பருவமழை முன்னெச்சரிக்கை பணி ரூ.38 கோடி ஒதுக்கீடு: பணிகளை செப். 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென தமிழக அரசு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-26ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென தமிழக அரசு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி சென்னை பெருநகர எல்லைக்குள், 15 மண்டலங்களில் 78 பணிகளும், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 117 பணிகளும் தொடங்கி நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

இதில் பக்கிங்காம் கால்வாயில் 19 பணிகளும், கூவம் ஆற்றில் 19 பணிகளும், அடையாற்றில் 5 பணிகளும், இதர 35 பணிகள் வரவு கால்வாய்கள், ஏரிகள், உபரி நீர் கால்வாய், மடுவு பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், திடக்கழிவுகள், மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணிகள் 234 மிதக்கும் மண் கழிவு அகற்றும் இயந்திரங்களுடன் குப்பையை அகற்ற லாரிகளுடன் பணிகள் நடந்து வருகிறது.

இதுதவிர முட்டுக்காடு, புதுப்பட்டினம், கூவம், அடையாறு, எண்ணூர் மற்றும் பழவேற்காடு முகத்துவாரங்களில் சேர்ந்துள்ள மணல் படிவுகள் அகற்றும் பணிகளும் நடக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் நேற்று முதன்மை தலைமை ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்து நீர்த்தேக்கங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கான கட்டிடங்களையும், கட்டுப்பாட்டு மையத்திற்கான மின் கணினி செயற்கைக்கோள் தகவல் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் ஆய்வு செய்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பருவமழை முன்னெச்சரிக்கை பணி ரூ.38 கோடி ஒதுக்கீடு: பணிகளை செப். 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: