ஆராட்டு காணும் பகவதி அம்மை

*ஆராட்டு விழா - 18-5-2019

*கன்னியாகுமரி

சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று  தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர். மகிமை மிக்க தீர்த்தக்கட்டம் என கன்னியாகுமரியை வால்மீகி ராமாயணமும் வியாச பாரதமும் சிறப்பிக்கின்றன. ராமபிரான் இலங்கை செல்வதற்கு முன் கன்னியாகுமரியை வணங்கியதாக சேது புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடம் ஆதி சேது என அழைக்கப்படுகிறது. குமரியின் கடற்கரை மணல் ஏழு வித நிறங்களில் காணப்படுகிறது. பௌர்ணமி அன்று சூரிய அஸ்தமனமும், சந்திர உதயமும் ஒரு சேரத் தோன்றுவது மிக அபூர்வமான காட்சி. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் பகவதி அம்மன் கோயிலை பராமரித்துள்ளனர்.

பகன், முகன் எனும் அசுரர்களை அழித்த காளி கொல்கத்தாவிலும், கன்னியாகுமரியிலும் நிலை பெற்று பாரதத்தின் இரு எல்லைகளையும் காப்பதாக ஐதீகம். சுசீந்திரம் தாணுமாலயனுடனான தன் திருமணம் நின்று போனதால், சமைத்த சாதம் மணலாகப் போகும்படி பகவதி சபித்ததாக ஐதீகம். எனவே அரிசி, நொய், தவிடு போன்ற வடிவங்களில் இங்கு மணல் காணப்படுகிறது என்றெல்லாம் செவிவழிக் கதைகள் உண்டு.

இந்தக் கோயில் இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சில்லென வீசும் கடற்காற்றை எப்போதும் ஆலயத்தில் அனுபவித்து மகிழலாம்.  குமரியம்மன் தினமும் ஆலய உலா வருகிறாள். அம்பிகையின் அபிஷேகத்திற்கு தினமும்  2ம் பிராகாரத்திலுள்ள பாதாள கங்கை எனும் கிணற்றிலிருந்தும், விழாக்கால அபிஷேகத்திற்கு சக்ரத்திற்கு அருகேயுள்ள பால் கிணற்றிலிருந்தும் வெள்ளிக் குடங்களில் நீர் எடுத்து யானை மீது ஏற்றிச் செல்வது நடைமுறையில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று தேவிக்கு ஆராட்டு விழா நடக்கிறது. இந்த பிராகாரத்தில் உள்ள கோட்டையம்மன் விக்ரகம், மதுரை ராணி மங்கம்மா தனது அரண்மனையில் வைத்து பூஜித்தது என்கிறார்கள். குமரி பகவதியின் தோழிகள் இருவரில் ஒருத்தி கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும், மற்றவள் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் அருள்கிறார்கள்.

பகவதியின் காவல் தெய்வமாக பைரவர் அருள்கிறார். சக்தி பீடங்களில் முதலில் பைரவரை வழிபட்டு பிறகுதான் சக்தியை தரிசிப்பது மரபு. கன்னியாகுமரியும் சக்திபீடங்களுள் ஒன்று. பகவதி விக்ரகத்தின் மேற்பகுதி சொரசொரப்பாகக் காணப்படுகிறது. இதனை ருத்ராட்ச விக்ரக அமைப்பு என்பர். பகவதி வலக்கையில் ருத்ராட்ச மாலையுடனும், இடது கையை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக் கோலத்தில் அருள்கிறாள். தலை கிரீடத்தில் பிறைச் சந்திரனும், மூக்கில் பேரொளி வீசும் வைர மூக்குத்தியும் ஜொலிக்கின்றன. பனையேறும் தொழிலாளியான வீரமார்த்தாண்டவன், தான் கண்டெடுத்த அபூர்வமான ரத்தினக் கல்லை திருவிதாங்கூர் மன்னனிடம் தர, மன்னன் அதை மூக்குத்தியாக்கி பகவதிக்கு 18ம் நூற்றாண்டில் சமர்ப்பித்தார்.

இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கமென நினைத்த அந்நிய நாட்டுக் கப்பல் ஒன்று திசை தவறி ஒரு பாறையில் மோதி விபத்துக்குள்ளானதால், கிழக்கு வாசல் கதவு வருடத்தில் ஐந்து நாட்கள் (ஆராட்டு, திருக்கார்த்திகை, விஜயதசமி, இரண்டு அமாவாசைகள்) மட்டுமே திறக்கப்படுகிறது. பகவதியம்மன் ஆலயத்தையொட்டிய வடக்கு வீதியில் வீற்றிருக்கும் பத்ரகாளிக்கு வழிபாடு நடந்த பிறகே பகவதிக்கு எந்த விழாவையும் தொடங்குவது வழக்கம். ஒரு காலத்தில் மிருகபலி கொடுக்கப்பட்ட இத்தலத்தில் தற்போது மஞ்சள் நீரில் சுண்ணாம்பு கலந்து குருதி பூஜை செய்யப்படுகிறது. மழலை பாக்கியம் வேண்டுவோர் இந்தக் கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தின் புராணக் கதை மிகவும் சுவாரசியமானது. முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. அசுர குலத்தலைவனாக விளங்கிய பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும் முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தான். பாணாசுரனின் கொட்டத்தைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார்.

அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொட்டத்தை அடக்கி உலகில் அறமும் ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள். அதற்காக அவள் கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள். கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவனாகிய சிவபெருமான் கன்னியாகிய தேவி மீது காதல் கொண்டார். அவருக்கு தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தான். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார். கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததோர் விஷயமே! ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடிந்திருக்கிறது.

புதிய வியூகத்தால் தேவி - சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த ஓர்நாள், நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.

நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. போகும் வழியிலே வழுக்கம் பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினார். சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானோ பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறி விட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் சுசீந்திரம் திரும்பினார்.

சிவபெருமானுக்காகக் காத்திருந்த தேவி, அவர் வராததால் என்றும் கன்னியாகவே இருப்பதாக உறுதிபூண்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள்.

தேவியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற பாணாசுரனோ, கடுந்தவமிருக்கும் தேவியைக் காண வந்து, அவளை மணம் செய்யும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ மறுத்துவிட, பாணாசுரன் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர். அவர்களை வாழ்த்திய தேவி தன் தவத்தை மீண்டும் தொடர்ந்தாள். தேவி பாதம் பதித்துத் தவம் செய்த பாறை இன்னும் காணப்படுகிறது என கூறுவர்.  தேவியின் ஜ்வாஜ்வல்யமான வைரமூக்குத்தி உலகப் பிரசித்தம். தேவியின் தோழியரான தியாகசுந்தரியும், பால சுந்தரியும் வரப்பிரசாதியாக அருள்கின்றனர்.

 - ஜெயலட்சுமி

Related Stories: