அம்பிகையை தொழுவோருக்கு தீங்கில்லை

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

‘‘கரும்பும் அங்கை சேர்த்தாளை”
– என்பதனால் கரும்பிற்கும் மனதிற்கும் உண்டான ஒற்றுமையே கரும்பும் என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். மன வடிவான கரும்பாகிய வில்லை தரித்தவள் உமையம்மை, ‘‘மனோ ரூபேஷு கோதண்டா” என்கிறது சகஸ்ரநாமம். கரும்பு வெட்டிய பிறகும் மீண்டும் ஒரு முறை வளரும் பண்பை உடையது. அதுபோல் மனது புலன்களின் வழி ஒன்றை அனுபவித்து முடித்த பிறகும் அதன் நினைவை, பதிவை மனதில் வைத்துக் கொண்டு தேவையான போது வெளிப்படுத்தும்.

கரும்பு வெட்டிய பிறகு மீண்டும் வளரக் கூடியது. கணு கரும்பில் வரிசையாக இருப்பதுபோல் மனமானது ஒரே நினைவை பற்றிய நினைவு அடுக்ககங்கள் பலவற்றைக் கொண்டது. கரும்பு என்ற வில்லுக்கு நாணாக இருப்பது வண்டு. வண்டுகள் ஒன்றிற்கு ஒன்று பிரிந்து செயல்பட்டு எல்லாம் இணைந்து தேன் கூட்டைக் கட்டும். அதுபோல நினைவலைகள் அனைத்தும் சேர்ந்து மனம் என்ற ஒரு தேன் கூட்டை உருவாக்கும். இத்துணை பண்புகளையும் இணைத்தே ‘‘கரும்பும் அங்கை சேர்த்தாளை” என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.

‘‘முக்கண்ணியை தொழுவார்க்கு’’முக்கண்ணி என்ற சொல்லிற்கு மூன்று பொருள் உள்ளதாக பட்டர் குறிப்பிடுகின்றார். திருக்கடையூரில் எழுந்தருளி இருக்கக்கூடிய பாலாம்பிகை என்ற சக்தியை குறிப்பிடுகின்றார். மூன்று கண் கொண்டவள் என்பதனால் முக்கண்ணியை என்றார். கண்ணி என்பதற்கு திருமுடியில் சாத்துகின்ற தொடுக்கப்பட்ட மலர் என்று பெயர். அந்த மலருக்கு அதி தேவதை இலக்குமியாவார். மேலும் தந்திர சாஸ்திரம் இறைவியை ஆவாகனம் செய்ய மூலமந்திரம் உச்சரித்து சமர்ப்பிக்கப்படும் தலை மாலையை கண்ணி என்கிறது. இங்கே பட்டர் உமையம்மையின் மூலமந்திரத்தையே கண்ணி என்ற சூட்டு சொல்லால் குறிப்பிடுகிறார். மூலமந்திரமும் தேவதையும் இரண்டும் வேறல்ல என்கிறது ஸ்ரீவித்யா சம்பிரதாயம். இதையே மஹா மந்த்ராய நம: என்கிறது சகஸ்ரநாமம்.“தொழுவோர்க்கு”

– என்பதனால் மூல மந்திரம் சொல்லி பூசனை செய்து பாலாம்பிகையை மலர் தூவி வழிபாடு செய்யும் பக்தரையே தொழுவோர்க்கு என்கிறார்.

“ஒரு தீங்கில்லையே”வழிபாட்டின் நோக்கத்தையே இச்சொல்லால் வலியுறுத்துகின்றார். ஏன் வழிபட வேண்டும்? வழிபடுவதன் பயன் என்ன? என்று பயன் கூறி அபிராமி அந்தாதியை நிறைவு செய்கின்றார். ஆசை உடையவர்கள் நினைத்ததை அடைவதற்கு வழிபாடு செய்ய வேண்டும். ஆசை இல்லாதவர்கள் பாதுகாப்புக்காக வழிபட வேண்டும். துன்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக வழிபாடு அவசியமாகிறது. ‘தனம் தரும்’ (69) ‌பணக்காரர்கள் விரும்புவதில்லை.

‘கல்வி தரும்’ (69‌) அறிவாளர்கள் கேட்பதில்லை.`நரகுக்கு உறவாய மனிதரையே’ (4) இறந்த பின் ஏற்படும் நரக வாழ்க்கையின் நம்பிக்கையில்லை. இறந்தபின் அடையப்போகும் சொர்க்கத்தில் விருப்பம் இல்லை. உமையம்மையை நான் வழிபடவில்லை. அதனால் மோட்சம் நான் வேண்டவில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என் தேவைக்கு என் உழைப்பால் அறிவால் அதை நிறைவேற்றிக் கொள்வேன் என்ற எண்ணம் உடையவர்களும் கூட தீங்கிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அதனால் தான் அபிராமி அந்தாதியின் நூற் பயனாக அபிராமியை வணங்குவோர்க்கு ஒரே ஒரு தீங்கு கூட வராது என்பதையே ‘‘ஒரு தீங்கு இல்லையே” என்கிறார் அபிராமி பட்டர்.

முடிவாக ஆத்தாளை, எங்கள்‌ அபிராம வல்லியை என்பதனால் இறைவியின் பெயரை சூட்டுகிறார்.அண்டமெல்லாம்‌ பூத்தாளை என்பதனால் இறைவியின் பொதுப்பண்பு குறிப்பிடுகிறார்.
மாதுளம்‌ பூநிறத்தாளை என்பதனால் இறைவியின் தனி அடையாளத்தை குறிப்பிடுகிறார். புவி அடங்கக்‌ காத்தாளை என்பதனால் அபிராம வல்லியின பேராற்றலை வெளிப்படுத்துகிறார். அங்குச பாசாங்குசமும்‌ கரும்பும்‌ அங்கை சேர்த்தாளை என்பதனால் வணங்கும் பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுகிற தன்மையையும் முக்கண்ணியை என்பதனால் த்ரையம்பகர் என்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரின் அறத்தின் வழி மனைவி தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே என்பதனால் ஒரு தீங்கில்லாத முக்தியையும் அவளே அருள வள்ளால் என்பதை அறிவோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: