தமிழகத்தில் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.தமிழகத்தில் முகாம் நாளில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும், விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும், குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படவுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். சில தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். வேலை மற்றும் படிப்புக்காக புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post தமிழகத்தில் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: