ரிஷப ராசிப் பெண்கள்

என்னோட ராசி நல்ல ராசி

ரிஷப ராசியில் அல்லது ரிஷப லக்னத்தில் அல்லது வைகாசி மாதத்தில் அல்லது அதற்கு ஒரு வாரம் சற்று முன் பின்னாக பிறந்த பெண் தோற்றத்தில் மட்டும் அல்ல நினைப்பிலும் நடப்பிலும் ஆளுமை மிகுந்தவளாக இருப்பார். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார். வீட்டு வாசலில் அல்லது வரவேற்பறையில் பெரிய சத்தம், சச்சரவு, பிரச்சனை நடந்தாலும் அமைதியாக அங்கு வந்து நின்று ஒரு நேர் பார்வை பார்ப்பார். சட்டென்று அங்கு ஓர் அமைதி நிலவும். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்குச் சில வார்த்தைகளில் தீர்வைச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிடுவார். சத்தம் அடங்கிவிடும்; பிரச்னை தீர்ந்துவிடும். அவருக்கு ஆரவாரம் ஆர்ப்பாட்டம் எல்லாம் பிடிக்காது. அமைதியாக நிதானமாகச் சிந்தித்து சரியாகத் திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டும் என்று விரும்புவார். மேஷ ராசிக்காரரைப் போல சட்டென்று கோபப்பட்டு ஆக்ரோஷமாக எதுவும் பேச மாட்டார். பதறாத காரியம் சிதறாது என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

தோற்றம்

ரிஷப ராசிப் பெண் நடுத்தர உயரம் தான். நடக்கும்போது அசையாமல் நடந்து வரும் அழகு; பார்வையிலோ உடல் அசைவிலோ எந்த உணர்ச்சியும் காட்டாத நிதானம்; சில சமயம் அசமந்தமாகக் கூட தோன்றும். அவர் நடையிலும் வேகம் இருக்காது. நிதானமாக உடல் குலுங்காமல் நடப்பார். நேர் கொண்ட பார்வை உள்ளவர். காதுகள் சற்று விறைப்பாக இருக்கும். மூக்கு நுனி சற்று உயர்ந்தது மாதிரி தோன்றும். பல விஷயங்களை இவர் கண்ணால் கவனிக்காமல் மூக்கால் அறிகிறாரோ என்று தோன்றும். வாசனை நிபுணர். எந்த ஒரு செயலையும் ஆளையும் வாசனையை வைத்தே முன்கூட்டி ஊகித்துவிடுவார். இவரது நடத்தை இவரை ஒரு ராணி போல உணரச் செய்யும்.

செயல்திறம்

ரிஷப ராசி பெண் செயல் திறம் மிக்கவர். நடந்ததைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தது என்ன என்று ஆலோசிக்கத் தொடங்குவார். வெட்டியாகப் புலம்பிக்கொண்டு இருக்க மாட்டார். நடந்த செயலுக்கு அடுத்தவரைக் குற்றம் சுமத்துவதும் அவர்கள் மீது பழி போடுவதும் இவரிடம் காணமுடியாது. சரி நடந்தது நடந்துவிட்டது. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று ஆக்கபூர்வமாகச் சிந்திப்பார்.

குடும்பத்தில் பொறுப்பும் பாசமும்

ரிஷப ராசிப் பெண் வீட்டுப் பொறுப்பை சிறு வயதிலேயே ஏற்றுக்கொண்டு செம்மையாகச் செயல்படுவர். பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும் அதைச் சீரோடும் சிறப்போடும் முன்னுக்குக் கொண்டு வருவார். மற்றவர்கள் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். தனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். இவருக்கு யாரும் நெகட்டிவாக பேசுவது பிடிக்காது. எதையும் இவர் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பார். அதன்படி செயலாற்றுவார். இவர் உழைப்பையும் தன் அறிவையும் நம்புகிறவர் என்பதால் சகுனம் சென்டிமென்ட்ஸ் எல்லாம் இவருக்கு கிடையாது. ரிஷப ராசிப் பெண் தமது குடும்ப நிறுவனம் நலிவடைகிறது என்றால் தன் குடும்ப நலம் தொய்வுறுகிறது என்றால் உடனே அதன் தலைமை பொறுப்பைத் தானே முன்வந்து ஏற்று அதனைச் சிறப்பாக நடத்தி முன்னேற்றுவார். இவருக்கு யாரையும் பழி வாங்கும் எண்ணமோ துரத்தியடிக்கும் எண்ணமோ இருக்காது. மிகுந்த கருணை உள்ளவர். ஆனால், தானம் தருமம் நிறைய செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. செய்வார். அதுவும் ஒரு அளவுதான். ஆனால், நல்ல பல ஆலோசனைகள் சொல்லிச் சிக்கனமாக வாழும் முறைகளைக் கற்றுக் கொடுப்பார்.

இயற்கை விரும்பி

ரிஷப ராசிப் பெண்ணுக்கு செயற்கை மணமூட்டிகள், செயற்கை நீரூற்று போன்றவை பிடிக்காது. இவருக்கு சென்ட் வாசனை, பாடி பெர்ஃப்யும் போன்றவை பிடிக்காது. ஆனால் நல்ல வாசமுள்ள பூக்கள் பிடிக்கும். வீட்டில் ப்ளாஸ்டிக் பூக்களை வைத்து அலங்காரம் செய்ய விரும்ப மாட்டார். மூலிகைச் செடி, வாசனை பூக்கள் செடி போன்றவற்றை வைத்திருப்பார். சிந்தட்டிக் துணியைவிட பட்டு மற்றும் பருத்தித் துணிகளையே அதிகம் விரும்புவார். இரண்டாயிரம் ரூபாய்க்கு சாரதி காட்டன் சேலை வாங்குவார். அது பார்க்க பளிச்சென்று இருக்காது. ஆனால், அவருக்கு கட்டுவதற்குச் சுகமாக இருக்கும். அதேசமயம் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு டிசைனர் சேலை வாங்கிக் கட்ட மாட்டார். அது அவருக்கு சுமையாக உறுத்தலாக இருக்கும். மென்மையான சில்க் சேலைகள் வாங்குவார். ஐம்பதாயிரம் கொடுத்து வாங்கினாலும் ஜரிகை இல்லாத பட்டுச் சேலை வாங்கி கட்டவே விரும்புவார். ஜரிகை அவருக்கு உறுத்தும் என்று மறுத்து விடுவார்.

அளவோடு செலவழித்து அளவோடு அனுபவித்து...

ரிஷப ராசிப் பெண்ணுக்கு ஃபேன் காற்று கூட வேகமாக வந்தால் பிடிக்காது, மென்மையாக தென்றலைப் போல காற்று வீச வேண்டும். பல்லைக் கட்டும் குளிரோ வியர்த்து ஒழுகும் வெயிலோ அவருக்கு பிடிக்காது. வியர்க்காமலும் குளிராமலும் இருக்கும் மிதமான தட்ப வெப்பத்தையே இவர் விரும்புவார். இதனால் இவர் பெரும்பாலும் சுகமான கிளைமேட் உள்ள இடங்களுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவார். கண் முன்னே விரிந்து கிடக்கும் கடலைப் பார்க்க ஆசைப்படுவார். உயரத்தில் இருந்து கொட்டும் அருவியைப் பார்க்க ஆசைப்படுவார். கிளி, மயில், சிட்டு போன்ற அழகான பறவைகளை பார்த்து ரசிப்பார். பாம்பு, முதலை, காண்டாமிருகம் போன்றவை இவருக்கு பிடிக்காது. ரோலர் கோஸ்டர், ஸ்கை டைவிங் போன்ற முரட்டுத்தனமான விளையாட்டுகளை விரும்ப மாட்டார். படகில் அமர்ந்தபடி ஏரியில் போவதை விரும்புவார். அந்நேரம் மெல்லிசை கீதங்களை பாடுவார். தண்ணீரில் கை விட்டு அள்ளியெறிந்து விளையாடுவார். மென்மையும் உறுதியும் படைத்தவர்.

உணவும் விருந்தும்...

ரிஷப ராசி பெண்கள் வீட்டில் சமைத்த நல்ல சத்துள்ள உணவுகளை உண்பதில் ஆர்வம் உள்ளவர்கள். இவர்கள் சமையலில் கெட்டிக்காரர்கள். சமையலுக்குள் ‘மையலை’ அடக்கியவர்கள் யாரையும் தன் ருசியான சமையலால் வசியப் படுத்தி விடுவார்கள். தன் கணவனுக்கு அடுப்பங்கரையே அரண்மனை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவர். அடிக்கடி வீட்டில் விருந்துகள் நடக்கும். ஊர் முக்கியஸ்தர்கள் தன் கணவரின் தொழில் பங்குதாரர்கள் என அனைவரையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து தன் விருந்துபசாரத்தில் மெய்மறக்க வைத்து விடுவார். ரிஷப் ராசிப் பெண்களின் கை பட்டால் பச்சை தண்ணீர் கூட பழரசமாய் இனிக்கும். விருந்துக்கு வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதில் இவருக்கு நிகர் இவரே எனலாம். வந்தவர்கள் முன்பு கம்பீரமாகவும் கண்ணியமாக்வும் கனிவாகவும் நடந்துகொள்வார்கள். தன்னை யாரும் பொது இடத்தில் உதாசீனப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார்கள், தனியாக அழைத்து குற்றங்குறைகளைக் கூறினால் ஏற்றுக்கொள்வர்.

ஆனால், பலர் முன்னிலையில் தன்னைக் குற்றப்படுத்தும்போது திருத்திக் கொள்கிறேன் என்று சொல்ல மாட்டார். அந்நேரம் எரிமலையாகச் சீறி

விடுவார். இவருக்குக் கோபம் வராது; வந்தால் வீட்டில் பிரளயம்தான் நடக்கும். இவர் சாப்பிடும்போது நிதானமாக சாப்பிடுவார். நின்று கொண்டே சாப்பிடுவது; நேரமாகிவிட்டது என்று மடமடவென்று அள்ளி விழுங்குவது இவருக்குப் பிடிக்காது. நேரமில்லை என்றால் போகும் வழியில் ரயிலிலோ பேருந்திலோ சாப்பிடுவார். ஆனால் அரக்க பறக்க சாப்பிட மாட்டார். இருப்பதைச் சாப்பிடுவோம் என்று மிச்சம் மீதியைச் சாப்பிட மாட்டார். எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் இவர் இரண்டு தோசையை சுட்டு வைத்துக்கொண்டு அதற்கு தனியாக ஒரு சுவையான சட்னி அரைத்து வைத்துக் கொண்டு நிதானமாகச் சாப்பிடுவார். ஆனால், உணவுப் பொருட்களை வீணாக்க மாட்டார். இருவர் என்றாலும் இருபது பேர் என்றாலும் இவரால் அளவாகச் சமைத்து அழகாகப் பரிமாறமுடியும்.

படிப்பும் பட்டமும்

ரிஷப ராசிப் பெண் அதிகளவில் படிக்கவோ பட்டம் பெறவோ விரும்ப மாட்டார். அவருக்கு அது தேவையும் இல்லை. சிலர் படிப்பார்கள். ஆனால் பட்டப்படிப்பு இல்லாமலேயே இவரால் ஒரு தொழிலை சிறப்பாக நடத்த இயலும். நடைமுறை யதார்த்தத்தை நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்ப குடும்பம் நடத்துவார். தம் தொழிலை நடத்துவார். அதுவும் சிறப்பாக நடத்துவார். எந்தத் தொழிலை இவர் செய்தாலும் அது நல்ல லாபத்துடன்தான் நடக்கும். அந்த அளவுக்கு சிறப்பாகச் செய்வார். எனவே, அனுபவக் கல்வி, இயற்கை ஞானம் போன்றவையே போதும். பட்டப்படிப்பு தேவைப்படாது. அப்படியே படித்தாலும் இவர் படித்தது ஒன்றாக இருக்கும் பார்க்கும் தொழில் வேறாக இருக்கும். இவர் எந்த நேரத்திலும் தடுமாற மாட்டார், ஸ்டெடியாக இருப்பார். இவர் மனதில் சஞ்சலமோ சங்கடமோ இருக்காது. மனதில் தெளிவும் செயலில் உறுதியும் காணப்படும். சிக்கலான சூழ்நிலைகளில் வீட்டில் இருந்தபடியோ வெளியில் சென்றோ வருமானம் ஈட்டி வீட்டினருக்கு கொடுத்து உதவி, குடும்பத்தைச் சிக்கலில் இருந்து மீட்டு விடுவார்.

குடும்பத் தலைவி

ரிஷப ராசிப் பெண் தாயாக அல்லது ஒரு குடும்பத் தலைவியாக இருக்கும்போது மிகுந்த கண்டிப்புடன் இருப்பார். இவருக்கு வீட்டில் இருக்கும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை பயப்படுவார்கள். அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் எடுத்த பொருளை திரும்பவும் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை முடித்துவிட வேண்டும். வேலைகளை ‘பெண்டிங்’ வைக்கக் கூடாது. எது செய்தாலும் அதை முறையாக ஒழுங்காகச் செய்ய வேண்டும். இவருக்குச் சாமியறையில் இருக்கும் சுத்தமும் நறுமணமும் குளியலறையிலும் இருக்க வேண்டும். மாலை வேளைகளில் இப்பெண்களின் வீடுகளில் விளக்கேற்றும் நேரத்தில் பக்திப்பாடல்கள் ஸ்லோகங்கள் ஒலிக்கக் கேட்கலாம். பாட்டு கேட்டுக்கொண்டே சமையல் செய்வது; தையல் தைப்பது இவர்களின் பழக்கம் ஆகும். வெறுமனே பொழுதைப் போக்கக்கூடாது எனக் கருதுவர். அதே சமயம் பாட்டு கேட்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே இரண்டையும் இணைத்து ஒன்றாகச் செய்வர்.

சொந்தத் தயாரிப்புகள்

இந்த ராசிப் பெண்கள் ‘ஷாம்பூ. க்ரீம் , லோஷன் போன்றவற்றைக் காட்டிலும் சீயக்காய், மஞ்சள் குங்குமம் என இயற்கை பொருட்களை விரும்பிப் பயன்படுத்துவர். ஹெர்பல் பொருட்களை விரும்பி வாங்குவர். ஊறுகாயில் இருந்து ஐஸ்க்ரீம் வரை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்துவர். வெளியே வாங்கி உண்பதை ஆதரிக்க மாட்டார்கள். பலர் தையல் படித்து தன் வீட்டாரின் துணிகளைத் தானே தைத்துக் கொடுப்பார். சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் மதிய நேரத்தில் சற்று உறங்க விரும்புவர். இதனால் இவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து சம்பாதிக்க விரும்புவர்.

தொழில்

ரிஷப ராசி பெண் அச்சகம், புத்தக வியாபாரம் ,விளம்பர ஏஜென்சி, இன்ஸ்யூரன்ஸ் ஏஜென்ட், துணிக்கடை, தையல் கடை, ஜெராக்ஸ் கடை, ஃபேன்ஸி ஸ்டோர் போன்ற ஒரே இடத்தில் இருந்து செய்யும் வேலைகளையே விரும்பிச் செய்வர். வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு மற்ற வேலையும் பார்க்க வேண்டும் என்பர். பொய் சூது, களவு, ஏமாற்று வேலைகளை ரிஷப ராசிக்காரர் செய்வது கிடையாது. தொழிலில் வாய்மை நேர்மை இருக்க வேண்டும் என்பர். தரம் நிரந்தரம் என்ற கொள்கையை பின்பற்றுவர்.

காதல்

சுக்கிரனின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ராசியில் பிறந்த இவர்களுக்கு ஆழமான அலட்டாத காதல் மிகவும் பிடிக்கும். மனோகாரனான சந்திரன் உச்சமாகும் ராசி ரிஷபம் என்பதால் இவர்கள் மன நிறைவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பர். காதல் என்பது மனமும் உடலும் இணைந்து செயல்பட வேண்டிய ஓர் அற்புத உணர்வு என்று இவர்கள் நம்புகின்றனர். எனவே, இவர்களிடம் காதலைச் சொல்வதோ காதலை மறுப்பதோ எளிதான செயல் அல்ல. ஆற அமர யோசித்துப் பல மாதங்கள் பல வருடங்கள் கழித்துக் கூட இவர் தன் காதலை வெளிப்படுத்தி உறுதி செய்யலாம். அதுவரை பொறுத்திருக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள். காதலில் இவர் மிகுந்த நேர்மையை எதிர்பார்ப்பார். நேர்மை தவறியவர்களை திருநீலகண்டர் மனைவியை போலத் தண்டித்து விடுவார். மொத்தத்தில் நிதானம் நேர்மை நிச்சயம் என்பது ரிஷப ராசிப் பெண்களின் லட்சியம்.

(தொடரும்)

Related Stories: