பருவம் தவறி பெய்துவரும் மழையால் பல ஆயிரம் ஹெக்டேர் பருத்தி சாகுடி செய்த விவசாயிகள் கவலை

வலங்கைமான் : வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பருவம் தவறி பெய்து வரும் மழையால் பல ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளது. அதனை அடுத்து சுமார் நான்காயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சாகுபடியாக நெல் சாகுபடி செய்வது வழக்கம். நெல் கொள்முதலில் ஏற்பட்டுள்ள தேக்கம், மின் சிக்கனம், நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை கருத்தில் கொண்டு கோடை சாகுபடி ஆக நெல் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து வலங்கைமான் பகுதியில் தற்போது கோடை சாகுபடியாக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் சம்பா தாளடி நெல் அறுவடைக்குப் பிறகு வலங்கைமான் பகுதியில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுதோறும் பருத்தி கோடை சாகுபடியாக செய்வது வழக்கம். இருப்பினும் இந்த ஆண்டு நெல் சாகுபடியை தவிர்க்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு சுமார் ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சுமார் நான்காயிரம் ஹெக்டேர் அளவிற்கு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தி கொள்முதலில் பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததும் பருத்தி சாகுபடி அதிகரித்ததற்கு ஒரு காரணமாகும்.மேலும் பருத்தி சாகுபடியில் மண் கிளர்தல், மண் அணைத்தல் போன்ற பணிகளுக்கு ஆட்களை பயன்படுத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கை டிராக்டர் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறை ஏற்படாமல் விவசாயிகள் குறைந்த செலவில் குறித்த நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் விவசாயிகள் பருத்தியினை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகின்றது. பொதுவாக பருத்தி உள்ளிட்ட கோடை சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஈரம் மட்டுமே தேவை தண்ணீர் தேவையில்லை. கடந்த சில நாட்களாக வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பருத்தி விதைகள் முளைப்பு திறன் குறைந்தும், முன்னதாக முளைத்து வந்த பருத்தி செடிகள் அழுகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்து வரும் பருவ மழையால் பல ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்….

The post பருவம் தவறி பெய்துவரும் மழையால் பல ஆயிரம் ஹெக்டேர் பருத்தி சாகுடி செய்த விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: