கும்பம்

கும்பகோணம்

கும்பத்தில் பிறந்தவர்களை ஸ்திர ராசி என்பார்கள். நின்று நிதானமாக எந்த முடிவுகளையும் எடுப்பார்கள். கும்பம் என்றாலே அது குடத்தின் அமைப்பைத்தான் குறிக்கும். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல் வைத்திருப்பார்கள். இரண்டாம் இடமான தனம், குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக மீனகுரு வருகிறார். தனுசு குரு அமைதியாக பேசுவார் எனில், நீங்களோ ஒரு பிரச்னையை நாட்டு வக்கீல்போல வளைத்து வளைத்து பேசுவீர்கள்.

ஒருவர் சார்பாக பேசாது இருவரின் தரப்பிலுள்ள நியாயத்தை சொல்வீர்கள். மூன்றாம் இடத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருவதால் காரசாரமான உணவுகளை உட்கொள்வீர்கள். மேலும், மூன்றாமிடம் என்பது இளைய சகோதரர், மற்றும் முயற்சி ஸ்தானத்தையும் குறிக்கிறது. இளைய சகோதரருக்கு நிறைய உதவிகள் செய்வீர்கள். ஆனால், திடீரென்று ஒட்டு உறவு இல்லாமல் தனித்துப் போகும் நிலையும் ஏற்படும். நான்காம் இடமான தாய் ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் தாயாரை எப்படி நேசிப்பீர்கள் என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. சிலர் கைகளில் அம்மாவின் பெயரை பச்சை குத்தி வைத்துக் கொள்வர்.  ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருவதால் பூர்வ புண்ணியம் அதிகமாக இருக்கும்.

சிறியதாக எப்போதும் அதிர்ஷ்டம் உண்டு. குழந்தை பிறந்த பிறகு உங்களின் பூர்வ புண்ய அம்சங்கள் அந்த குழந்தையை சூழ்ந்துகொள்ளும். ஆறாம் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். அழகு, ஆடை, அலங்காரம் போன்றவற்றிற்கு உரியவராகவும் வருகிறார். அதனால் ஒப்பனைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். நோயைக் குறிக்கும் இடமாகவும் இது வருவதால் ஒவ்வாமை, சீதளம், வீசிங், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் அவதிப்படுவீர்கள்.  ஏழாம் இடத்திற்கு அதிபதியாக சூரியன் வருகிறார். உங்கள் ராசிநாதனான சனிக்கு சூரியன் எதிர்மறை கிரகம் ஆவார்.

சண்டை போட்டுக் கொண்டே ஒற்றுமையாக இருப்பார்கள்.  பாக்யாதிபதியான ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இதனால் அப்பா என்ன தொழில் செய்தாரோ அதுவே உங்களுக்கு அமையும். அவர் ஆரம்பிச்ச கம்பெனி என்று தந்தைக்கு அடுத்து நீங்கள் அந்த இடத்தில் அமர்வீர்கள். பத்தாம் இடத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். அது உங்களின் தொழில் ஸ்தானத்தைபற்றியும் பேசுகிறது. ஜோதிடம், மாந்த்ரீகம் என்று ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்து வகைகள் போன்ற கம்பெனிகளில் பணிபுரிவீர்கள்.  பன்னிரண்டாம் இடமாக மகரச்சனி அதிபதியாக வருகிறார். ராசிநாதனே உங்களுக்கு விரயாதிபதியாக வருவதால் மனசுக்கு பிடித்தவர்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள்.

திடீரென்று வெளிநாடுகளுக்கு டூர் சென்று வருவீர்கள்.  கும்பம் என்பது அடக்கி வைத்திருக்கும் சக்தியை குறிப்பது. அதனால் மந்திர, தந்திரங்கள் அனைத்தையும் கும்பத்தில் வைத்து சக்தியேற்றுகிறார்கள். இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்தியும் ஒடுங்கிய ஆலயத்திற்கு செல்லும்போது இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம் ஆகும்.

அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமக குளத்தில் அமுதமாக கொட்டியது. ஈசனும் கும்பத்தை குறுக்கி அமுதத்தையும், அத்தல திருமண்ணிலும் தனது அருள்நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவஞ் செய்தார். எத்தனை யுகாந்திரங்களுக்கு முன்பு அமைந்த கும்பேஸ்வரர் இன்றும் பேரருள் பொழிகின்றார் கும்பகோணத்திற்கு எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

Related Stories: