வேலையை நேசி

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 16

“அற்புதம்” “அதிசயம்” என்பவையெல்லாம் நாம் அன்றாடம்  பயன்படுத்தும் சொற்களாகிவிட்டன. கண்ணெதிரே காணக்கூடியது அதிசயம் என்றும் காண முடியாவிட்டாலும் உணரக்கூடியது அற்புதம் என்றும் சொல்வார்கள். நம் வாழ்வில் இவை அன்றாடம் நிகழ்கின்றன. பெரும்பாலானவற்றை நாம் கவனிப்பதே இல்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்த்திருக்கும் வாழ்க்கை - அதிசயம். அந்த வாழ்க்கையைப் பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை மலர்வித்தால் - அது அற்புதம்.தூய பக்தி - அற்புதங்களை மலர்த்தும். தன்னலமில்லாத தொண்டு - அற்புதங்களை மலர்த்தும். எதிர்பார்ப்பில்லாத அன்பு - அற்புதங்களை மலர்த்தும்.தொண்டர்களின் பெருமையைப் பேசுவது திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம். பெரியவர்களின் புராணம் அது. யார் பெரியவர் என்கிற கேள்விக்கு திருவள்ளுவர் விடை சொல்கிறார்.

“செயற்கரிய செய்வார்

பெரியர்”.

பெரியபுராணத்தில் வரும் திருத்தொண்டர்கள் தங்கள் அன்றாட வேலைகளையே தவம் போல் செய்தவர்கள். சொல்லப்போனால் அவர்கள் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்களின் தொகுப்பே பெரிய புராணம்.இந்தப் புராணங்களைப் படிப்பவர்கள் அந்த அற்புதங்களிலேயே அதிசயித்து நின்று போய்விடுவார்கள், ஆனால் பெரிய புராணத்தில் நாம் கண்டு வியக்க வேண்டியவை இறைவன் அருளிய அற்புதங்களை விட தொண்டர்களின் மனவுறுதி என்னும் அதிசயத்தைத்தான். இதனால் தான் அடியவர்களின் அருள்வரலாற்றை சொல்லத் தொடங்கும் முன்னரே மனுநீதிச்சோழன் வரலாற்றை சேக்கிழார் சொல்கிறார். இந்த வரலாற்றை கடந்த இதழிலேயே பார்த்தோம்.   தேர்க்காலில் அடிபட்டு கன்றுக்குட்டி இறந்ததால் தன் மகனை தேர்க்காலில் கொல்கிறான் அரசன். இறையருளால் கன்றும் பிழைக்கிறது. இளவரசனும் பிழைக்கிறான். இது எப்படி சாத்தியம் என்கிற வியப்பு வாசகருக்கு வரலாம். இந்த வியப்பிலேயே வாசகன் நின்று விடுவதை சேக்கிழார் விரும்பவில்லை. எனவே ஒரே வரியில் அந்த வியப்பைக் கடந்து காவியத்தைக் காண அவர் அடித்தளம் அமைக்கிறார்.

“யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுளதோ”

ஒருவருக்கு ரேஷன் அட்டை வாங்குவது அசாத்தியமான செயலாகத் தெரிகிறது. நெருங்கிய நண்பர் ஒருவரிடம் புலம்புகிறார். அந்த நண்பரின் மைத்துனர்தான் மாவட்ட வழங்கல் அலுவலர் என்று தெரிகிறது. சில நாட்களிலேயே வேலை நடந்து விடுகிறது.இவருக்கு அது அதிசயம். மாவட்ட அலுவலருக்கோ அது இயல்பான விஷயம். அரசு அலுவலருக்கே இந்த அதிசயம் சாத்தியமாகும் போது ஆண்டவனால் ஒன்று முடியாதா என்ன? எனவே அந்த அதிசயத்திலேயே நின்று விடாமல் சோழனின் உறுதியையும் தொண்டர்களின்

மனதிடத்தையும் பாருங்கள் என்று சொல்ல சேக்கிழார் விரும்புகிறார். எனவேதான்,

“யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுளதோ”

- என்கிறார். மன உறுதி எத்தனை மகத்தானது என்பதைத்தான் பெரியபுராணம் பெரிய செய்தியாக சொல்கிறது.

ஒரு மனிதர் பிறர் கண்களில் பெரியவராகத் தென்படுவதே இந்த உறுதியினால்தான். மேற்கொண்ட கொள்கையில் காட்டும் உறுதி சாதாரண மனிதரையும் சாதனை மனிதர் ஆக்குகிறது.வறுமை கால்களைப் பிணைக்கும் விலங்கு என்று பிறரைப் போலவே கருதியிருந்தால் கோமதி தங்கம் வென்றிருக்க வாய்ப்பின்றிப் போயிருக்கும்.ஆனால் வெற்றியாளர்கள் வாழ்வில் நிகழும் விசித்திரம் என்னவெனில் வெற்றி வரும் வரை அவர்களின் வியர்வையை உலகம் அறியாது. வென்ற பிறகு அந்த வியர்வைத் துளிகள் வைரக் கற்களின் விலைமதிப்பைப் பெறும்.அதுவரை தனக்குத்தானே தேறுதல் சொல்லி தன்னைத்தானே ஊக்குவித்து தொடர்ந்து முயற்சிப்பதுதான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை. ஒருசிலருக்கே நெருக்கடி நேரத்திலும் ஊக்கம் தரவும் உந்துசக்தியாகத் திகழவும் எவரேனும் இருப்பார்கள்.

“விடாமுயற்சி வரலாறாய் மாற ஒரே வழி வெற்றி வரும்வரை போராடுவதுதானா’’ என்று ஓர் இளைஞர் கேட்டார். அதற்கு வாழ்க்கை அனுபவம் மிகுந்த ஒருவர் பதில் சொன்னார், “அது மட்டும் போதாது; வெற்றி வந்த பிறகும் அதை தக்க வைக்கப் போராட வேண்டும்’’ என்று.வாழ்க்கை பூந்தோட்டமா அல்லது போராட்டமா என்று பட்டிமன்றங்கள் நடப்பதுண்டு. உணையில் பூந்தோட்டம் என்பது கூட போராட்டத்தின் விளைவுதான். ஒரு செடியின் வேர் தன்னை ஊன்றி நிலைநிறுத்தப் போராடியதனால்தான் பூக்கிறது.எனவே எந்தக் கனவுக்காக உழைக்கிறோமோ அந்தக் கனவை ஒரு இலட்சியமாக அமைத்து அந்தக் கனவை எட்டிப் பிடிக்கும் சவாலை சந்தோஷமாக எதிர்கொள்ளத் தெரிந்தால் போராட்டம் என்பதும் வலி மிகுந்ததாக இருக்காது. அது ஒரு விளையாட்டு போலவே தோன்றும். சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டாக இருக்கட்டும் அல்லது கால்பந்து போன்ற வெளியரங்க விளையாட்டாக இருக்கட்டும்.விளையாட்டின் வெற்றிஎன்பது வல்லமை மிக்க வியூகம் அமைப்பதில் இருக்கிறது.

வியூகத்தை திட்டமிடுவதிலும் அமைப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் இருக்கும் சவால்தான் விளையாட்டை சுவாரசியம் மிக்கதாய் ஆக்குகிறது. வாழ்க்கையைக் கூட அப்படி ஒரு சவாலாக எதிர்கொள்ளும் போது மிரட்சி தோன்றாது. மலர்ச்சியோடும் நம்பிக்கையோடும் எதிர்கொள்ள முடியும். சுய முன்னேற்றத் துறையில் நான் நிறைய நூல்கள் எழுதியிருப்பினும் பல பதிப்புகள் கண்ட நூலின் தலைப்பு, “வாழ்வில் போராடுங்கள்; வாழ்க்கையுடன் அல்ல”.வாழ்க்கையை தன் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்வில் வரும் போராட்டங்கள் ஒரு பொருட்டல்ல. காரணம் வாழ்வை அவர்கள் நேசிக்கிறார்கள். வாழ்வின் ஆழ அகலங்களை வியந்து பார்க்கிறார்கள். மனிதகுலம் அடைந்த மாட்சிமை பற்றிய மதிப்பும் பெருமிதமும் அவர்கள் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.கவிச்சக்கரவர்த்தி கம்பர் இந்த இயல்புக்கோர் அடையாளம். அவர் புதிதாக ஒரு கதையை கற்பனை செய்து எழுதியிருக்கலாம். ஆனால் ஆதிகவி வான்மீகர் அருளிய ராமாயணம் எனும் தொன்மத்தை மனதில் கொண்டு அதனை மறுவாசிப்புக்கு உட்படுத்தி தன் காவியத்தை அதன் மறு வார்ப்பாகவே வழங்கினார்.

பற்பல யுகங்களாய் மனித மனங்களில் ஊடுருவியிருக்கும் தொன்மத்தின் சாரத்தை புதுப்பித்து புதுப்பொலிவும் சேர்த்ததால் அவருடைய காவியம் அமர காவியமாக நிலைக்கிறது.அது மட்டுமின்றி ராமன் மனித வடிவில் வந்ததை “மானுடம் வென்றதம்மா” என்று கொண்டாடும் இடமும் கம்பரின் கவியுள்ளம் மனித குல மாண்பை உச்சி மேல் வைத்துக் கொண்டாடியதன் உன்னத அடையாளம்.ஒரு மனிதன் தன் பழைய மாண்புகள், மரபுகள் ஆகியவற்றின் நீட்சியாகத் திகழும் போதுதான் மாமனிதன் ஆகிறான். இது பழம்பெருமை பேசுதல் அல்ல. செம்மாந்த வாழ்விலிருந்து சாரம் எடுத்து இன்றைய வாழ்வில் புகுத்துவது.அதனால்தான் மகாகவி பாரதியார் ஒரு நீண்ட பட்டியலைக் கொடுக்கிறார்

“கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதைப்புனைந்ததும்

நம்பரும் திறலோடு ஒரு பாணினி

ஞாலம் மீதினில் இலக்கணம் கண்டதும்

உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்

ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்..”

- என்று அந்தப் பட்டியல் நீள்கிறது

ஒருவர் தன்னை நீண்ட நெடிய பாரம்பரியத்தின் நீட்சியாகக் காணும்போது பல நன்மைகள் நிகழ்கின்றன. தன் மரபணுக்களிலேயே அந்த மாண்புகள் கலந்திருப்பதை அவர்  உணர்கிறார். அதன் விளைவாய் தன்னை பரந்துபட்ட வரலாற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.உதாரணமாக நீங்கள் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அறையில் தைல சிகிச்சைக்காக காத்திருக்கிறீர்கள். நன்கு துவைக்கப்பட்ட ஆனால் பழுப்பேறிய துணி ஒன்று கிடக்கிறது. அதை அலட்சியமாகப் பார்க்கிறீர்கள். சற்று நேரத்தில் உலோகப் பாத்திரம் ஒன்றினை கொண்டு வந்து வைக்கிறார்கள். அதிலிருந்து மூலிகைகளின் நறுமணம் எழுகிறது. மிகுந்த நம்பிக்கையோடும் மதிப்போடும் அதனை பார்க்கிறீர்கள்.

சற்று நேரத்தில் மருத்துவர் வருகிறார். அந்தத் துணியை மூலிகைப்பாத்திரத்தில் நன்கு முக்கியெடுக்கிறார். அந்தத் துணியை சற்றேபிழிந்து உங்கள் உடலெங்கும் ஒத்தடம் கொடுக்கிறார். உங்கள் மேனியெங்கும் அந்தத் துணி இளஞ்சூட்டையும் இதத்தையும் பரப்புகிறது. நீங்கள் அலட்சியமாகப் பார்த்த துணி உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. ஏதோ ஆகாத துணி என்று கருதப்பட்டது இப்போது ஆயுர்வேதத்தின் சாரத்தை உங்களுக்குத் தருகிறது.ஒரு மனிதன் அந்தத் துணியைப் போல வெறுமனே கிடந்தால் எந்தப் பயனும் இல்லை. மாறாக தன் பழைய பெருமைகளின் சாரத்தில் நன்கு தோய்ந்தால் அந்த மனிதனின் மதிப்பும் மாண்பும் பல மடங்குகளாகப் பெருகுகின்றன.   

இந்த மண் யுகம் யுகமாய் ஏந்தி நின்ற விழுமங்களின் கொள்கலனாக நாம் மாறினால் அடுத்தவர் கண்களுக்கு  நாம் அட்சய பாத்திரமாகத் தெரிவோம். நம் திறனையும் தகுதியையும் உணராமல் பிறரையே சார்ந்து நின்றால் நாம் பிச்சைப் பாத்திரமாகத்தான் இருப்போம்.பெரிய புராணத்தில் அழகான சொற்றொடர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றில் ஒன்று, திருஞானசம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியபோது பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்த குலச்சிறை நாயனார் திருவாக்காக அமைந்துள்ளது.

“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்

இனி எதிர்காலத்தின் சிறப்பும்”

உண்மைதானே! சென்ற காலத்தின் சீரிய திறனை சிந்தையில் நிலைநிறுத்துபவர்களால்தான் எதிர்காலத்தை பெருமிதத்துடன் எதிர்கொள்ள இயலும். சென்றகாலம் பற்றிய நம் அபிப்பிராயமே நிகழ்காலத்தை தீர்மானிக்கிறது என்பதால் நிகழ்காலத்தில் நின்று எதிர்காலத்தை திட்டமிடும் போதே கடந்த காலம் பற்றிய தெளிவோடு வாழ்பவர் பேர் சொல்லும் மனிதராக பேசப்படுகிறார்.தங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பும் இருந்த மூதாதையர் பற்றி அறிந்து கொள்பவர்களுக்கு தங்கள் வீட்டு முற்றத்திலேயே எவ்வளவு வரலாற்று நாயகர்கள் வாழ்ந்தார்கள் என்கிற விபரம் புரியும்.அப்படி அறிந்து கொள்பவர்கள் அதன் வழியே ஊக்கம் பெற்று சமகால நாயகர்களாய் எழுச்சி கொண்டு சரித்திரத்தில் இடம் பிடிக்கவும் முடியும்.

(தொடரும்)

மரபின் மைந்தன் முத்தையா

Related Stories: