பகுதி 3
அவர்கள் போனதும், பாகவதரின் மனைவி தன் மனதில் உள்ளதைச் சொல்லத் தொடங்கினார்; ‘‘இவ்வளவு சீக்கிரம், ஆலோசிக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டீர்களே! இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அங்கே வாலாஜாபேட்டையில் வசதிகள் எப்படியிருக்குமோ? கஷ்டமோ நஷ்டமோ, அய்யம் பேட்டையிலேயே இருப்பதுதான், சௌகரியமாக இருக்கும். சொந்த பந்தங்கள், பழகியவர்கள், இவர்களையெல்லாம் விட்டுப்பிரிய வேண்டாம் என்று நினைக்கிறேன்.
ஆகையால் வாலாஜா பேட்டைக்குப் போவதைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள்!’’ என வேண்டினார். அந்தப் பெண்மணியின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் சொல்வதுதான் சரி! ஆனால், பாகவதரின் மனோநிலையையும் பார்க்க வேண்டுமல்லவா! பார்க்கலாம் வாருங்கள்!மனைவியின் வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்ட பாகவதர், ‘‘அம்மா! நீ சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இவர்களை எல்லாம் பிரிய வேண்டுமென்பது, ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் கட்டளையாக இருக்கும்போது, நானோ நீயோ அதை மீற முடியுமா? மேலும், இங்குள்ள உற்றார் உறவினரெல்லாம், குடும்பம் என ஆனபின்பு, அவரவர்க் கென்று கடமையும் பொறுப்பும் வந்து சேர்ந்துவிடும்.
இனிமேல், ஏதாவது நாள் கிழமை விசேஷம் என்றால்தான் ஒன்று சேர்வார்கள் அவ்வளவுதான்! என்னை முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்றுவரை சங்கீதம் கற்றேன். சங்கீதத்தின் பலவிதமான நிலைகளையும், ஆழம் எவ்வளவு உள்ளதோ அதுவரையில் கற்றேன். அப்படி உழைத்த உழைப்பிற்குத் தகுந்த மதிப்போ, சங்கீதத்தைக்கேட்டு ரசிப்பவர்களோ, இங்கே நம் தஞ்சையில் இல்லாமல் போய்விட்டதே! வட ஆற்காடில் உள்ளவர்கள், சங்கீதத்தை நன்றாகக் கேட்டு அனுபவிப்பதோடு, கௌரவமும் அளிக்கிறார்கள்.
இதைப் பலமுறை, நானே என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். ஆகையால், வாலாஜாபேட்டைக்குப் போவது என்பது முடிவான விஷயம். நாளைக்கே நான்போய் குருநாதர், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளிடம், இத்தகவலைத் தெரிவித்து, அவரிடம் அனுமதி பெற்று வருகிறேன். நாளை பாடம் படிக்கவரும் சிஷ்யர்களிடமும் இத்தகவலைச் சொல்லி, ஆசீர்வாதம் செய்து விட்டுப் புறப்பட்டு விடலாம். புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்! எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்களையெல்லாம் எடுத்து மூட்டை கட்டிவை!’’ என்று விரிவாகவே சொல்லி முடித்தார்.
அத்துடன், பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதிலும் சொந்த பந்தங்களிடம் விடை பெறுவதிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார், பாகவதர். மறுநாள் அதிகாலையிலேயே, பாகவதர் தன் மனைவியுடன் அய்யம்பேட்டை அருகில் ஓடிய குடமுருட்டி நதியில் நீராடினார். திருமண் அணிந்து சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங் களை முடித்துக் கொண்டு, நேரே ஸ்ரீ கோதண்ட ராமர் சந்நதிக்குச் சென்று, வழிபட்டார். சுவாமியைத் துதித்து ‘பரவசமாயனு’ எனும் கீர்த்தனையைப் பாடித் துதித்தார்.
‘‘பகவானே! அடியேன் வாலாஜாபேட்டைக்கு வாசம் செய்யப் புறப்படுகிறேன். எப்போதும் அடியேன் உள்ளத்தில் இருந்து அருள் செய்!’’ என்று பிரார்த்தித்தார். அடுத்து மகாமண்டபம் வந்ததும்,
மனைவியை அழைத்து, ‘‘கருடாழ்வார் சந்நதி அருகில் உள்ள `‘ராணி ஜோரா பாய்’’ சிலையை நன்றாகப் பார்! ராணியின் விருப்பத்தை பகவான் நிறைவேற்றி வைத்தார். அருள் புரிந்த அந்த பகவானுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும். எந்தப் பெயரில் எந்தப் புண்ணிய பூமியில் கட்டுவது?’’ என்ற சிந்தனையில், தஞ்சையில் இருந்து தேடியபடி இங்கு வந்தார்.
அதே நேரம்; நம் முன்னோர்கள் ஏகாதசி பஜனை செய்தபடி, ஸ்ரீகோதண்டராமர் பேரில் கீர்த்தனைகள் பாடியபடி வந்து கொண்டிருந்தார்கள். ராணியும் பஜனைக்குழுவும், காலை நேரத்தில் இங்கே சந்தித்தார்கள். பார்த்தார் அரசி; பாகவதர்கள் பாடிய ‘ஸ்ரீகோதண்ட ராமர்’ பேரிலேயே, இந்த இடத்தில் கோயிலைக்கட்டி, இந்தப் பகுதிக்கும் ‘ஸ்ரீ ராமசந்திரபுரம்’ எனப் பெயர் சூட்டினார். அந்தப் புண்ணியசாலி ராணி ஜோராபாயின் சிலைதான் இது. ராணி கோயில் கட்டினார். நானோ, என் உடம்பையே கோயிலாகக் கொண்டு, உள்ளத்தில் ஸ்ரீராமசந்திர மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்திருக்கிறேன் என்று விவரித்தார்.
அதன்பின், ஸ்ரீராஜகோபால சுவாமி சந்நதி சென்ற பாகவதர், ‘‘ரா.. ரா.. வாசுதேவ குமாரா’’ எனும் கீர்த்தனை பாடி, வழிபட்டு சந்நதியை மும்முறை வலம் வந்தார். வீடு திரும்பியபின். இல்லத்தில் செய்யவேண்டிய வழிபாட்டினை முடித்துக் கொண்டு, மனைவியிடம், ‘‘திருவையாறு போய் குருநாதரிடம் சொல்லி, அனுமதி பெற்று வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுத் திருவையாறு சென்றார். அங்கே குருநாதரை நமஸ்கரித்து, ‘‘குடும்பத்தோடு வாலாஜாபேட்டைபோய், அங்கேயே வாசம் செய்ய விரும்புகிறேன். அடியேனை ஆசீர்வதியுங்கள்! அவ்வப்போது இங்கு வந்து போவேன். தாங்கள் எப்போது அழைத்தாலும் வந்து செல்வேன்’’ என்ற பாகவதர், குருநாதரான ஸ்ரீதியாகராஜ சுவாமிகளை குரு ஸ்தோத்திர அஷ்டகத்தால் துதி செய்துவிட்டு, ‘தாங்களும் வாலாஜாபேட்டைக்கு விஜயம் செய்ய வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.
குருநாதர், ‘‘ஏற்றுக் கொள்கிறேன். இதைக் காரணமாகக் கொண்டு, திருமலை யாத்திரையும் முடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வருகிறோம்’’ என்று சொல்லி, ஆசீர்வதித்தார்.மறுபடியும் குருநாதரை வணங்கிய பாகவதர், கண்கள் கலங்கப் பிரியாவிடை பெற்றார். வீடு திரும்பிய பாகவதர், மாலை நேரத்தில் சங்கீத வகுப்பிற்கு வந்த சீடர்களுக்கு மங்கல ஆசி கூறிவிட்டு, ‘‘நாளை காலை வாலாஜாப் பேட்டைக்குப் புறப்படுகிறேன். இனிமேல் வாசம் அங்குதான். சங்கீதத்தை நல்லமுறையில் பயிற்சி செய்து வாருங்கள்!’’ என்றார்.
அதன்பின், தன் பிரதம சீடரான வேங்கடசுப்பு என்பவரிடம், ‘‘உன்னால் எனக்குப் பெருமைசேரும் வகையில், நீ சங்கீதத்தில் பிரபலம் அடைவாய். பல மொழிகளிலும் பாடு! ஹடயோகப் பயிற்சியை முறைப்படி செய்து வா! ராஜகோபால சுவாமி சந்நதியில், சந்நதி கொண்டுள்ள பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வரப்பிரசாதி. ஏதாவது தடையோ இடையூறோ நேர்ந்தால், அவரை உபாசிக்கத் தவறாதே! சீடர்கள் எல்லாரும் வாலாஜாப் பேட்டைக்கு வாருங்கள்! நானும் அவ்வப்போது இங்கு வந்து போவேன்’’ என்று சொல்லி விடை பெற்றார்.சொந்த பந்தங்களிடமும் விடைபெற்று பாகவதர், வாலாஜாப்பேட்டைக்குப் புறப்பட்டார்.
வாலாஜாப்பேட்டையை அடைந்த பாகவதர், அங்கே பெரிய சௌராஷ்டிரத் தெருவில் அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் இல்லத்தில் வசிக்கத் தொடங்கினார். புரோஹிதம் செய்வதுடன், சிறுவர் – சிறுமிகளுக்குத் தமிழ், தெலுங்கு, ஜோதிடம் முதலானவைகளைப் போதித்து வந்ததுடன், கல்வியும் கற்பித்து வந்தார் பாகவதர். நாள் தோறும் இரவு நேரத்தில், சங்கீத பாடத்தையும் இலவசமாகப் போதித்தார்.
அத்துடன் தம் வீட்டிலேயே ஏகாதசி பஜனையைத் தொடங்கி, ‘தொடர்ந்து நடத்திவரலானார். வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சீபுரம் என பல ஊர்களிலும் இருந்து, பாகவதர்கள் – பாடகர்கள் – வாத்தியக் கலைஞர்கள் எனப் பலரும் வந்து, பாகவதரின் கீர்த்தனைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். பாகவதரின் புகழ் பரவத் தொடங்கியது.புகழைக் கொடுத்த தெய்வம், பொருளையும் கொடுக்கத் தீர்மானித்ததைப் போல, ஒரு நிகழ்ச்சி அரங்கேறியது.சித்தூர் மாவட்டத்தில் ‘கார்வேட்’ எனும் நகரில் உள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலும், ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோயிலும் மிகவும் பழமையானவைகள்.
அவற்றில் ஆண்டு முழுதும் அவ்வப்போது ஏதாவது உற்சவங்கள் நடந்து கொண்டே இருக்கும். லட்சக்கணக்கானவர்கள் கூடிக்களிப்பார்கள். அக்கோயில்கள், கார்வேட் நகர் ஜமீன்தார் பொறுப்பில் இருந்தன. வாலாஜாப்பேட்டை பாகவதரின் சங்கீதத்திறமையையும் அவரது நற்குணச் செயல்களையும் கேட்டு வியந்தார், ஜமீன்தார். உடனே அவர், கோயிலில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்கும், அதைத் தொடர்ந்து நடக்கும் தெப்போற்சவத்திற்கும், பாகவதரின் கச்சேரியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தார். அவ்வளவு காலமும் கேட்டிராத வகையில், சங்கீதக்கச்சேரி அமைந்ததால், இரவு வெகுநேரமாகியும், கூட்டத்தில் ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. அதைக்கண்டு ஜமீன்தாரே பிரமிப்பில் ஆழ்ந்தார். விளைவு? மேலும், இரண்டு நாட்களுக்கு பாகவதரின் கச்சேரியை நீட்டித்துவிட்டார். கூட்டமும் அலை மோதியது.
ஜமீன்தார் பாகவதருக்குப் பணமுடிப்பு அளித்து மரியாதை செய்தார். தம் மக்களுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுக்க குரு நாதராக பாகவதரை நியமித்ததுடன், தன் ஆஸ்தான வித்வானாகவும் நியமித்தார். கூடவே அப்பதவிக்கான சால்வைகள், பட்டயங்கள், பணமுடிப்பு என அளித்து, அதை அறிவிக்கவும் செய்தார். இறைவன் கருணையை எண்ணி இதயம் விம்மியது பாகவதருக்கு. ஜமீன்தார் அளித்த இரு பணமுடிப்புகள், சால்வைகள், பட்டயங்கள் என அனைத்தையும் மனைவியின் கைகளில் கொடுத்து, ‘‘ஸ்ரீராமசந்திர மூர்த்தி நம்மைக்கை விடவில்லை. பூஜை அறையில் பகவான் சந்நதியில் வைத்து நமஸ்காரம் செய்யலாம் வா!’’ என்றார். அதன்படியே சமர்ப்பணம் செய்து, அர்ச்சனையும் செய்தார்.
வாரம் இரு நாட்கள் சங்கீத வகுப்பு. அதற்காகப் பாகவதர் வந்துபோக, ஓர் அழகான சாரட்டு வண்டியையும் ஏற்பாடு செய்து தந்தார், ஜமீன்தார். அதன்படியே பாகவதர் போனார். ஜமீன் வம்ச மக்களுக்கு சங்கீத ஆச்சாரியராக விளங்கி, நல்ல முறையில் சங்கீதம் சொல்லிக் கொடுத்துத் திரும்பினார். சௌராஷ்டிர சமூக தர்மவான்கள் பலர், பாகவதரின் குடும்ப நிர்வாகத்திற்கான தேவைகள் அனைத்தையும் செய்தார்கள். நாட்கள் ஆனந்தமாகக் கழிந்தன. இறைவன் அருளால், பாகவதரின் மனைவி கருவுற்றார். தாரண வருடம், சித்திரைமாதம், பத்தொன்பதாம் நாள், வைசாக சுத்த திருவாதிரை, மிதுன லக்னம், காலை 9.12 மணியளவில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் பாகவதர் மனைவி.
குழந்தைககுக் ‘கிருஷ்ண ஸ்வாமி’ எனப் பெயர் சூட்டினார்கள். வாலாஜாப் பேட்டையில் இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய பாகவதரை, அந்த ஊர்ப்பெயரை வைத்தே ‘வாலாஜாப் பேட்டை வேங்கடரமண பாகவதர்’ என்றே அழைத்தார்கள்.சில நாதஸ்வர வித்வான்களும் வந்து, பாகவதரிடம் சங்கீதம் கற்றார்கள். அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்தார் பாகவதர். திருமண வைபவங்களில், எந்தெந்த காலத்தில் என்னென்ன ராகங்கள் வாசிக்க வேண்டும் என்பதை வரிசைப் படுத்தி, அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்.
* மணமக்கள் ஊர்வல சமயத்தில் – வசந்தா, சௌராஷ்டிரம், சங்கராபரணம், கல்யாணி.
* மாப்பிள்ளை அழைப்பு நேரத்தில் – தோடி, காம்போதி, கரகர ப்ரியா.
* முஹூர்த்தன்று காலையில் – பூபாளம், பிலஹரி, கேதாரம்.
* முஹூர்த்தத்திற்கு முன்னால் – தன்யாசி, நாராயணி.
* முஹூர்த்த ஆரம்பத்தில் – நாட்டைகுறிஞ்சி, சகானா.
* மாங்கல்யம் சூட்டும்போது – ஆனந்தபைரவி, கல்யாணி, தன்யாசி.
அதிகாலையில் – பூபாளம், சௌராஷ்டிரம், சாவேரி, ஹிந்தோளம், தேவகாந்தாரி.
பகல் நேரங்களில் – காபி, சங்கராபரணம், சாரங்கா, நீலாம்பரி, காம்போதி, மோஹனம்.
இரவு நேரங்களில் – ஆஹிரி, சலங்கம், பங்களா, பௌளி, கானடா, மஞ்சரி, மனோகரி.
பாகவதர் சங்கீதத்தில் மட்டுமல்லாது, மொழி ஆற்றலிலும் தலைசிறந்தவர். சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், பைசாகி, ஹிந்தி, பாலி, உத்கலம், தமிழ் எனப் பலமொழிகளிலும் பாண்டித்யம் (திறமை) பெற்றிருந்தார்.உத்தமோத்தமர்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டிய, ஸ்ரீ வேங்கடரமண பாகவதர், 93-வது வயதில், பவ வருடம், மார்கழி மாதம் இரண்டாம் நாள், வளர்பிறை சப்தமி, சதய நட்சத்திரம், செவ்வாய்க்கிழமையன்று (15-12-1874) வாலாஜாப் பேட்டையில் முக்தியடைந்தார்.
(சேலத்தில் இருந்து வெளியிடப்பட்ட ‘வரகவி ஸ்ரீமத் வேங்கட ஸூரி சுவாமிகள் சம்பூர்ண திவ்விய சரித்திரம்’ எனும் நூலில் இந்த அபூர்வமான தகவல் முதன்முதலாக வெளியாகி உள்ளது)
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சீடர்களில் மிகவும் முக்கியமானவர்கள்; வாலாஜாப்பேட்டை ஸ்ரீவேங்கடரமண பாகவதரும் அவர் மகன் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி பாகவதரும். ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் பாடல்களைக்காத்து, அவற்றை மக்களிடையே பரவச்செய்து, கர்நாடக இசைத் துறைக்கே, பெரும்பணியாற்றியவர்கள் இந்த இருவரும்.
ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் அபூர்வமான தகவல்களும், கீர்த்தனைகளும் இந்த வாலாஜாப்பேட்டை சீடர்களின் மூலமாகத்தான் வெளிப்பட்டன. ஸ்ரீ வேங்கடரமண பாகவதரின் மகனான ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பாகவதரைப் பற்றிய அபூர்வமான தகவலும் ஒன்று உண்டு.ஸ்ரீகிருஷ்ணசுவாமி பாகவதர், நாள்தோறும் முற்பகல் வேளையில், ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் பத்து கீர்த்தனைகளைப் பாடிவிட்டு, அதன்பிறகே உண்பார். ஒருநாள் பாடப்பட்ட பாடல்கள் மறுநாள் இடம்பெறாது. இந்த முறைப்படி ஓராண்டில் மூவாயிரத்து அறுநூறு பாடல்களைச் சாதகம் செய்து, ஸ்ரீ தியாக ராஜசுவாமிகளின் கீர்த்தனைகள் அனைத்திலும் அழுத்தமான தொடர்பு கொண்டவர்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பாடல்களைப் பாடும் கர்நாடக சங்கீத வித்வான்கள் வீட்டுப் பூஜை அறையில், கண்டிப்பாக ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் படம் இடம் பெற்றிருக்கும். அந்தப் படத்துடன் மறவாமல் தவறாமல் வைக்கப்பட வேண்டிய படங்கள், வாலாஜாப்பேட்டை ஸ்ரீ வேங்கடரமண பாகவதர்; வாலாஜாப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பாகவதர் ஆகிய இருவரின் படங்கள்!
V.R.சுந்தரி
