மறையூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமைகள்-பொதுமக்கள் பீதி

மூணாறு : மறையூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இவைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மறையூர் கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் உலா வரும் காட்டெருமைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இதையடுத்து வனத்துறையினர் காட்டு எருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியும் பலனளிக்கவில்லை. நேற்று முன்தினம் மறையூர் பள்ளநாடு பகுதியில் காட்டெருமைகள் சாலையில் சுற்றி திரிவதை பார்த்து, சாலையில் நடந்து சென்றவர்களும், வீட்டுக்கு வெளியே இருந்தவர்களும் தப்பி ஓடினர். மேலும், மறையூர் மங்கலம்பாறையில் வேறொரு காட்டு எருமை விவசாய நிலங்களில் சுற்றித்திரிவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த ஜன.24ம் தேதி துரைராஜ் என்பவர், தோட்டத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், காட்டெருமை தாக்கி உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு, மற்றொரு நபர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது காட்டெருமையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். வனத்துறையினர் காட்டெருமையை காட்டுக்குள் விரட்ட முயன்றபோது வனக்காவலர் காந்தி என்பவரை தாக்கியது. இவைகளை கண்காணிக்க தற்காலிக வாட்ச்மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே, காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டி மக்களையும், விவசாய பயிர்களையும் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்….

The post மறையூரில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமைகள்-பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: