திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு: உறவினர்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே விஆர்பி சத்திரத்தை சேர்ந்தவர் வீரா (எ) வீரபத்திரன் (34).ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிகளில் இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து விற்பனை செய்யும் தொழிலும், புதிதாக கட்டப்படும் தொழிற்சாலைகளுக்கு மண், ஜல்லி,  கல் சப்ளையும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 11வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு திமுகவில் இணைந்தார்.இந்நிலையில்,  நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே வீரா நின்றிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 6 பேர், வீராவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த வீராவுக்கு, தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், வீராவை வெட்டிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி, அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் சமரசம் பேசிய போலீசார், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.ஆனால், மதியம் வரை யாரையும் போலீசார் கைது செய்யாததால், மீண்டும் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் போலீசார், வீராவை எதற்காக கொலை செய்ய முயற்சி செய்தனர், தொழில் போட்டியா, தேர்தல் முன் விரோதமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்….

The post திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு: உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: