வைகாசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் காணும் ஜம்புகேஸ்வரர்

* திருவானைக்காவல் - திருச்சி
Advertising
Advertising

திருவானைக்காவல் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச் சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருட்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

இங்குள்ள அகிலாண்டேஸ்வரி கம்பீரமான, திருத்தோற்றமுடையவள்; கருணை பொழிகின்ற திருமுக நாயகி; வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருள்பவள். அகிலாண்டேஸ்வரி, இத்தலத்து ஈசனான ஜம்புகேஸ்வரரை உச்சிக் காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே, மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேள தாளம் முழங்க சிவன் சந்நதிக்குச் செல்வார்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதாவிற்கு பூஜை செய்துவிட்டு அம்பாள் சந்நதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். இதுவும் இத்தல விசேஷமாகும். ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே,

இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள்.

ஆதிகாலத்தில் இங்குள்ள அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர்தான் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

அதிகாலையில் கோ பூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன. இங்கிருக்கும் ஜம்புலிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட காவிரியிலிருந்து சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்து அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தாள். மற்றொரு சந்நதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது.

 இந்த லிங்கத்தை வழிபட்டு, சிவனருளால் அழகாபுரிக்கு அதிபதியானான் குபேரன்.சுவாமி சந்நதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.

பிரம்மாவிற்கு உண்டான தோஷத்தை நிவர்த்தி செய்ய சிவன் கைலாயத்திலிருந்து இங்கு வந்ததாக ஐதீகம். அப்போது அம்பிகை தானும் வருவதாகக் கூறினாள். சிவன் அம்பிகையிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகையோ சிவனிடம், ‘‘நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!’’ என்றாள்.

சிவனும் ஏற்றுக் கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவ மன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்திற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா, அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானத்திற்கு எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்தத் துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவ தரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம்.

ஆனால், இங்கு வைகாசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு ஈசன் சந்நதியில் எப்போதும் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, அன்னாபிஷேகம் செய்வது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே, அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். அப்போது பால் மாங்காய் நிவேதனம் நடைபெறும். ஐப்பசி பௌர்ணமியில் லிங்கத்திற்கு விபூதி காப்பிடப்படுகிறது.

- ந. பரணிகுமார்

Related Stories: