நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க விழுப்புரத்தில் பல்வேறு ஆன்மிகத்தலங்கள் உள்ளன. அந்த வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீசக்தி விநாயகர் ஆலயமானது தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் திருவாரூர் தேர்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஸ்ரீசக்தி விநாயகரின் முதுகில் ஸ்ரீசக்கரம் வடிக்கப்பட்டு பலப்பல ஆன்மிக சக்திகளை தன்னகத்தே கொண்டு வேண்டுவோர் வேண்டும் வரங்களை கருணையுடன் அருள் பாலிக்கின்றார். அத்துடன் கோஷ்ட தேவதைகளாக தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா ஆகிய கடவுளர்களும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. துணைக்கோயில்களாக ஸ்ரீ முருகன், விஷ்ணு, துர்க்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன், நாகராஜா ஆகியோர் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

சாயிபாபா ஆலயம்: இந்த சிறப்பு வாய்ந்த கோயிலின் கட்டுமானங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் திருக்கோயிலுக்கு விஜயம் செய்து கட்டுமான பணிகள் வெகுசிறப்பாக ஆன்மீக முறைப்படி நடைபெறுவதாகக் கூறி அருளாசி வழங்கினார். பின்னர் கோயிலின் குபேர மூலையில் வேப்பமரத்தடியின் ஷீரடி சாய்பாபாவின் படம் ஒன்றை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு சக்தி விநாயகர் வழிபாட்டு மன்றம் என்ற பெயரில் 2009ம் ஆண்டில் துவக்கப்பட்டது. மன்றத்தின் ஏற்பாட்டின் பேரில் பட்டிபுலம் ஷீரடி சாயிடிரஸ்ட் மூலம் பாபாவின் சிலையினை டிரஸ்டின் தலைவரான ரமணி கடந்த 2016ம் ஆண்டு குபேர யந்திரம், ஜன யந்திரம், லட்சுமி யந்திரம் சிலையின் அடிப்பாகத்தில் வைத்து ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

வேண்டுதல் நிறைவேறும்:

இந்த ஸ்ரீ சக்தி விநாயகா சாயிபாபா ஆலயத்தில் மனமுருக வேண்டி வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனசஞ்சலம் தீரும். தொழில் முடக்கம் அகலும். நம்மைப்பிடித்த நோய் நோடிகள் எல்லாம் தவிடு பொடியாகும் என்பது ஐதீகம். பாபாவின் முன்னால் தியான மண்டபம் கட்டப்பட்டு பிரதி வியாழக்கிழமை தோறும் மூன்று ஆரத்திகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன. கடந்த 2016ம் ஆண்டில் கும்பாபிஷேகம்  சிறப்பாக நடத்தப்பட்டது. வியாழக்கிழமை தோறும் மூன்று ஆரத்திகளின் போது அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் மருத்துவ முகாம்களும், ரத்தவகை கண்டறியும் முகாம், ரத்த கொதிப்பு கண்டறிதல் முகாம், நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம், கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டிபுலம் சாயி டிரஸ்ட் மற்றும் சக்தி விநாயகர் வழிபாட்டு மன்றமும் இணைந்து கடந்த மாதம் கல்வி உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது. தற்போது இக்கோயிலின் செயல்பாடுகளை தலைவர் ஞானப்பிரகாசம், செயலாளர் கலியமுர்த்தி, பொருளாளர் ராமலிங்கம் மற்றும் 30 பேர் உறுப்பினர்களைக் கொண்ட சக்தி விநாயகர் வழிபாட்டு மன்றம் செய்து வருகின்றது.

சாயிபாபா பொன்மொழிகள்

1) ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறாேனோ அவனுடைய துன்பம் ஒரு முடிவைக் கடந்து சவுகரியத்தை அடைகிறான்.

2) என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதி

களையும் கொடுக்கும்.

3) நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.

4) நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

செல்வது எப்படி?

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் நடந்து செல்லும் தூரத்தில் சாயிபாபா ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு.

Related Stories: