அயர்லாந்துடன் இன்று 2வது டி20: தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து மோதும் 2வது டி20 போட்டி, மலாஹைட் மைதானத்தில் இன்று இரவு 9.00 மணிக்கு தொடங்குகிறது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. மலாஹைட், தி வில்லேஜ் மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடந்தது. கனமழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் போட்டி தொடங்க தாமதமான நிலையில், தலா 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர்.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீச முடிவு செய்தார். அயர்லாந்து முன்னணி வீரர்கள் கேப்டன் பால்பிர்னி 0, பால் ஸ்டர்லிங் 4, கேரத் டெலானி 8 ரன்னில் வெளியேற, அந்த அணி 22 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், ஹாரி டெக்டர் – லோர்கன் டக்கர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக 50 ரன் சேர்த்தனர், டக்கர் 18 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அமர்க்களமாக விளையாடி இந்திய பந்துவீச்சை சிதறடித்த ஹாரி டெக்டர் 29 பந்தில் அரை சதம் அடித்தார்.அயர்லாந்து 12 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் குவித்தது. டெக்டர் 64 ரன் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஜார்ஜ் டாக்ரெல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், யஜ்வேந்திர சாஹல் இருவரும் சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்து ரன் குவிப்பை கட்டுப்படுத்திய நிலையில்… ஹர்திக், ஆவேஷ், அக்சர், அறிமுக வேகம் உம்ரான் மாலிக் வாரி வழங்கி ஏமாற்றமளித்தனர்.புவி, ஹர்திக், ஆவேஷ், சாஹல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 12 ஓவரில் 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தீபக் ஹூடா, இஷான் கிஷன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 2.4 ஓவரில் 30 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். இஷான் 26 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி யங் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, அடுத்து வந்த சூரியகுமார் முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.ஹூடா – ஹர்திக் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்து இந்திய அணியை வெற்றிப் பாதையில் செலுத்தினர். ஹர்திக் 24 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி லிட்டில் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். இந்தியா 9.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தீபக் ஹூடா 47 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் கிரெய்க் யங் 2, ஜோஷ் லிட்டில் 1 விக்கெட் வீழ்த்தினர்.சாஹல் (3-0-11-1) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு நடக்கிறது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், பதிலடி கொடுத்து சமன் செய்ய அயர்லாந்தும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி….

The post அயர்லாந்துடன் இன்று 2வது டி20: தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு appeared first on Dinakaran.

Related Stories: