ஒரே கோயிலில் முழு அருள் தரிசனம்!

தமிழ்நாட்டில் புதுமைக் கோயிலாகத் திகழ்கிறது, சூலூரிலுள்ள அறுபடை வீடு சுவாமிநாதசுவாமி திருக்கோயில். ஆமாம், தென்னாடு மற்றும் வடநாட்டு கட்டட, சிற்பக் கலைகளின் கலவையாக இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 46 அடி உயரத்தில் ஐந்து நிலைகளைக் கொண்டிருக்கிறது. மூலக் கோபுரமான மைய கோபுரம் 21 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஆறுபடை வீடுகளிலும் அருள்பாலிக்கும் முருகனுக்குத் தனித்தனி சந்நதிகள் உள்ளன. மூலவராக விளங்குபவர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி. திருச்சுற்றில் திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை முருகன் சந்நதிகள் அழகுற அமைந்துள்ளன. மேலும் விநாயகர், நவகிரகங்கள், காசி விசுவநாதர் உடனுறை விசாலாட்சி, 63 நாயன்மார்கள் ஆகியோர்க்கும் தனித் தனியே சந்நதிகள் உள்ளன.

இங்குள்ள காசி விசுவநாதர் உடனுறை விசாலாட்சி விக்ரகங்கள் காசியிலிருந்து பிரத்யேகமாகத் தரவழைக்கப்பட்டவை. அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் ஆகியோர் தனித்தனி திருவுருவங்கள் கொண்டு பொலிகிறார்கள். கோயில் மூலவருக்கு முன்பு அழகிய சரவணப் பொய்கை அமைந்திருக்கிறது. மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், வீரபாகுத் தேவர், துர்க்கையம்மன், பைரவர் ஆகிய கோஷ்ட தெய்வங்களும் எழுந்தருளி சிறப்பு செய்கின்றனர். 2003ம் ஆண்டு காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் திருக்கரங்களால் இக்கோயிலின் குடமுழுக்கு செய்விக்கப்பட்டது. திருக்கோயிலின் பொலிவு பார்ப்பவர்களின் கண்களைக் கவரும். முருகனை கண்டவுடன் அந்த அருள் நம்மை நிறைத்துச் செல்லும். வேண்டியவர்க்கு வேண்டும் வரம் தரும் முருகன், கோலப் பொலிவுடன் ஞானம் வழங்கி வருகிறான்.

மாதந்தோறும் கிருத்திகை அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. முருகவேளின் பூசைப் பணிகளை காமாட்சிபுரி ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான்களும், சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்றவர்களும் செய்து வருகிறார்கள். தினமும் ஆறுகால பூசை நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாடு, கிருத்திகை வழிபாடு, சஷ்டி ஆகிய தினங்களில் விசேஷ வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்தசஷ்டி ஆகிய நாட்களில் பெரிய உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இக்கோயிலிலேயே ஏராளமானோர் திருமணம் செய்து கொள்கின்றனர். கோவை – திருச்சி சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

Related Stories: