சீசன் களைகட்டியதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்

*குடும்பத்துடன் அருவிகளில் உற்சாக குளியல்

தென்காசி : குற்றாலத்தில் சீசன் களைகட்டியதால் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் தங்களது குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும்.

மிதமான சாரல் மழையும், லேசான வெயிலும், குளிர்ந்த காற்றும் நிலவி வருவதால் இந்த சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் மே மாதம் மூன்றாவது வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் விழ துவங்கியது.

ஆனால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து குற்றாலம் பகுதியில் கனமழை பெய்ததால் அருவிகள் அனைத்திலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஒரு வாரத்திற்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதன்பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மழையும், வெயிலும் மாறி, மாறி இருப்பதால் அவ்வபோது பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று பகலில் லேசான வெயிலும், மேக கூட்டமும், மெல்லிய சாரலும் மாறி, மாறி காணப்பட்டது.

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

The post சீசன் களைகட்டியதால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: