திருமங்கை ஆழ்வாரைப் போலவே வடக்கே ஒரு அடியார்

நம்முடைய தென்னகத்தில் அவதரித்த ஆழ்வார்கள் சரித்திரத்திலும் சரி, நாயன்மார்கள் சரித்திரத்திலும் சரி, மற்ற அருளாளர்கள் சரித்திரத்திலும் சரி, பல வியக்கத்தக்க சம்பவங்களைப் பார்க்கலாம். இப்படியும் நடக்குமா என்று நினைக்கும் படியாக அந்தச் சம்பவங்கள் இருக்கும். ஆனால் இங்கு மட்டுமல்ல, இதைப் போலவே பல சம்பவங்கள் உலகெங்கிலும் பல்வேறு சமயங்களிலும் உள்ள அடியார்கள் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை அந்தந்த நூல்களைப் படிக்கும் போது காணலாம். குறிப்பாக நம்முடைய இந்தியாவைப் பொருத்தவரை, தென்னகத்தில் அடியார்கள் வாழ்க்கையில் எப்படி எல்லாம் சம்பவங்கள் நடந்திருக்கின்றதோ அதைப் போலவே வட நாட்டிலே வாழ்ந்த அருளாளர்கள் வாழ்விலும் நடந்திருக்கின்றன என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சம்பவங்கள். இவைகளில் இருந்து நாம் இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

1. எந்த இடத்தில் இருந்தாலும் அடியார்கள் அடியார்கள்தான் என்பது ஒரு விஷயம்.
2. தென்னகத்து அடியார்கள் வாழ்விலும் வடக்கே வாழ்ந்தவர்கள் வாழ்விலும் நடந்த சம்பவங்களைப் பார்த்தால், இந்த பாரத தேசமானது ஆன்மிக ரீதியாக ஒரே தேசமாகதான் இருந்திருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

உதாரணமாக, திருமங்கையாழ்வார் சரித்திரத்தை எடுத்துக் கொள்வோம். தென்னாட்டிலே நடந்த சம்பவம். திருமங்கையாழ்வார் திருவாலி என்னும் ஒரு சிற்றரசை ஆண்டு வந்தவர். நீலன் என்பது அவருடைய பெயர். அவர் குமுதவல்லி என்கிற மங்கையைச் சந்திக்கிறார். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றார். அப்பொழுது அந்த மங்கை நல்லாள் திருமங்கை ஆழ்வாரை திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகளை விதிக்கின்றாள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்கிறோம். அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொள்ள, பெண்கள்தான் நிபந்தனைகள் விதித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்கின்றோம். (இடையில் ஆண்கள் நிபந்தனை விதித்து இப்போது மறுபடியும் பெண்கள் நிபந்தனைகள் விதிக்க ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது)

இது ராமாயண காலத்தில் இருந்தே வருகிறது. சீதையை மணம் முடிக்க வேண்டும் என்றால் வில்லை வளைக்க வேண்டும். நப்பின்னையை மணம் முடிக்க வேண்டும் என்று சொன்னால் ஏழு எருதுகளை அடக்க வேண்டும். அதைப் போலவே திருமங்கை ஆழ்வார் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்றால், அவர் வைணவராக மாறி தினசரி ஆயிரம் அடியார்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.
(ததீயாராதனை)இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்வம் எல்லாம் இழக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய வாக்கு தவறக்கூடாது என்பதற்காக, பணம் அதிகம் வைத்திருக்கக்கூடிய தனவந்தர்களை வழிப்பறி செய்து, அந்த செல்வத்தைக் கொண்டு அடியார்களுக்கு அன்னம் அளிக்கும் தொண்டினைச் செய்து வருகிறார். இந்நிலையில், அவரைத் திருத்திப்பணி கொள்வதற்காக எம்பெருமானே, நிறைய ஆபரணங்களுடன் மணமகனாகவும் தாயார் மஹாலட்சுமி மணமகளாகவும் வந்து, அவரிடத்திலே செல்வத்தை பறிகொடுத்து, பிறகு ஒரு திருவிளையாடல் நடத்தி, அவருக்கு திருமந்திர உபதேசம் செய்து, ஆழ்வாராக மாற்றுகின்றார். இது ஆழ்வார் ஞானம் பெற்ற உற்சவமாக, பங்குனி உத்திரத்திற்கு மறுநாள் திருவாலி திருநகரி வேதராஜபுரம் என்னும் ஊரில் வேடுபறி உற்சவமாக நடைபெறுகிறது.

இது தெற்கே நடந்த கதை. வடக்கேயும் இதே மாதிரி ஒரு கதை நடந்திருக்கிறது. சிற்சில மாற்றங்கள் இருக்கின்றன. ஹரிபாலதாஸர் என்றொரு அடியார். பெருஞ்செல்வர். தன்னிடம் உள்ள செல்வங்களை ஏழைகளுக்கும் அடியார்களுக்கும் வாரி வாரி வழங்குகிறார். தினசரி ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு அன்னம் வழங்குகின்றார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய செல்வம் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் வருவாய் நீங்கி வறுமை வந்து நிற்கிறது. இங்கேதான் திருமங்கையாழ்வார் சரித்திரம் வருகிறது.

வறுமை வந்த பின்னும் எப்படியாவது ஏழைகளுக்கு அன்னம் படைக்க வேண்டும் என்று நினைத்து அதிதி சத்காரத்தை நிறுத்தாமல் வழிப்பறி செய்து அடியார்க்கு அமுதளித்து வருகிறார்.

ஒருநாள் திடீரென்று சில அடியார்கள் வந்தனர். அவர்களை உபசரிக்க வழியின்றி வழிப்பறிக்குப் புறப்பட்டுக் காட்டுக்குள் சென்றார். நெடுநேரமாகியும் ஒருவரும் வரவில்லை.

அப்பொழுது ஹரிபாலர் மனம் நொந்தார். இவரது வருத்தம் பொறாத இறைவன் ஒரு பணக்காரன்போல் வேடந்தாங்கி, மஹாலட்மியையும் அழைத்துக்கொண்டு ஹரிபாலர் இருந்த வழியே வருகிறான். ஹரிபாலருக்கு ஆனந்தம், அவர்கள் வரும்வரை காத்திருந்து வழிமறிக்கிறார். திருமங்கையாழ்வார் கத்தியைக் காட்டியது போல இவர் வில்லிலே அம்பைத் தொடுத்து மிரட்டுகிறார்.

‘‘மரியாதையாக உங்களிடம் உள்ள பொருள்களைக் கொடுக்கிறீர்களா அல்லது உயிரை இழக்கிறீர்களா?’’ என்று அதட்டுகிறார். இறைவன் பயந்தவர்போல்,

‘‘அப்பா! உனக்கு வேண்டியது பொருள் தானே! எடுத்துக்கொள். எங்களை விட்டுவிடு’’ என்கிறான். நகைகளையெல்லாம் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு ஹரிபாலர் வீடு திரும்புகிறார்.

பெரும் செல்வம் கிடைத்ததால் அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இனி சிலகாலம் இந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு அடியார்களுக்கு அன்னம் படைக்கலாம் என்று நினைக்கிறார். மளிகைப் பொருள்களும் காய்கறிகளும் ஏராளமாக வந்து வீட்டில் இறங்குகின்றன. தடபுடலாக விருந்து தயாராகிறது. இந்தச் செயல் மஹாலட்சுமிக்குக் பிடிக்கவில்லை.

‘‘ஸ்வாமி! இப்படி வழிப்பறி செய்யும் அவனை நீர் பக்தன் என்பது பொருத்தமில்லை’’ என்கிறாள். இறைவனது திருமுகத்திலே புன்முறுவல் தோன்றியது. மிகுந்த கனிவுடன்,

`‘லட்சுமி! அவன் திருடியதற்காக நிந்திக்கிறாயே! பெருந்தன்மையுடன் நம்மைக் கொல்லாமல் விட்டானே! தான் ஆடம்பரமாக வாழ்வதற்காக திருடவில்லை. அடியவர்க்கு உணவளிக்கத் திருடுகிறான்’’ என்றான்.

‘‘இருந்தாலும் அவனை திருத்துவதுதான் சரி’’ என்று மகாலட்சுமி சொல்ல, இருவரும் யாத்ரீகர்கள் போல் ஹரிபாலர் வீட்டிற்குச் செல்கிறார்கள். பெருமாள் மகாலட்சுமியைப் பார்த்துச் சொல்கிறார்.

‘‘நம்முடைய நகைகள் மளிகைப் பொருளாகவும் காய்கறியாகவும் இருப்பதைப் பார். நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருக்கும் இவ்வளவு அடியார்களுக்கு அல்லவா சமைத்துக் கொண்டிருக்கிறார்’’ என்று சொல்லி சிரிக்கிறார். இவர்களைக் கண்டதும் ஹரிபாலர் ஓடோடி வந்து உள்ளே அழைத்து உபசரித்து உணவளித்து எல்லாவிதமான மரியாதைகளும் செய்கிறார். விடைபெறும் சமயம் பகவான் சற்றே தயங்கி நின்றான். ஹரிபாலர் மீண்டும் வணங்கி,

‘‘என்னால் செய்யக் கூடியது வேறு ஏதேனுமுண்டானால் தெரிவியுங்கள்’’ என்றார்.

‘‘உம்முடைய விருந்து உபச்சாரம் பிரமாதம். ஆனால் ஒரு சின்ன குறை! நேற்று சாயங்காலம் நாங்கள் காட்டு வழியிலே வரும் பொழுது ஒரு கள்வன் எங்களை வழி மறித்து எங்களுடைய நகைகளையெல்லாம் திருடிப்போனான். அதனால்தான் இன்று உம்மிடம் உணவையும் யாசிக்கவேண்டி வந்தது.’’ ஹரிபாலர் திடுக்கிட்டார். ஹரிபாலருக்கு விஷயம் விளங்கிட்டது. நெடுஞ்சாண் கிடையாக அவர்கள் காலடியில் விழுந்தார்.

‘‘உம்முடைய ஆபரணங்களை அபகரித்த கள்வன் நானே! அதற்குரிய தண்டனையையும் அளித்து மன்னிக்கவும் வேண்டும்.’’ கண்ணீருடன் கதறிய அவரைத் தூக்கி அணைத்தனர் இருவரும். ஹரிபாலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பெருமாளும் பிராட்டியுமாக காட்சியளித்தனர்.

‘‘ஏ! ஹரிபாலா! உன் மனது கல்மிஷமில்லாதது. உனக்கு ஏராளமான செல்வம் தருகிறோம். இப்புன்தொழிலை விடுத்து நல்ல முறையிலே திருப்பணி செய்து பேறு பெறுவாயாக!’’

என்று திருவாய் மலர்ந்தருளினான் இறைவன். தரிசனம் பெற்ற ஹரிபாலருக்கு வேறென்ன வேண்டும்? தொடர்ந்து அடியார் கைங்கர்யம் செய்து அழியாப்பதம் பெற்றார்.

Related Stories: