே  மறந்திருந்த வாதவூரார், சிவபிரானிடம் சரணடைய, சிவபிரான், “விரைவில் குதிரையுடன் வருவேன் என்று செய்தி சொல்லி அனுப்பு” என்று சொல்ல, அப்படியே வாதவூரார் அரசப் பிரதிநிதிகளிடம் சொல்லுகின்றார்.

ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் சிவபிரானே சிவகணங்களை குதிரைகள் ஆக்கி, பாண்டிய நாட்டுக்கு ஓட்டிச் செல்லுகின்றார். மன்னன் மகிழ்கின்றான். ஆனால், அன்று இரவே குதிரைகள் எல்லாம் நரிகளாகி மன்னனுடைய மற்ற குதிரைகளையும் கடித்துவிட்டுத் தப்பி விடுகின்றன.இதை அறிந்த மன்னன் மிகுந்த கோபம் கொண்டு வாதவூராரை கைதுசெய்து, வைகை ஆற்றின் நடுவில் சுடுமணலில் ஒரு பாறையில் கட்டி வைக்கிறான்.

சிவபெருமான் வைகையில் வெள்ளத்தை வரச்செய்து, காவலுக்கு நின்ற வீரர்களை ஓடச்  செய்து மணிவாசகரைக் காப்பாற்றுகின்றார். சிவபெருமான் பேரருள் பெற்றவர் மணிவாசகர் என்ற உண்மையை உணர்ந்த மன்னன், மணிவாசகரை விடுவித்து தொடர்ந்து தனக்கு அமைச்சராக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றான். அதனை ஏற்றுக் கொள்ளாத மணிவாசகர் ஆன்மிகக் கோலம் பூண்டு தில்லைக்கு வருகின்றார். சிவபெருமானை பலப்பல பாடல்களால் துதிக்கின்றார். இவர் கூறும் பாடல்களை சிவபெருமானே ஒரு வேதியர் வேடத்தில் வந்து எழுதிக் கொண்டாராம்.

இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்ட, வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் ‘மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. இவருடைய பெருமையை உணர்ந்த தில்லை வாழ் அந்தணர்கள் மணிவாசகரின் பாடல்களைப் போற்றுகின்றனர்.

ஒரு நாள் ,திருவாசகத்தின் சாரமான பொருள் எது? என்று மணிவாசகரிடம் கேட்க, மணிவாசகர் சற்றும் தயங்காது, “இதோ அம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றானே அவன்தான்” என்று சொல்லி, பஞ்சாட்சரபடிகளைத் தாண்டி, உள்ளே நுழைந்து, சிவபெருமானோடு ஜோதியில் கலந்தார் என்பது வரலாறு.

தில்லை பாதி; திருவாசகம் பாதி அல்லவா!

இது நடந்தது ஆனி மகத்தில். 32 ஆண்டுகளே வாழ்ந்து, சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு. மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க, இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்ற பழமொழி இன்றும் வழங்கப் பெற்று வருகிறது.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக மாணிக்கவாசகரின் பாடல்கள் தொகுக்கப் பெற்றன. இவர் தன்னைத் தலைவியாக நினைத்துக்கொண்டு சிவபெருமானைத்தலைவனாக எண்ணிப்பாடிய அகப்பொருட்பாடல்கள் திருக்கோவையார் என்ற நூலாகத் தொகுக்கப் பெற்றது. திருவாசகம் 51 தலைப்புகளைக் கொண்ட பதிகங்களில் 659 பாடல்களைக்

கொண்டதாகும். திருவாசகத்தில் உள்ள பதிகங்களில் 10 பாடல்கள் அமைந்த பதிகங்களும் உண்டு. பத்திற்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட பதிகங்களும் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திற்கும் உள்ள தலைப்புகள் பதிகத்தில் அமைந்துள்ளசொற்றொடரையோ, பொருட் பகுதியையோ அடிப்படையாகக் கொண்டவையாகும். திருவாசகத்தில் மகளிர் விளையாட்டுகள் பல குறிக்கப்பெற்று அவற்றின் மூலமாக இறைவனின் பெருமைகள் கூறப்பெறுகின்றன.

திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருப்பொன்னூசல் ஆகிய திருப் பதிகங்கள் சிறுமியர் அல்லது மகளிர் விளையாட்டுகளின் அமைப்பைப் பெற்று இறைவனுடைய புகழைப் போற்றுகின்ற பதிகங்களாகும்.

அதுபோலப் பத்து என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடும் பதிகங்களும் உண்டு.அன்னைப் பத்து, குயில்பத்து, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, குழைத்த பத்து, அச்சப்பத்து, பிடித்தபத்து, அற்புதப்பத்து என்பன போன்ற பதிகங்களைக் குறிப்பிடலாம். திருஅருட்பிரகாச வள்ளலார், இவருடைய திருவாசகத்தின் பெருமையை, தன்னுடைய சுய அனுபவமாகப் பாடுகின்றார்.

வான்கலந்த மாணிக்கவாசக!

நின்வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்

சாற்றினிலே

தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, என்

ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!

 இதில் “வான் கலந்த மாணிக்க வாசக”

என்கின்ற பதம் நயமான பதம்.

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் (வான்) அல்லவா சிதம்பரம்! அந்தத் தலத்தில்தானே இறைவனோடு மணிவாசகர் கலந்தார். தில்லை அம்பலவாணனே ஏடு எடுத்து, மணிவாசகரின் இனிய தமிழை எழுதி, தன்னோடு வான் கலக்க வைத்த பேற்றின் நிலையைச் சொல்கின்றார் வள்ளலார். திருவாசகத்தைப் படித்தால் அப்பேற்றினை  ஒவ்வொரு உயிரும் பெறலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றார் வள்ளலார். மணிவாசகரின் தமிழைப் பாடப்பாட, தில்லைக்  கூத்தனின் பதம் ஆடும்.திருவாசகத்தின் மணிவாசகத்தில் உருகுவோம். தில்லை அம்பலவாணனின் திருக்கருணையில் களிப்போம்.

விஷ்ணுபிரியா

Related Stories: