இந்தி பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்

 

புதுச்சேரி, ஜூலை 16: புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவன் இந்தி பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோருக்கு பயந்து பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் முகுந்தன் (15). இவர் கருவடிக்குப்பத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் பள்ளியில் நடந்த தேர்வில் இந்தி பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு ஆசிரியர் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் முகுந்தனின் தந்தை கருணாநிதி நேற்று மாலை பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளிக்கு தந்தை வந்த தகவலறிந்தவுடன் மாணவன் முகுந்தன், தனது வகுப்பு இருக்கும் 2வது மாடியில் இருந்து முதுகில் புத்தகப்பையுடன் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே பலத்த காயமடைந்த மாணவனை மீட்டு புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இந்தி பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன் appeared first on Dinakaran.

Related Stories: