மௌனமும் போதனையாகும்!

ஒரு வாலிபன் ஞாயிறு தவறாமல் ஆலயத்துக்கு வருவான். நல்ல பக்தி உள்ளவனாகவும் தேவனை ஆராதிப்பவனாகவும் இருந்தான். சபையின் போதகருக்கு அவன்மீது நல்ல அபிப்ராயம் உண்டு. திடீரென சில வாரங்கள் அவனை ஆலயத்தில் காணமுடியவில்லை. அவன் இருக்கும் இடம் காலியாக இருந்தது. ஆகவே, போதகர் அவனுடைய வீட்டிற்குச் சென்றார். குளிர்காலமானதால் அவன் வீட்டிற்கு வெளியே விறகுகளால் நெருப்புமூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தான். போதகரைக் கண்டதும் வரவேற்று நெருப்பின் அருகிலேயே ஒரு நாற்காலியைப் போட்டான். போதகர் எதுவும் பேசவில்லை. அவனும் அமைதியாகவே இருந்தான்.

அப்போது போதகர் எரிந்துகொண்டிருந்த ஒரு விறகுக் குச்சியை நெருப்பிலிருந்து எடுத்து தனியே வைத்தார். அந்த நெருப்பு மெல்ல அணைந்து. அதன் தணலும் குறைந்துவிட்டது. சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த விறகுக் குச்சியை நெருப்பில் வைத்தார். அது மீண்டும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் வாலிபன் கவனித்துக் கொண்டிருந்தான். அதுவரை பேசாமல் இருந்த போதகர் ‘நான் வருகிறேன்’ என்று சொல்லி கிளம்பினார். அப்போது வாலிபன், ‘‘ஐயா நீங்கள் பேசாமலேயே இன்றைக்கு ஒரு உண்மையை எனக்கு புரிய வைத்துவிட்டீர்கள், இனி நான் தொடர்ந்து ஆலயத்துக்கு வருவேன்’’ என்று சொன்னான். போதகர் புன்முறுவலோடு விடைபெற்றார்.

இறைமக்களே, இக்கதை இரு பாடங்களை உணர்த்துகிறது. முதலாவது, நாம் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டுமெனில், கூட்டு பிரார்த்தனை அவசியம் என்பதை உணர்த்துகிறது. இரண்டாவது, ஒருவரின் குறையை சுட்டிக்காட்டும் போது அன்பான அணுகுமுறை தேவை என்பதை உணர்த்துகிறது. இக்காலத்தில் சிலர், ஆலய ஆராதனையின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் அறியாமல் வாழ்கின்றனர். நாம் தொய்வின்றி தொடர்ந்து பிரகாசிக்க இறைமக்களின் கூட்டுப் பிரார்த்தனையும், கலப்பற்ற இறை ஐக்கியமும் நம் வாழ்விற்கான மூல ஆதாரங்களாகும்.

‘‘சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்’’ (எபி.10:25) என்று இறைவேதம் கூறுகிறது. மேலும், ‘‘உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்’’ (1 பேதுரு 3:15) என ஒருவருக்கொருவர் புத்திசொல்வதற்கும் ஒரு வரையறையை இறைவேதம்
சூழுரைக்கிறது. இக்கதையில் வரும் போதகர் தனது மௌன போதனையால் வாலிபனை கவர்ந்துகொண்டது ஆச்சரியமளிக்கிறதல்லவா? ஆம், சில தருணங்களில் மௌனமும் போதனையாகும்.

– அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post மௌனமும் போதனையாகும்! appeared first on Dinakaran.

Related Stories: