இகழ்ச்சி மறு!

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 15

Advertising
Advertising

மரபின் மைந்தன் முத்தையா

இந்த உலகம் தன்னை எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனை இருக்கும். இந்த உலகம் மனிதர்களை அவர்களின் செயல்களால் நினைவு வைத்துக் கொள்கிறது அதைவிட முக்கியமாய் அவர்களின் வாழ்வியல் விழுமங்கள் வழி நினைவு வைத்துக் கொள்கிறது.இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் காந்தியடிகள்தானா என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் வரலாம். காந்தியின் அமைதிப் போக்கு நேதாஜியின் புரட்சி ஆயிரமாயிரம் தியாகிகள் சிந்திய ரத்தம் போன்றவையெல்லாம் காரணங்கள் என்று வாதிட இடமிருக்கிறது அதில் நியாயமும் இருக்கிறது.ஆனால், ஒரு போராட்டத்திற்கு அரசியல் சார்ந்த போராட்டத்திற்கு அகிம்சை சத்தியாக்கிரகம் போன்ற வடிவங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மக்கள் மயம் ஆக்கியவர் மகாத்மா காந்தியடிகள்.

அவருக்கு பல நூற்றாண்டுகள் முன்னதாகவே பழையாறையில் திருநாவுக்கரசர் உண்ணா நோன்பை அறிவித்திருந்தார் என்றாலும் காந்தியடிகளின் காலத்தில்தான் அது மக்கள் மயமானது.எனவே காந்தியடிகள் உண்மை, அகிம்சை, சத்தியாக்கிரகம் போன்ற அறவழிப் போராட்டங்கள் வழியே நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.இதுபோல ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு காரணத்திற்காக நினைவில் நிறுத்தப்படுவார்.ஒருவர் செய்யும் செயல்கள் சமூக அளவில் சில தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் அவர்தம் பண்புகள் தனிமனித நிலையில் சில தாக்கங்களை கொண்டு வரும். இன்னும் சொல்லப்போனால் தனிமனித அளவில் பண்பட்டவர் ஆகவும் பக்குவமாகவும் நடந்து கொள்பவர்தான் சமூக வெளியில் தகுதிமிக்க மனிதராக மதிக்கப்படுவார்.

சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண இயக்கத்தை பெரும் நிறுவனமாக நிறுவியவர். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவருடைய படுக்கையறை எவரும் பார்க்கக்கூடிய விதமாய் கண்ணாடி சுவர்கள் கொண்டதாக இருக்கும்.ஒரு துறவிக்கு பிரத்யேகமான படுக்கையறை தேவையில்லை என்பதை அவர் உணர்த்தினார். மிகப்பெரிய அறிஞராகவும் ராமகிருஷ்ண இயக்கத்தின் தூய்மை மிகுதொண்டராகவும் பகவத் கீதை திருவாசகம் போன்றவற்றின் உரையாசிரியராகவும் விளங்கினாலும் கூட அவருடைய தூய துறவு வாழ்வு ஒரு முன்னுதாரணமாக முத்திரை பதிக்கிறது.இதனை தனி அறம் என்பார்கள். நாம் உலகில் உயிர் வாழ்வதற்கு இருக்கவேண்டிய அடிப்படை தகுதிகளை கூட ஏதோ தனிப்பட்ட பெருமைகள் என்று கருதுகிறோம்.

திருவள்ளுவரிடம் ஒரு செல்வந்தரை ஒருவர்  அறிமுகம் செய்தார். ‘‘இவர் பெரிய செல்வந்தர். நிறைய அறப்பணிகள் செய்கிறார். அன்னசத்திரங்கள்

அமைத்திருக்கிறார். ஆலயங்கள் கட்டியிருக்கிறார். பள்ளிக்கூடங்கள் உருவாக்கியிருக்கிறார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்கிறார் மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கிறார்.அது மட்டுமல்ல. இவருடன் இவரிடம் இருக்கும் இன்னொரு உயர்ந்த பண்பு, அடுத்தவன் மனைவியை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார் ’’ என சொன்னார்.திருவள்ளுவர் சிரித்தார். “நீங்கள் இதுவரை சொன்ன மற்ற பெருமைகள் என்பவையெல்லாம் கடைசியாக சொன்ன தகுதி மட்டும் இல்லையென்றால் அர்த்தமற்றுப் போகும்.அடுத்தவர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பது அவர் செய்யக்கூடிய ஆயிரம் ஆயிரம் அறப் பணிகளில் ஒன்று அல்ல. அவரை மனிதராக தகுதி படுத்தக்கூடிய அடிப்படை ஒழுக்கமே அதுதான்” என்றார்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ? ஆன்ற ஒழுக்கு - என்பது திருக்குறள். திறமைகளால் பெயர் பெறும் மனிதர் நல்ல தன்மைகள் இல்லாதவராய் இருந்தால் அவருடைய எல்லாத் திறமைகளும் அடிபட்டுப் போகும். அதேநேரம் திறமை குறைவாக இருக்கக் கூடிய ஒரு மனிதர் நல்ல பண்புகளுடன் இருந்தால் குறைகளையும் தாண்டி அவருடைய பெருமைகள் ஓங்கும்.இன்றைக்குக்கூட பல ஆளுமைகளைக் குறித்து அவர்களுடைய தனிப்பட்ட இயல்புகளை விவரிக்க கூடிய நூல்கள் நனவோடை குறிப்புகள் என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஒரு பெரிய எழுத்தாளர் என்றால் படைப்பையும் தாண்டி அவர் எத்தகைய மனிதர், எப்படி பழகுவார், என்னென்ன சொல்வார் அவருடைய விருப்பங்கள் என்பதையெல்லாம் விரிவாக எழுதுகிறார்கள்.இது ஒருவருடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும். சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் மறைவுக்கு பதினைந்து வயதில் இருக்கக்கூடிய இளம் பேச்சாளர்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

என்ன காரணம் என்றால் அவளுடைய புலமை  போலவே அவருடைய எளிமைப் பண்பும் இவர்களிடத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மூத்த தலைமுறையிடமிருந்து திறமையை தாண்டி தன்மையை வியக்கவும் விரும்பவும் கற்றுக் கொள்ளவும் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம்  உணர்த்தியது.குறிப்பாக நடுத்தர வயதை கடந்து போகிறவர்கள் எல்லோருக்கும் எதிர்காலம் தன் பெயரை எப்படி நினைவில் கொள்ள வேண்டும் எனும் எண்ணமும் அதற்கேற்ப தன்னுடைய இயல்புகளை தக்கமைத்துக் கொள்ளும் குணமும் வரவேண்டும். கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் சிகரத்தின் உச்சியில் சிம்மாசனத்தில் இருந்தபோது அவருடைய திறமையை போற்றாதவர்கள் இல்லை. பாராட்டாதவர்கள் இல்லை. அதேநேரம் அவருடைய பெருந்தன்மை இன்னும் பெரிதாக உடனிருந்தவர்களால் நினைவுகூறப்படுகிறது.

கந்தன் கருணை என்ற படத்தில் எல்லா பாடல்களையும் அவரையே எழுதச் சொல்லிக் கேட்டபோது கூட தான் எங்கேயோ கேட்ட ஒரு பாடல் மிக நன்றாக இருந்தது என்றும் அந்தப் பாடலை இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் இயக்குனரிடம் பரிந்துரை செய்தார்.

அப்படி  கந்தன் கருணை திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தான் ‘‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’’ என்ற பாடல். அந்த பாடலை எழுதிய கவிஞர் பூவை செங்குட்டுவன். அவரது திரைப்படப் பிரவேசம் இப்படித்தான் நிகழ்ந்தது.சமீபத்தில் கவிஞர் சிதம்பரநாதன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கவிஞர் கே.சி.எஸ் அருணாசலம் அவர்களின் திரையுலக பிரவேசத்திற்கும் கண்ணதாசன் தான் காரணமாக இருந்தார் என்பதை அறிந்தேன். படைப்பின்  திலகமாகவும், பண்பின் திலகமாகவும் கவியரசர் விளங்கியிருக்கிறார்.இவையெல்லாம் தகுதியையும் வளர்த்துக் கொண்டு தன்மையையும் வளர்த்துக் கொண்ட தன்னிகரற்ற ஆளுமைகளின் வாழ்விலிருந்து நமக்குக் கிடைக்கும் அரிய  பாடங்கள்.

மனுநீதிச் சோழன் வரலாற்றில் ஓர் இடம் உண்டு. அரசன் மகன் அரச வீதிக்குள் ஓடி வந்த கன்றின் மேல் தவறுதலாக தேரை ஏற்றிவிடுகிறான். தாய்ப்பசு அரண்மனையிலிருந்து ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்கிறது. மனுநீதிச் சோழன் மனம் கலங்குகிறான். அருகில் உள்ளவர்கள். “மன்னா இதற்கு நீங்கள் கலங்க வேண்டாம். பசுவை கொண்டவர்களுக்கு என்று விதிக்கப்பட்ட பரிகாரத்தை செய்தால் போதும்” என்று ஆறுதல் சொல்கிறார்கள்.

‘‘சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வன்றால்

கொந்தலர் தார் மைந்தனை கோ வதை பிழைத்தார்க்கு

அந்தணர்கள் விதித்த முறை நிலைநிறுத்தல் அறம்.’’ என்றார்.

அதற்கு மனுநீதிச் சோழன் கேட்கிற கேள்வி முக்கியமானது. பரிகாரம் என்கிறீர்களே இது யாருக்கு பரிகாரம்? எனக்கும் என் மகனுக்கும் வேண்டுமானால் இந்த பரிகாரம் மனநிம்மதி கொடுக்கலாம். ஆனால்  கன்றை இழந்து நீதி கேட்க வந்திருக்கிறதே பசு. இதன்  மனவலிக்கு இந்த பரிகாரம் மருந்தாகுமா என்று கேட்கிறார்.

‘‘வழக்கென்று நீர் மொழிந்தால் மற்று அதுதான் வலிப்பட்டு

குழக்கன்றை  இழந்தலறும் கோ உறு நோய் மருந்தாமோ’’

- என்பது மனுநீதிச்சோழன்

கேட்கிற கேள்வி.பசு வாயில்லா பிராணி. அரசன் முன்னாள் ஆராய்ச்சி மணி அடித்ததே தவிர அரசனும் ஏதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது ஒன்றும் வழக்கு தொடுக்க போவதில்லை.செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போவதில்லை. ஆனால் அதன் முறையீடு நியாயம் என்பதால் அதை மதித்து அதற்குப் பரிகாரமாக தன்னுடைய மகனை தேர்க்காலில் ஏற்றி கொல்வது என்று மனுநீதிச் சோழன் முடிவெடுக்கிறான்.தனக்கு தீமை விளைவித்தவர்களுக்கு  கூட தன்னால் ஏதும் தீமை வந்து விடக்கூடாது என்கிற உள்ளம் படைத்தவர்கள் இந்த நிலத்தை போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவர். நிலத்தை தோண்டினால் அது தன்னை  தோண்டுபவர்களுக்கு  வேண்டிய உணவையும் நீரையும் தருவது போல தனக்கு தீமை நினைப்பவர்களுக்கு கூட நல்லதையே செய்யும் உள்ளம் படைத்தவர்கள் இன்றும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.’’

எனக்கு தெரிந்த தொழிலதிபர் ஒருவர். கொடையில் மாரி போல் கொடுக்கும் மனம் படைத்தவர். அவர் குடும்பத்திற்கு தீமை வரவேண்டும் என்று எதிரிகள் யாரோ ஏவல் செய்வினை செய்ததாக தெரியவந்தது. அதற்கு பரிகாரம் செய்யலாம் என்று சிலர் சொன்ன போது அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று கேட்டார். உங்களுக்கு யார் தீமையை செய்தார்களோ அவர்களையே திரும்பச் சென்று தாக்கும் என்று சொன்னதும் எனக்கு தீமை வந்தால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு தீமை செய்ய நான் விரும்பவில்லை அந்த பரிகார பூஜை வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.இன்று தொழிலில் அவரும் அவர் புதல்வரும் மிகப் பெரிதாக வளர்ந்து இருக்கிறார்கள். அதற்கு அடித்தளம் அமைத்தது அவருடைய அந்த நல்ல உள்ளம் தான். இப்படி எண்ணற்ற மனிதர்கள் தங்கள் இனிய குணங்களால் புகழ்க் குன்றில் ஏறி நிற்கிறார்கள்.காலம் மனிதர்கள் பற்றிய ஒரு கணக்கு வைத்திருக்கிறது. தனக்கு எது நல்லதோ அதை மட்டும் செய்பவர்கள் எவ்வளவு திறமையாளர்களாக இருந்தாலும் மக்கள் மனங்களில் நிற்பதில்லை மாறாக திறந்த மனமும் சிறந்த இயல்புகளுமாக வாழ்பவர்கள் எவ்வளவு ஒதுங்கி வாழ்ந்தாலும் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள். மதிக்கப்படுகிறார்கள்.

(தொடரும்)

Related Stories: