எண் கணிதம்
பொதுவாக எண் கணிதம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பிறவி எண் என்பது பிறந்த தேதியாகும். விதி எண் என்பது தேதி மாதம் வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையின் எண்ணாகும். பிறவி எண், விதி எண் ஆகிய இரண்டு எண்ணின் நாயகன் ஒரே கிரகமாக இருந்து, அக்கிரகம் யோககராக இருந்துவிட்டால், மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவர்களுக்கு காத்திருக்கிறது. அந்த எண்ணின் நாயகன் வலிமை பெற்று இருப்பது மிக அவசியமாகும். மேற்கூறிய எண் கணிதம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், பிறந்த தேதியின் கர்மா எண் என்று ஒன்று உள்ளது. அதைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த கர்மா எண்தான் உங்களது சுய ரூபத்தை காட்டக் கூடியதாக இருக்கும். உங்களது பிறப்பின் நோக்கம், அந்த கர்மா எண்ணை சுற்றியதாகவே இருக்கும். உதாரணத்திற்கு;
ஒருவர் 07-11-1983ல் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் பிறவி எண்: 7, அவரின் விதி எண்: 7+1+1+1+9+8+3= 30 (3+0=3)இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவரின் கர்மா எண் என்ன என்பதை எப்படி கண்டறிவது?கர்மா எண்: 7+3= 10×2=20 (2+0=2) 2 என்பது அவரின் கர்மா எண். சந்திரனின் எண் ஆகும். கர்மா எண் கண்டறிய ஒருவரின் பிறவி எண் மற்றும் விதி எண்ணை கூட்ட வேண்டும். வந்த தொகையை 2 ஆல் பெருக்க வேண்டும். பெருக்கி வந்த தொகைதான் கர்மா எண் ஆகும். பெருக்கி வந்த தொகை இரண்டு இலக்க எண்ணாக இருந்தால், அதை ஒற்றை இலக்க எண்ணாக மாற்ற வேண்டும். பிறவி எண், விதி எண் ஆகியவற்றை கூட்டி 2 ஆல் பெருக்குகிறோம். இங்கே இந்த எண் 2 என்பது பொதுவான எண். அது மாறாதது. எல்லாவற்றிற்கும் அது பொதுவானது. உதாரணத்திற்கு, நாம் கொடுத்த பிறந்த தேதியில் பிறந்தவர் சந்திரனின் கர்மா எண்ணில் பிறந்தவர். சந்திர பகவானின் வழிபாடு இவருக்கு சிறப்பைத் தரும். கர்மா எண் 2ல் பிறந்த இவர், தாயின் மீது அளவற்ற அன்பு உடையவர்.
எந்தெந்த கர்மா எண்ணில் பிறந்தவர்கள் யாரை வழிபட்டால் சிறப்பு என்பதைப் பற்றி பார்ப்போம்
கர்மா எண்: 1
சிவவழிபாடு செய்ய வேண்டும். கண்டிப்பாக சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும். வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இவர்கள் தலைமை பண்பு மிக்கவர்கள். அரசியல் ஈடுபாடு உண்டு, அரசு அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள்.
கர்மா எண்: 2
பார்வதி தேவி வழிபாடு செய்ய வேண்டும். கடல் மார்க்கம் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபடுவது சாலச் சிறந்தது. இரக்ககுணம் அதிகம் இருக்கும்.
கர்மா எண்: 3
ஐதீகத்தை கடைபிடிப்பவராக இருப்பவர்கள். ஆசிரியர் தொழில் மேற்கொள்வார்கள். தவிர, பத்திரிக்கை துறையில் ஆசிரியர் அந்தஸ்து நிலையில் இருப்பார்கள்.இவர்கள் நவகிரக குரு பகவான் வழிபாடு, ஞானகுரு தட்சிணாமூர்த்தி ஆகியோரை வழிபட வேண்டும் மற்றும் குருவிற்கெல்லாம் குருவாகிய பிரம்மதேவர் வழிபாடும் சிறப்பைத் தரும்.
கர்மா எண்: 4
போகக்காரர்கள் எதையும் பிரம்மாண்டமாக யோசிக்கக் கூடியவர்கள். பணம் சம்பாதிக்கும் யோசனை அதிகம் இருக்கும். உக்கிர காளி தேவி, துர்க்கை வழிபாடு சிறப்பைத் தரும்.
கர்மா எண்: 5
கல்வியில் தேர்ந்தவர்கள். புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும். வியாபாரத்தில் நாட்டம் உண்டு. பெருமாள் வழிபாடு செய்ய இவர்களுக்கு யோகம் அதிகம் ஏற்படும்.
கர்மா எண்: 6
மகாலட்சுமி வழிபாடு சிறப்பைத் தரும். சுகபோக வாழ்வு உடையவர்கள்.
கர்மா எண்: 7
அனுமார் வழிபாடு சிறப்பைத் தரும். விநாயகரை தொடர்ந்து வணங்குவதன் மூலம் மிகப்பெரிய யோகங்களை அடையலாம். சித்ரகுப்தர் வழிபாடு நல்லது. விரக்தி மனப்பான்மை உடையவர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு இருக்கும்.
கர்மா எண்: 8
எல்லை காவல் தெய்வத்தை வணங்க வேண்டும். கருப்பசாமி அய்யனாரை வணங்குவது சாலச் சிறந்தது. கடின உழைப்பாளிகள்.
கர்மா எண்: 9
முருகனை வழிபட வேண்டும். கோபம் அதிகம் இருக்கும். ஆனால் குணம் உண்டு. தைரியமானவர்கள்.
