பிள்ளையாரின் பிள்ளைக் குறும்புகள்!

அனைவரும் விரும்பி வழிபடும் கடவுளாக ஆனைமுகன் திகழ்ந்தாலும், இளம்பருவத்தினராகிய சிறுவர் சிறுமிகளின் மனதிற்கு உகந்த மூர்த்தியாகவே பிள்ளையார்  விளங்குகின்றார். குட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் அவரை நாம் வணங்குகின்றோம்.

Advertising
Advertising

‘வளர்கை குழைபிடி தொப்பணகுட்டொடு

வசை பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே!’

என்று முதல் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தைப் போற்றுகிறது அருணகிரியாரின் திருப்புகழ். வலது கையையும், இடது கையையும் சேர்த்து கும்பிடு  போடுவதோடு நிற்காமல் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் இடுவதும் குழந்தைகளுக்கு மிகவும் குதூகலமாக இருக்கிறது.

யானை முகமும், அவருடைய பானை வயிறும், வெள்ளை வெளேரென்று விளங்கும் அவரின் ஒற்றைத் தந்தமும், ஐந்து கரங்களும், அறுகம்புல் அர்ச்சனையும்,  எலி வாகனமும், சுண்டல் நிவேதனமும் இளம்பிள்ளைகளை அவர்பால் வெகுவாகவே வசீகரிக்கின்றது. ஔவை மூதாட்டி, விநாயகரின் அலாதி அழகில்  அப்படியே நெஞ்சைப் பறி கொடுத்து அவருடைய தோற்றத்தின் ஏற்றத்தை சுவைபட பாடுகின்றார். தமிழ் மூதாட்டியின் விநாயகர் அகவல் தத்ரூபமாக  பிள்ளையாரின் வடிவத்தைப் படிப்பவர்களின் நெஞ்சத்தில் பதியச் செய்கிறது.

பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் என நாலும் கலந்து விநாயகருக்கு நிவேதனம் செய்து, அதன் மூலம் அவரிடமிருந்தே சங்கத்தமிழ் மூன்றையும்  பெற்றவளான ஔவையாரின் செந்தமிழ் அதிகம் இனிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும்?

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பல இசை பாடப்

பொன் அரைஞாணும், பூந்துகில் ஆடையும்

வண்ண மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும், இலங்கு பொன்முடியும்

திரண்ட முப்புரிநூல் திகழ்ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான

அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

பரமசிவன்பார்வதியின் முதல் மழலையாகத் திகழும் கணபதியின் இளம்பருவத் திருவிளையாடல்களை இலக்கியப் புலவர்கள் தங்கள் கற்பனைக் கண்கொண்டு  நோக்கி சொற்சுவை மிளிர அப்பிள்ளையாரின் பிள்ளைக் குறும்புகளை நெஞ்சை அள்ளும் தமிழில் நேர்த்தியாகப் பாடி உள்ளனர். குழந்தைகள் விரும்பும் கடவுள்,  தன் குழந்தைப் பருவத்தில் செய்த லீலை ஒன்றை அதிவீரராம பாண்டியர் அழகுறச் சித்திரிக்கின்றார். திருக்கைலாய மலையில் பரமேஸ்வரரும், பார்வதியும்  ஒளிமயமான நவரத்தின சிங்காதனத்தில் வீற்றிருந்தார்கள்.

அப்போது அங்கு பிள்ளையார் வந்தார். ‘மகனே வா’ என்று அழைத்து அம்பிகை தன் மடி மீது விநாயகரை அமர்த்தி வைத்துக் கொண்டாள். தாயின்  அரவணைப்பில் இருந்தபடியே தந்தையாகிய பரமசிவனை உற்றுப் பார்த்தார் விநாயகர். சிவபெருமானுடைய ஜடா மகுடம் அவரைக் கவர்ந்தது. ‘செஞ்சடா  அடவிமேல் ஆற்றை, பணியை, இதழியை, தும்பையை, அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான்!’ என்று சிவபிரானை வர்ணிக்கின்றதே கந்தர் அலங்காரம்!  தந்தையாரின் தலையில் ஒளிர்ந்த பிறைச்சந்திரன் விநாயகரை வெகுவாகக் கவர்ந்தது.

‘அப்பா! தங்கள் தலையில் உள்ள அந்த பிறைச்சந்திரன் எனக்கு வேண்டும்! என் துதிக்கையை நீட்டி அதைப் பறிக்கலாமா?’ மழலையின் வேண்டுகோளைக்  கேட்ட மகாதேவர் சற்று அதிர்ந்தார். ‘எதற்காக அந்த நிலாத் துண்டத்திற்கு ஆசைப்படுகிறாய்?’‘தந்தையே! என் தந்தத்தை ஒடித்து நான் மேருமலையிலே  மகாபாரதத்தை எழுதினேன். அழகான தந்தம், பாதி உடைந்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு மகாபாரதம் கிடைக்க வேண்டுமே என்றுதான் இரு தந்தங்களில்  ஒன்றை ஒடித்துக் காவியம் எழுதினேன். ‘ஏக தந்தாய நமஹ’ என்று பக்தர்களால் அர்ச்சிக்கவும் பெற்றேன்.

ஆனால் இப்போது, அன்று உடைத்த தந்தத்தை மீண்டும் பெற விரும்புகிறேன். உங்கள் தலையில் விளங்கும் நிலாப்பிறையை எடுத்து ஒடித்த தந்தப் பகுதியோடு  ஒட்ட வைத்துக் கொண்டால் தந்தம் முழுமை பெற்று விடுமே!’விளையாட்டுத்தனமாக இப்படி பதிலளித்த விநாயகரின் பிள்ளைக் குறும்பை பெரிதும் ரசித்தார்  பரமசிவன். பார்வதி அகம் மகிழ ஆனந்த விநாயகரை அணைத்தாள். கயிலாயத்தில் இப்படி ஒரு காட்சி நடந்ததாகப் பாடுகிறது, அதிவீரராமரின் அதி அற்புதமான  செய்யுள்:

‘தழைவிரி கடுக்கை மாலை தனி முதல் சடையில் சூடும்

குழவிவெண் திங்கள் இற்ற கோட்டது குறை என்றெண்ணிப்

புழைநெடும் கரத்தால் பற்றிப் பொற்புற இணைத்து  நோக்கும்

மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்போம்’

தெய்வீகக் குழந்தையான விநாயகப்பெருமானின் வேறு ஒரு திருவிளையாடலை ‘முத்து வீருக் கவிராயர்’ என்பவர் செய்யுள் ஒன்றில் சிறப்பாகத்  தெரிவித்துள்ளார். தொங்கும் துதிக்கையோடும், தொந்தி வயிற்றோடும், குண்டு சரீரத்தோடும், குறுகுறு என்று விளையாடும் குழந்தை விநாயகரைக் கண்டு  குதூகலித்தார்கள் அம்மையும், அப்பனும்! பார்வதி, ‘கணபதி! இங்கு வா! என் கன்னத்தில் முத்தம் கொடு’ என அழைத்தாள். பரமசிவனோ, ‘அப்பாவுக்குத் தானே  முதல் முத்தம்! கணபதி, என் அருகில் வா!’ என்று அழைத்தார்.

‘மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொல் கேட்டல் இன்பம் செவிக்கு’

என்கிறார் திருவள்ளுவர். குழந்தைக்கு முத்தம் கொடுத்தலும், அவர்களிடமிருந்து முத்தத்தைப் பெறுதலும் பெற்றோர்க்குப் பேரின்பம் அல்லவா! பிள்ளையார்  அம்மாவையும், அப்பாவையும் அருகருகே அமரச்செய்து இருவரையும் தன் இளங்கைகளால் ஒரு சேர அணைத்து முத்தமழை பொழிந்தார்.

அதன் பின்னர் அவர் புரிந்த திருவிளையாடலை அற்புதமாகச் சொல்லில் வடிக்கிறார் புலவர்:

‘மும்மைப் புவனம் முழுதீன்ற

    முதல்வியோடும் விடைப்பாகன்

அம்ம! தருக! முத்தம்! என

    அழைப்ப, ஆங்கே சிறிது அகன்று

தம்மில் முத்தம் கொள நோக்கிச்

    சற்றே நகைக்கும் வேழ முகன்

செம்மை முளரித் திருத்தாள் நம்

    சென்னி மிசையும் புனைவோமே!’

தாய் தந்தையர்க்கு முத்தம் கொடுத்த பின் பிள்ளையார் ‘உங்கள் இருவருக்கும் நான் முத்தம் கொடுத்து விட்டேன். நீங்கள் இருவரும் என் வலதுபுறம், இடதுபுறம்  என நின்று என்னுடைய இரு கன்னத்திலும் ஒவ்வொருவர் முத்தம் இட வேண்டும்! இதோ நடுவில் நான் அமர்ந்து விட்டேன். ஒருபுறம் அம்மா, மற்றொருபுறம்  அப்பா என இருவரும் ஓடிவந்து ஏககாலத்தில் என் கன்னம் இரண்டிலும் முத்தமிடுங்கள் என அன்புக் கட்டளை இட்டாராம்.

ஆனால் கன்னம் அருகே அம்மாவும் அப்பாவும் வந்த நேரம் தன் முகத்தைச் சற்று நகர்த்திக் கொண்டாராம். ஓடிவந்த இருவரின் உதடுகளும் சங்கமிக்க,  நாணத்துடன் பார்வதி பரமேஸ்வரர் தங்களுக்குள் முத்தம் இட்டுக் கொண்டனராம். பிள்ளையாரின் பிள்ளைக்குறும்பு பெரியவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கிறது  என்பதைக் கற்பனைக் கண்கொண்டு கண்டிருக்கிறது நம் செந்தமிழ்க் கவிஞர்களின் தேன்சுவைப் பாடல்கள்!

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Related Stories: