இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள்

கார்த்திகை தீபம் : 10  -12 - 2019

அருணாசலம் என அகத்தில் நினைத்தாலே போதும். அகந்தையை வேரறுத்து, ஞானப் பதத்தில் சேர்க்கும் அற்புத மலையே திருவண்ணாமலை. கிரி உருவில் அமர்ந்த கிருபைக் கடலே அருணாசலம். கௌதமர் போற்றிய கருணை மாமலையும் இதுவேயாகும் என்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் அட்சரமணமாலை நூலில் அருணாசல மலையை விதம்விதமாக நெக்குருகி பாடியிருக்கிறார். யுகங்கள் எத்தனை புரண்டாலும் அசையாது ஞானாக்னி சொரூபமாக விளங்குகிறது அண்ணாமலை. ஞானத் தபோதனர்களை வாவென்று புராண காலம் முதல், கலியுகமான இன்று வரை அழைத்து ஆற்றுப்படுத்துகிறது.

அப்பேற்பட்ட இந்த அருணாசல மலையைச் சுற்றிலும் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. நடுவே மகாலிங்கமாக அக்னி ஸ்தம்பம் எனும் நெருப்பு மலையாக அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். புராண காலத்தில் அக்னி மலையாகவே ஜொலித்த இந்த மலையானது, கலியுக பக்தர்கள் அருகே வந்து வழிபட கருணை கூர்ந்து குளிர்ந்து, எளிய மலையாக அமைந்தது.கடவுளை தேடிக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்தவர்களுக்கு ஞானத் தருவாக இந்த மலை திகழ்கிறது. கடவுளைக் காண வேண்டும் என்கிற தாபம் இருக்கிறது. ஆனால், தியானம் செய்ய வலிமையில்லை. கனிந்த பக்தி செய்யும் அளவுக்கு வைராக்கியமும், மன உறுதியும் இல்லை. நாங்கள் சாதாரண மனிதர்கள், என்ன செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வாழ் ஞானியர்களிடம் காலம் காலமாக பக்தர்கள் கேட்டார்கள்.

அவர்கள் பகன்ற ஒரே பதில், ‘‘இதோ இங்கிருக்கும் மலையை வலம் வா. அதுவே போதும். உனக்கு என்ன வேண்டுமோ அதை சரியான சமயத்தில் இம்மலை அளிக்கும்’’ என்றனர். பலர், சுக சௌக்கியங்களையும் செல்வத்தையும் அளிக்குமா என்று கேட்டபோது ‘ஞானத்தையே தரும் மலையிது. நீங்கள் கேட்கும் சுகங்களை தராதா என்ன? நீங்கள் வலம் வாருங்கள் பிறகு உங்களுக்கே புரியும்’ என்று பதில் கொடுத்தார்கள். அப்படி மலையை வலம் வரும்போது நாம் அஷ்ட லிங்கங்களையும் தரிசிக்கலாம்.

அஷ்டலிங்கங்களில் முதலில் அருள் தருவது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம் இது. இந்த சந்நதியில், ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறது இந்த இந்திர லிங்கம். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள் தருகிறார். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட, பலன் கிடைக்கும். அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் அமைந்திருக்கிறது இந்திரலிங்கம்.   

அடுத்ததாக கிரிவலப் பாதையில், ஸ்ரீரமணாஸ்ரம், சேஷாத்ரி ஆஸ்ரமம் செல்லும் வழியில் அக்னி லிங்கம் அமைந்துள்ளது. அக்னி லிங்கத்தை தரிசிப்பதும், அக்னி தீர்த்தத்தில் நீராடுவதும் சிறந்த பலனைத் தரும். பல யுகங்களாக அங்கபிரதட்சணமாக கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருள் வேண்டிய ருத்திர மூர்த்திகளின் திருமேனிகள் அக்னி தீர்த்தம் அருகேதான் குளிர்ச்சியடைந்தன. அப்போது, அந்த இடத்தில் சுயும்பு வடிவாக சிவலிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கம்தான் இன்றளவும் அக்னி லிங்கமாக அருள்தருகிறது. சிம்ம ராசிக்காரர்கள் வழிபட, நற்பலன்கள் கிடைக்கும்.

விருப்பு, வெறுப்பு அற்றவன், நேரம், காலம் தவறாத உத்தமன், நீதி பிழறாதவன், வேறு யாராக இருக்க முடியும்? ஆமாம், எமதர்மனேதான். மனிதன் தான் செய்யும் பாவ&புண்ணியங்களுக்கு ஏற்றபடிதான் இம்மையும், மறுமை பெறுகிறான். எமதர்மராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம். கிரிவலம செல்லும் பக்தர்கள் எமலிங்கத்தையும், அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சந்நதி எதிரில் அமைந்துள்ள சித்திர குப்தன் சந்நதியையும் தவறாமல் தரிசிக்க வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட, வாழ்க்கை மேன்மை பெறும்.

கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 1008 புனித குளங்களில், இறைவன் திருமேனி புனித நீராடிய குளம் சோண தீர்த்தம். அந்த தீர்த்தத்தையொட்டி நிருருதி லிங்கம் அமைந்துள்ளது. கிரியான அரனை நிருருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது, கிரிவல மலையின் தென்மேற்கு திசையில், ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஓசையும் கேட்டது. அந்த இடத்தை நோக்கி நிருருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூபமாகத் தோன்றியதுதான் நிருருதி லிங்கம். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நிருதி லிங்கத்தை வழிபட, மழலை வரம் பெறுவர். மேஷ ராசிக்காரர்களை மேன்மை பெற வைக்கும் லிங்கம் இது.

   

 நீரின்றி அமையாது உலகு. நீருக்கு அதிபதி வருண பகவான். அக்னி வடிவான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்ணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டவர் வருண பகவான். அப்போது, கிரிவலப் பாதையின் ஒரு இடத்தில் வானம் தொடும் அளவுக்கு நீரூற்று உயர்ந்தது. அந்த புனித நீரை உடலில் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார் வருணன். விழிதிறந்தபோது, எதிரில் ஒளிமயமான சிவபெருமான் லிங்க வடிவாக அருள்பாலித்தார். அந்த லிங்கமே வருண லிங்கம். மகர, கும்ப ராசிக்காரர்கள் வழிபட, நல்ல பலன்களை பெறுவர் என்பது திண்ணம்.

ஒன்பது ஓட்டைகள் கொண்ட உடலுக்குள், உள்ளிருந்து உயிர்ப்பிக்கும் ஆற்றல் ஒருதுளி மூச்சுக் காற்றுக்குத்தான் உண்டு. உயிர் காற்றாய் உள்ளிருந்து மூச்சுக்காற்றை இயக்குவது இறைவன் திருவருள்தான் என்பதை வாயு லிங்கத்தை தரிசிக்கும்போது உணரலாம். மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடி வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது, ஆதி அண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயு பகவான் நிலை தடுமாறினார். அங்கு, பஞ்ச கிருத்திகா மலர்களின் நடுவே சுயம்புவாக லிங்க வடிவில் சிவன் காட்சியளித்தார். அதுவே வாயு லிங்கம் என அழைக்கப்படுகிறது. கடக ராசிக்காரர்கள் வழிபட, கைமேல் பலன் கிடைக்கும்.     

எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன், ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையாக கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது, விஷ்ணு, லட்சுமியுடன் சக்ரபாணியும் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் காட்சி குபேரனுக்கு கிடைத்தது. அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும் லிங்கம். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட, பலன் கிடைக்கும்.

நாமெல்லாம் சவம், அவன் ஒருவனே சிவம். மெய்யெல்லாம் சாம்பல் பூசி, மயானம் காக்கும் ஈசன், நிலையற்ற வாழ்வை உணர்த்துவதற்காக எழுந்தருளிய இடமே ஈசான்ய லிங்கம். கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது, ஈசான்ய மூலையில் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்புவாக லிங்கம் காட்சியளித்து. அதிகார நந்நீஸ்வரர், அண்ணாமலையாரை வணங்கிய இடமும் இதுவே. கிரிவலம் செல்லும் பக்தர்கள் நிறைவாக இந்த லிங்கத்தை தரிசிக்கலாம். பொருள் அல்ல, சிவ அருளே நிலையானது என்பதையும், மெய், மெய்யல்ல என்பதையும் உணர்த்தும் இடமே ஈசான்ய லிங்கம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட, வாழ்க்கை நல்ல நிலைக்கு உயரும்.அண்ணாமலையையும் அஷ்ட லிங்கங்களையும் தரிசித்தாலே போதும். சகல சௌபாக்கியங்களோடும் கூடிய வாழ்க்கை அமையும். வாழ்க்கையின் அர்த்தமும் மலைவலம் வரும்போது புரியும்.

Related Stories: