ஆஸ்கர் விருது 2025: லாபத்தா லேடீஸ் தேர்வு; பரிந்துரை பட்டியல் வரை வந்த 6 தமிழ் படங்கள்

சென்னை: ஆஸ்கர் விருதுக்காக ‘தங்கலான்’, ‘மகாராஜா’, ‘வாழை’ உள்பட 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து வெளிநாட்டு சிறந்த படங்களுக்கான பட்டியலுக்கு சில படங்கள் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பட்டியலில் இந்த ஆண்டு 6 தமிழ் படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இத்தகவலை இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கொட்டரகரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: 97வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பட்டியலில் இடம்பெற இந்தியா சார்பில் 29 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

அதில் தமிழில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’, விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, மாரி செல்வராஜின் ‘வாழை’, சூரி நடித்த ‘கொட்டுக்காளி’, ‘ஜமா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் இடம்பெற்றன. மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’, ‘ஆடுஜீவிதம்’, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’, ‘ஆட்டம்’ படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியில் ‘கில்’, ‘லாபத்தா லேடீஸ்’, ‘அனிமல்’, ‘வீர் சவார்க்கர்’, தெலுங்கில் ‘கல்கி’, ‘ஹனுமான்’, ‘மங்களவரம்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி 29 படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்தன. இந்த படங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, ‘லாபத்தா லேடீஸ்’ இந்தி படம் மட்டும் இந்தியாவில் இருந்து அனுப்ப தேர்வாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆஸ்கர் விருது 2025: லாபத்தா லேடீஸ் தேர்வு; பரிந்துரை பட்டியல் வரை வந்த 6 தமிழ் படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: