மூன்று வேளைகளில் முவ்வித தோற்றம் தரும் முருகன்

ஆண்டார் குப்பம் - திருவள்ளூர்

Advertising
Advertising

படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா முருகன் பிரவணத்தின் பொருளைக் கேட்க அதற்கு பதில் அறியாது விழித்தார். அதற்காக அவரைச் சிறை வைத்தான் முருகன். இங்கே பிரவணத்தின் வடிவமான முருகன் பிரம்மாவை விடவும் உயர்ந்த திருக்கோலத்தில் அருள்கிறார். எனவே பிரம்மாவிடம் அதிகாரத்துடன் தனது இரண்டு கரங்களையும் வைத்தபடி கேள்வி கேட்டார். இந்தஅமைப்பினிலேயே மூலவர் பால சுப்ரமணியர் காட்சி அளிப்பதனால் அவர் ‘‘அதிகார முருகன்” எனவும் அழைக்கப்படுகிறார். பிரம்மா முருகன் சந்நதியின் எதிரில் நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். இதில் பிரம்மாவின் உருவம் இல்லை. அவருக்குரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை மட்டும் இருக்கிறது. இத்தலத்தில் மயிலுடன் தன் தாயான அம்பிகைக்குரிய சிம்ம வாஹனத்துடன் முருகன் அருட்பாலிக்கிறார்.  பாலசுப்ரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி அளிக்கிறார். காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞனாகவும், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பதுவித்தியாசமான தரிசனம்.

வெளிப் பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நதிகள் உள்ளன. இத்தலத்திற்குரிய திருப்புகழில் வலிமை உள்ளதாய், அழுந்தப் பதிந்துள்ள இரும்பாணி போன்றதும், கடைந்து எடுக்கப்பட்ட சிமிழ் போன்றதுமான மலையாகிய மார்பகங்களை முன் காட்டியும், அம்புகளைப் போல கண்களால் நுண்மையாகப் பார்த்து மனம் நெகிழ்ச்சி காட்டி உறவாடியும், அத்தான் என அழைத்து எனக்கு ஆசையை ஏற்படுத்தி, நீ என்னை வாடும்படி வைத்து விட்டாய் என்று பேசி மூக்கை ஆசையுடன் வருடிவிட்டு, முன்பு ஒரு காலத்தில் ஆசையால் விரும்பி எம்மிடம் வந்திருந்தீர். (இப்போது உமக்கு) என்னிடம் ஆசை இல்லை. நிந்தையான பேச்சுக்கு நீ இடம் தந்து விட்டாய். யோசித்துப் பார்க்கும் பொழுது உனக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை, முருகன் முதலாக உனக்கு ஒப்பானவர்கள் யாரும் இல்லை என்று கூறி இவ்வுலகில் மூர்க்கத்தனங்கள் கொண்ட செய்கைகளாலே கரிய வெல்லக் கட்டி போல இனிக்கப் பேசி, தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் கோரைப் புல் பாயில் கிடத்தி, தக்க சமயத்தில் தனித்துக் கலவி செய்துவைக்கும் விலைமாதர்கள் மேல் மோகம் பூண்ட காரணத்தால் பைத்தியம் பிடித்துத் திரிவேனோ? (எல்லாவற்றுக்கும் கடைசியில்) எஞ்சி இருக்கும் பொருளாய் மயக்கம் கடந்தவராய் இருந்த பித்தராகிய சிவபெருமானுக்கு உபதேசித்தவனே, மனம் என்னும் கோட்டையில் விளங்கும்படி மிக அதிகமாக தியானிப்பவர்களின் பக்தி என்னும் கட்டுக்குள் அகப்பட்டு நிலைப்பவன் நீ அன்றோ?

தமிழில் ‘அ’ என்னும் எழுத்தை (இது சிவத்தைக் குறிக்கும் என்று) ஏழையாகிய எனக்கு உபதேசித்த முக்திக்கு வித்தே, வலிய போரில் தலையிட்டு, எப்போதும் அழிந்து போகாத சூரனையும் அவன் குடும்பத்தையும் அரிந்து தள்ளின கோபம் கொண்ட வேலை ஆயுதமாகக் கொண்டவனே, (சூரனாகிய மாமரத்திலிருந்து) ஒரு தச்சனைப் போல மயிலையும் சேவலையும் வரும்படி அதனைப் பிளந்த சித்த மூர்த்தியே, குறப் பெண்ணாகியவள்ளியின் திருவடியைப் படிந்து வணங்கி, அவளுக்குக் கண் போல இனியனாகி, (அவள் இருக்கும் இடத்துக்குப்) போய் அவளை மணந்து, தவறுதல் இன்றி இந்தக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளைக் கொண்ட இந்த உலகில் சிறந்த பெயருடன் விளங்கும் தச்சூர் என்னும் ஊர் வடக்கே அமைந்துள்ள வழியில் (இப்போது ஆண்டார் குப்பம் என வழங்கப்படும் தலத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.எக்காலும் அழியாத வரத்தைப் பெற்று சூரன் மாமரமாக போருக்கு வந்தான். அத்தகைய மாமரத்தை முருக வேள், வேலால் இரு கூறுகளாகப் பிளந்தார். அந்த மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு தச்சனைப் போல் மயில், சேவல் என்னும் உருவங்களை ஆக்கினார். என அருணகிரிநாதர் போற்றிப்புகழ்கிறார்.சுமார்  1000 வருடங்களைக் கடந்தது இந்தக்கோயில். சிறுவாபுரியிலிருந்து ஆண்டார் குப்பம் சுமார் 6 கி. மீ. தொலைவில் இருக்கிறது.

Related Stories: