வேலூர், பேர்ணாம்பேட்டை வழியாக வி.கோட்டா (வெங்கடகிரிகோட்டா) மலையினை கடந்து, அங்கிருந்து சுமார் 33 கி.மீ., தூரம் பயணித்தால் “முளுபாகிலு’’ அல்லது முள்பாகல் என்னும் ஊரை அடையலாம். அங்கு, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் பிரதிஷ்டையாகி இருக்கிறார். இந்த தொகுப்பில் அதை பற்றி காணலாம்.
விடியற்காலையில், சென்னையில் இருந்து நாம் வேலூருக்கு செல்ல ஆயத்தமானோம். மூன்று மணி நேரத்தில் வேலூரை அடைந்துவிட்டோம். முளுபாகிலுக்கு சென்று வழிகாட்டவும், சில புகைப்படங்களை எடுக்கவும் சூரியபிரகாஷ் என்னும் நண்பரும் இணைந்துக்கொண்டார். வேலூரில் இருந்து அவருடன், சுமார் 1 மணி நேரத்தில் பேர்ணாம்பேட்டை என்னும் ஊரை அடைந்தோம். அருமையான கிராமம். அங்கிருந்து வி.கோட்டா என்னும் இடத்திற்கு சென்றோம். பேர்ணாம்பேட்டை முதல் வி.கோட்டா வரையில் இருக்ககூடிய பயண அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. தென்னந்தோப்புகள், செடி – கொடிகள் குறிப்பாக, கண்களுக்கு எட்டும் தூரம் வரையில் ஒரே… மாங்காய் தோட்டமாக காணப்பட்டது. மேலூம், பேருந்தானது மலைப்பகுதியில் பயணிப்பதால் அது ஒரு சொல்ல முடியாத குஷி! இதுவே மகிழ்ச்சிக்கு காரணம். ஆச்சரியத்திற்கான காரணம், குறுகிய சாலைகளிலும் ஓட்டுனர் மிக சாதுரியமாக பேருந்தை ஓட்டுகிறார்.
சென்று வர.. ஒரே வழி என்பதால், எதிர் திசையில் வரும் வாகனமும் அந்த குறுகிய சாலையினையே பயன்படுத்துகிறார்கள். இவைகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. வி.கோட்டா பேருந்து நிலையத்தில் இருந்து நாங்கள் இருவரும் முளுபாகிலை அடைந்தோம். முளுபாகிலு பேருந்து நிலையத்தை ஒட்டியே ஒரு அனுமன் கோயில். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், மகாபாரத போர் முடிந்தவுடன் அர்ஜுனனின் ரத கொடியை இங்கு நிலைநாட்டியதாக கூறப்படுகிறது. அக்கொடியில் அனுமன் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், முளுபாகிலு சிட்டிக்குள் ஒரு அனுமன் பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். இந்த அனுமன்தான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த முதல் அனுமன்.
அதன் பிறகு, முளுபாகிலு அவுட்டரில், அதாவது முளுபாகிலு மடத்தில் ஒரு அனுமன் இருக்கிறார். ஆக, மொத்தம் மூன்று அனுமன் முளுபாகிலுவில் கோயில் கொண்டுள்ளார். இதில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த முதல் அனுமனை பற்றி ஏற்கனவே நாம் பதிவு செய்துவிட்டோம். தற்போது, முளுபாகிலு அவுட்டரில் இருக்கக்கூடிய அனுமனை பற்றி பார்ப்போம். இந்த அனுமந்தான் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த இரண்டாவது அனுமன் என்று கூறப்படுகிறது. இங்கு என்ன ஒரு சிறப்புகள் என்றால், மகான் ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் மூலபிருந்தாவனமும், எண்ணற்ற பல முளுபாகிலு மடத்தின் வழிவந்த மகானின் மூலபிருந்தாவனங்களும், நரசிம்ம தீர்த்த குளமும், ஸ்ரீ வியாசராஜர் தியானம் செய்த வியாசகுகையும், யோக நரசிம்ம ஸ்வாமியும் அருள்பாலிக்கிறார்கள். எத்தகைய புண்ணியம் நிறைந்த பூமி!
முளுபாகிலு மடத்தின் வெளிபுறத்திலேயே மூன்று மகான்களின் பிருந்தாவங்கள் இருக்கின்றன. பிருந்தாவனங்களை பார்க்கும் போதே.. அதன் பழமையும், சாந்நித்யமும் நன்கு உணர முடிகிறது. இவ்விடத்தில், நரசிம்ம தீர்த்த குளம் ஒன்றும் காணப்படுகிறது. இக்குளத்தில், பெரியபெரிய மீன்கள் காணப்படுகின்றது. அது மட்டுமா.. குளமும் மிக பெரியது. மடத்திற்குள் நுழைந்தோமேயானால், முதலில் நாம் ஸ்ரீ பாதராஜரின் மூலபிருந்தாவனத்திற்கு செல்லும் வழி வரும். ஆனால், மகான்களை தரிசிப்பதற்கு முன்பாக முதலில் நாம் கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆகையால், முதலில் இங்குள்ள யோக நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.
யோகநரசிம்மஸ்வாமி, பெரிய பாரை ஒன்றில் யோக நிலையில் காட்சியளிக்கிறார். அவருக்கு மத்வ சம்ரதாயத்தின் படி நாம முத்திரைகளை சாற்றியிருக்கிறார்கள். நரசிம்மரின் அருகிலேயே வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாவது அனுமனையும் தரிசிக்கலாம். மிகப் பெரிய உருவம் கொண்டுள்ளார். அனுமனை கண்ட உடனே நம் உடலானது சிலிர்க்கிறது. நாங்கள் எங்களை மெய்மறந்து அனுமனையே பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த சந்நதியில் பலரும் வேதபாராயணத்தை சொல்லிக்கொண்டே இருப்பதை நம்மால் காணமுடிகிறது. வெளியே வந்தால், வியாசராஜர் தியானம் செய்த “வியாசகுகை’’ இருக்கிறது. குகையின் உள்ளே எட்டிப்பார்த்தால், சற்று அமானுஷம் நிறைந்ததாக காணப்படுகிறது. குகைக்குள் சதாசர்வமும் நெய் தீபம் ஒன்று எரிந்துக்கொண்டே இருக்கிறது. இந்த குகைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. குகைக்கு அருகில், விநாயகப் பெருமான் அருள்கிறார். குகைக்கு நேர் எதிரில், மகான் ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் மூலபிருந்தாவனம் இருக்கிறது.
நாங்கள் சென்ற நேரம், ஸ்ரீபாதராஜருக்கு அலங்காரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு மகான், ஆறடிக்கு அமர்ந்துக்கொண்டிருந்தால் எப்படி ஒரு தோற்ற அமைப்பு இருக்குமோ… அப்படி, ஸ்ரீபாதராஜரின் மூலபிருந்தாவனம் காட்சியளித்தது. அருகருகில், இவர் சீடர்களின் மூலபிருந்தாவனங்கள். தற்போது, சீடர்களின் பிருந்தாவன இடத்தில் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இங்கு யோகநரசிம்மஸ்வாமி இருப்பதால், நரசிம்ம ஜெயந்தி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், காலை முதல் பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல வகையான பழங்களைக் கொண்டு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். அதே போல், அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படும். குறிப்பாக, முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவைகள் அனுமனின் மீது அபிஷேகிக்கப்படும். வண்ணவண்ண மலர்களினால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். முக்கியமாக, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த இரண்டாவது அனுமன் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் காணப்படும்.
அன்றைய தினத்தில் மட்டும் சுமார் 50,000 பக்தர்கள் வருவார்கள் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதே போல், மகான் ஸ்ரீ பாதராஜரின் ஆராதனை சமயத்தில், மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், ஸ்ரீ பாதராஜரின் மூலபிருந்தாவனத்திற்கு செய்யப்பட்டிருக்கும். இத்தகைய யோகநரசிம்மரையும், அனுமனையும், வியாசகுகையையும், விநாயகரையும், மகான் ஸ்ரீபாதராஜரையும், இவரின் சீடர்களின் பிருந்தாவனங்களையும் தரிசிப்பது. சென்ற ஜன்மத்தில் ஏதோ ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, பேர்ணாம்பேட்டைக்கு சென்றுவிடவேண்டும். அங்கிருந்து வி.கோட்டா பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து முளுபாகிலுவிற்கு சென்றுவிடலாம். மொத்தமாகவே வேலூரில் இருந்து 109 கி.மீ., தூரம்தான்.
