புல்டோசர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; உ.பி முதல்வர் தலைமை நீதிபதியாகிவிட்டார்: அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு

காந்தி நகர்: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார் என்று அசாதுதீன் ஒவைசி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். முகமது நபி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது உத்திரபிரதேச மாநில அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. பிரயாக்ராஜில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவராகக் கருதப்படும் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளரான முகமது ஜாவேத் வீட்டை புல்டோசரை கொண்டு அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதுகுறித்து குஜராத்தில் முகாமிட்டுள்ள அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இப்போது உத்தரபிரதேச மாநிலத்தின் தலைமை நீதிபதியாகிவிட்டார்; இனிமேல் யாருடைய வீட்டை இடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்களை பூட்டிவிடலாம். இனிமேல் மக்கள் நீதிமன்றம் தேவையில்லை என்பதால், நீதிபதிகளும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம். காரணம், அம்மாநில முதல்வரே யார் குற்றவாளி என்பதை முடிவு செய்வார்’ என்றார். முன்னதாக நேற்று ஜாவேத்தின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அம்மாநில வழக்கறிஞர்கள் குழு கடிதம் எழுதியுள்ளது. இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் அல்ல என்றும், அந்த வீடு ஜாவேத்தின் மனைவியின் பெயரில் உள்ளது என்றும் கூறியுள்ளனர். மேலும், இந்த வீட்டை இடித்தது சட்டத்துக்கு எதிரானது என்றும், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவிக்கு சட்டவிரோத கட்டுமானம் குறித்து எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். …

The post புல்டோசர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; உ.பி முதல்வர் தலைமை நீதிபதியாகிவிட்டார்: அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: