கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு

குலசேகரம் :  கோதையாறு மலைப்பாதையில் வந்த அரசு பஸ் திடீரென 15 அடி பள்ளத்தில் பாய்ந்தது. பஸ்சில் பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் உள்ள மோசமான மலை சாலை பேச்சிப்பாறை – கோதையாறு சாலையாகும். இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் மிக மோசமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெய்த தொடர் கன மழையால் இந்த சாலை அடையாளம் தெரியாத வண்ணம் உருக்குலைந்து உள்ளது. மோசமான சாலை காரணமாக வாகனங்கள் சாலையில் அங்குமிங்குமாக மாறி மாறி செல்லும் நிலை உள்ளது. கோதையாறு மின்உற்பத்தி நிலையங்கள், அரசு ரப்பர் கழகம், வனத்துறை, சூழியல் சுற்றுலா என முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனால் இச்சாலையில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு போக்குவரத்து முடங்குகிறது. இந்த சாலையை சீரமைக்க தொமுச தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.கோதையாறுக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், குலசேகரம் போன்ற இடங்களிலிருந்து நேரடியாக பஸ் போக்குவரத்து உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து செல்லும் தடம் எண் 313 இ என்ற அரசு பஸ் இரவில் கோதையாரில் நிற்கும். பின்னர் அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும். இதே போன்று நேற்று அதிகாலை 4 மணிக்கு கோதையாரிலிருந்து பஸ் புறப்பட்டது.  சிறிது நேரத்தில் மோசமான சாலை காரணமாக பஸ் டிரைவவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 15 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் இல்லாததால் பெரும் விபரீதம் தடுக்கப்பட்டது. அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இந்த சாலையை  உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: