திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் ஆய்வு

பூந்தமல்லி:  திருவேற்காடு நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி, ராஜாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் குடில்களில் குப்பைகளை தரம் பிரித்தல், இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்தும், அவை செயல்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்தும் அவர் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். திருவேற்காடு நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது போன்றவற்றை நேரில் பார்வையிட்டேன். தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் திருவேற்காடு நகராட்சி சிறப்பான முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நகரத்தை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துள்ளனர். பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் இது போன்ற தொடர் ஆய்வுகள் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இன்னும் சிறப்பாக எப்படி செயல்படுத்தலாம், அதில் உள்ள குறைகள், தேவைகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிவுரைகள், பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பிரச்சனைகள், தேவைகள் குறித்தும், இந்த திட்டத்தை மேம்படுத்துவது குறித்தும் அரசுக்கும் பரிந்துரை செய்கிறோம். அதன் மூலம் உயர்மட்ட அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசு தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கிறது. திடக்கழிவு மேலாண்மையால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் சுகாதாரமான சுத்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சசிகலா,  மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, நகர்மன்ற தலைவர் என். இ.கே. மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள்,  அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: