ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை… சாதித்த பொறியியல் பேராசிரியர்

சோலார் மோட்டர் சவறு தண்ணீரை கொண்டு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் முருங்கை, கத்தரி, கொய்யா, தர்ப்பூசணி, டிராகன் புரூட், மீன்வளர்ப்பு என இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறார் சாயல்குடி பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி.”சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2000 நீர்நிலைகளுடன் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கிய மகுதி ராமநாதபுரம். போதிய மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி, ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் வழித்தடங்கள், கண்மாய் போன்ற நீர்நிலைகள் போதிய பராமரிப்பின்மையால் நாளடைவில் தண்ணியில்லா காடாக மாறிப்போனது. ஒரு அதிகாரி நாமநாதபுரத்துக்கு மாற்றல் ஆகி வருகிறார் என்றால் கிண்டலும் கேலில்க்கும் உள்ளாவார். இந்த பெயரை உடைத்து, மீண்டும் வளமான மாவட்டமாக்கி, பசுமையாக மாற்றி வருகிறார்கள் இந்த மண்ணின் விவசாயிகள். அரசும் பல்வேறு வேளான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை முறையாக பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறேன்’’ என தன்னம்பிக்கையுடன் பேசத்துவங்கினார் சாயல்குடி, புனவாசல் கிராமத்தை சேர்ந்த பொறியாளர் நாதன்.‘‘அப்பா திருக்கண்ணன் வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  விருதுநகர்ல பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தேன், தொடர்ந்து தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினேன். சின்ன வயசுல இருந்தே அம்மா புஷ்பவள்ளி விவசாய நிலத்துல பாடுபடுவாங்க. அவங்க செய்வதை பார்த்து வளர்ந்தேன்.’’ என்று மகிழ்ச்சியுடன் பேசத்துவங்கினார் நாதன்.‘‘சாயல்குடி கிழக்குக் கடற்கரைச் சாலையோரம் பாப்பாகுளம் பகுதியில் தரிசாக கிடந்த பூர்வீக நிலமான 10 ஏக்கர் செவற்காட்டை (செம்மண் நிலம்) மேம்படுத்தி விவசாயம் செய்ய முடிவு செய்தேன், பேராசிரியர் பணியை விட்டுட்டு முழு நேரமா இயங்க ஆரம்பித்தேன் 10 ஏக்கரையும் வேலி அமைத்து சீரமைத்தேன். 3 போர்வெல்கள் அமைத்து சோலார் பம்பு செட் மூலம் மீன் பண்ணைக்கு தண்ணீர் பாய்ச்சி, அந்த கழிவுத் தண்ணீரை முழுமையான சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றேன். விவசாயத்தின் மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால் பேராசிரியர் பணியை விட்டுவிட்டு,  முழுநேரம் ஈடுபட்டு வருகிறேன். வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படிதான்  அரசு உதவித் திட்டங்கள் பெரிதும் உதவியாக உள்ளன. 3 போர்வெல் அமைக்கப்பட்டு, சோலார் மின் மோட்டார் உதவியுடன், முழுமையாக சொட்டுநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நிலம் சீரமைக்கப்பட்டவுடன் கால்நடை சாணம், கொழுஞ்சி செடி உள்ளிட்ட மக்கும் குப்பைகள், மண்புழு உரம் உள்ளிட்டவற்றை அடி உரமாக இட்டு அனைத்து செடிகளும் வளர்க்கப்படுகிறது.போர்வெல் நீரில் மீன் வளர்ப்பு:செம்மண் நிலத்தில் நல்ல நீரோட்டம் இருக்கும். ஆனால் சுவை மாறி, சவறு தண்ணீர் போன்று இருக்கும். பொதுவாக வளர்ப்புமீன் மழைநீரில் மட்டுமே வாழக்கூடியது. இதனை மாற்றி, போர்வெல் சவறு தண்ணீரில் விறால் மீன் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக செம்மண் நிலமான இங்கு 70 அடி நீளம், 40 அடி அகலத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டது. அதில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு கவர் செய்யப்பட்டது. இதில் போர்வெல் சவறு தண்ணீர் பாய்ச்சி விறால் மீன் வளர்க்கப்படுகிறது.கடலூரிலிருந்து வாங்கி வரப்பட்ட 500 குஞ்சுகள் விடப்பட்டது. ஒரு கிலோ எடை வரை வளரக்கூடிய வாழ்நாள் 8 மாதங்கள் உள்ள இந்த மீன்கள் தற்போது 4 மாதங்கள் ஆன நிலையில் ஒரு மீனின் எடை அரை கிலோ வரையில் வளர்ந்துள்ளது. மீனை கழுகு போன்ற பறவைகள், வந்து தூக்கி செல்லாதவாறு வலையும் அடைக்கப்பட்டுள்ளது. 10 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படுகிறது. மீனை அடித்து சாப்பிடும் தன்மை கொண்ட இந்த விறால் மீன்களுக்கு கருவாடு, கோழி இறைச்சி போன்றவற்றை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட அசைவ உணவு வழங்க பயிற்சி அளிக்கப்பட்டதால், அந்த உணவை தின்று வளர்ந்து வருகிறது. இன்னும் 4 மாதங்களில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இதன் மூலம் ரூ.1.50 லட்சம் வருவாய் கிடைக்க உள்ளது. மீன் வளர்க்க பயன்படுத்தப்படும் தண்ணீரை 10 நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதால் அந்த தண்ணீரை வீணாக்காமல், சொட்டுநீர்க் குழாய்கள் மூலம் இங்குள்ள கத்தரி, முருங்கை, கொய்யா, டிராகன் புரூட் செடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது. முழுவதும் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக்கொல்லிக்கு பதிலாக மாட்டின் சாணம், கோமியம், மீன், கருவாடு கழிவுகளுடன் கூடிய பஞ்சகவியம் மருந்து தயாரித்து அடிக்கப்படுகிறது.16 டன் தர்ப்பூசணி விற்பனைபாத்தி கட்டி, இடைவெளியுடன் கூடிய விதையை நட்டு சொட்டுநீர் பாசனமுறையை பயன்படுத்தி தர்ப்பூசணி விளைவிக்கப்பட்டது. குறைந்த தண்ணீர், களை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு ஏதும் இல்லாததால் சுமார் 16 டன் தர்ப்பூசணி கிடைத்தது. முதன் முறை என்பதால் உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் குறைந்த விலையில் கொடுத்தேன். இதன் மூலம் ரூ.75 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது.முருங்கை ஆயில் தயாரிப்பு:6 மாதத்தில் காய் தரக்கூடிய முருங்கை மரம் சுமார் ஒரு ஏக்கரில் வளர்க்கப்பட்டு வருகிறது. முருங்கைக் காய் விலை குறைவு என்பதால், அதன் இலையை பொடியாகவும், காய் விதைகள் மூலம் ஆயில் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. இதந் மூலம் மதிப்பு கூட்டப்பட்டு நல்ல வருவாய் கிடைக்கின்றது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் சிறப்பான வரவேற்பு உள்ளதால் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. பூ, பூத்து குலுங்குவதால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாகவும், வர்த்தக ரீதியில் தேன் தயாரிக்கவும் எண்ணி, முருங்கை மரத்தில் தேனீ வளர்க்கப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வர உள்ளது. லக்னோ 45 என்ற ரக குறுகிய கால மரமான கொய்யா ஒரு ஏக்கரில் வளர்க்கப்படுகிறது. 6 மாதத்தில் காய் தந்ததால் முதல் முறையாக ஒரு டன் கொய்யா விற்பனைக்கு சென்றுள்ளது. அரை ஏக்கரில் வளர்க்கப்பட்டுள்ள கத்தரி இயற்கை முறையில் வளர்க்கப்படுவதால் சுமார் ஒரு டன் கத்தரி விற்பனை நடந்துள்ளது. உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளிநாடு ஏற்றுமதி வரையிலும் பயன்படக்கூடிய உணவு பொருட்களை, எவ்வித ரசாயனமின்றி, ஆரோக்கியமான, இயற்கை முறையில் தயாரித்து, சந்தைப்படுத்தி, சாதிப்பது தான் லட்சியம்’’ என்கிறார். தொடர்புக்கு: நாதன்- 99942 38692.தொகுப்பு: மு.சுப்ரமணிய சிதம்பரம்

The post ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை… சாதித்த பொறியியல் பேராசிரியர் appeared first on Dinakaran.

Related Stories: