நாகப்பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க தாமரை குளத்தில் படகு குழாம்

நாகப்பட்டினம், ஜூலை 24: வரலாற்று புகழ் பெற்ற நாகப்பட்டினம் தாமரை குளத்தில் விரைவில் படகு குழாம் அமைக்கப்படும் என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூறினார். நாகப்பட்டினம் தாமரை குளம் கல்கி எழுதிய பொன்னியில் செல்வன் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சோழ மன்னர் ராஜராஜசோழன் இலங்கையில் நோய்வாய்பட்டு நாகப்பட்டினம் வந்து சூடாமணி விஹாகரத்தில் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நோயில் இருந்து மீண்டு எழுந்ததாக பொன்னியில் செல்வன் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அவ்வாறு வரலாற்ற சிறப்பு வாய்ந்த தாமரைகுளம் நாகப்பட்டினம் நகர்பகுதியில் உள்ளது. இந்த குளத்தின் வரலாற்று பெருமையை பாதுகாக்கும் வகையில் நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் குளத்தை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கும் தாமரைக் குளத்தின் வரலாற்று பெருமையை பாதுகாக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் படகு குழாம் அமைக்க வேண்டும் என நாகப்பட்டினம் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போர்வெல் அமைக்கப்பட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணிகள் நடைபெற்றுது வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் ஆகாஷ், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீனாமைசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது நகர்மன்ற தலைவர் மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாகப்பட்டினத்தில் மிகப்பெரிய அளவில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் வரலாற்று பெருமையை மீட்க வேண்டும் என கோரிக்கையின் பேரில் நாகப்பட்டினம் நகர பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக குறைந்த கட்டணத்துடன் விரைவில் படகு குழாம் அமைக்கப்படும். இதனால் நகராட்சிக்கு வருமானம் கிடைப்பதுடன், நகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தோடு வந்து பொழுது போக்கி கொள்ளலாம். மேலும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். நகர்மன்ற தலைவர் இவ்வாறு கூறினார்.

The post நாகப்பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க தாமரை குளத்தில் படகு குழாம் appeared first on Dinakaran.

Related Stories: