மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூண்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.7.2022) தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர  சிற்பக்கலைத் தூணை திறந்து வைத்தார்.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) கைவினைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தின் கற்சிற்ப கைவினைஞர்களின் கற்சிற்பங்களை உலகளவில் எடுத்து செல்லும் வகையில்  பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக “கைவினை சுற்றுலா கிராமம்” என்ற  திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய “சிற்பக்கலைத் தூண்” கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகைப் புரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், மாண்புமிகு சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ.வீ. மெய்யநாதன், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. மா. மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. உதயநிதி ஸ்டாலின், திரு.எஸ்.எஸ். பாலாஜி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை  முதன்மைச் செயலாளர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி வெ. ஷோபனா, இ.ஆ.ப.,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூண்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: