தப்ப முடியாது

அதிமுக ஆட்சி என்றாலே அது  ஊழல் காலம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதிமுக ஆட்சியில் நடந்ததெல்லாம்  கலெக்‌ஷன், கமிஷன், கரெப்ஷன் என்று இன்றைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வர்ணித்தது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்பது இப்போது நிரூபணமாகி வருகிறது. கடந்த 2020, டிசம்பர் 20ம் தேதி, 7 அமைச்சர்கள் மீதான  15 ஊழல் புகார்களை ஆளுநரிடம் நேரடியாக சென்று அளித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு, கடந்த 2021 பிப்ரவரி மாதம் 19ம் தேதி மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை துரைமுருகன் உள்ளிட்டோர் சென்று ஆளுநரிடம் கொடுத்தனர். ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,  சட்டப்பேரவை தேர்தலும் வந்தது, திமுகவும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆட்சி அமைத்த கையோடு பல்வேறு மக்கள் நல திட்டங்களை, அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதே நேரத்தில், அதிமுக மாஜிக்களின் ஊழலுக்கான ஆதாரங்களை தோண்டி துருவ தொடங்கியது லஞ்ச ஒழிப்பு துறை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கோலத்தில் நடவடிக்கை எடுக்காமல், ஊழல் மாஜிக்கள் சட்டத்தின் சந்து பொந்துகள் வழியாக தப்பி ஓடிவிடாமல் தடுக்க ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது லஞ்ச ஒழிப்பு துறை. ஒவ்வொரு அதிமுக மாஜி அமைச்சரின் ஆதி முதல் அந்தம் வரை கணக்கெடுத்து வைத்துக் கொண்டு களத்தில் இறங்கினர் அத்துறை அதிகாரிகள். கடந்த 2021ல் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் தெடர்ச்சியாக,  வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன்  வீடுகளில் சோதனை நடந்தது. இப்போது 7வதாக விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கி உள்ளவர்  ஆர்.காமராஜ். உணவுத் துறையில் இவர் அடித்த கொள்ளைகளுக்கு அளவே இல்லை என்பது புகார்.  பாமாயில், பருப்பு ஆகியவற்றை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும், நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து கொள்முதல் அனுமதி வழங்கியதாகவும் புகார்கள் வந்தன.ஊழலை உறுதிப்படுத்தும் வகையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காமராஜ், 500 சதவீதம் அளவுக்கு அதாவது, ₹58.44 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததற்கான அனைத்து ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. தைத்தொடர்ந்துதான் ரெய்டு நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு ஆதாரங்கள் புதிதாக கிடைத்துள்ளன. இன்னும் பல அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின்  பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வல்லவர் நம் முதல்வர். அந்த வகையில், விஜிலன்ஸ் சோதனைகள் நடைபெறுகிறது. ஊழல் செய்து சொத்து குவித்த அதிமுக மாஜிக்கள் ஒருவர் கூட தப்ப முடியாது என்பது திண்ணம்….

The post தப்ப முடியாது appeared first on Dinakaran.

Related Stories: