உங்களைத் தேடி திட்டத்தில் கடலாடியில் கால்வாய் பணி ஆய்வு

ராமநாதபுரம், மே 16: கடலாடியில் நடைப்பெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாமில், திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிக்கல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து சிக்கல் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பில் 7 கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை பணிகளை பார்வையிட்டார்.

கடுகுசந்தை பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30லட்சம் மதிப்பில் ஊராட்சி செயலகம் கட்டிடம் பணி, எம்.கரிசல்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சங்கரத்தேவன் கால்வாய் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள், சாயல்குடியில் ரூ.32.80 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் கடலாடி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இருவருக்கு தலா ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400 வீதம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், ஒருவருக்கு ரூ.1 லட்சத்து ஆயிரத்து 800 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டரையும், வருவாய்த்துறையின் மூலம் 10 பேருக்கு முழுப்புலம் பட்டாமாறுதல் பெறுவதற்கான ஆணைகளையும், 5 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து யூனியன் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பரமக்குடி சப்.கலெக்டர் அபிலாஷா கவுர், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, பி.டி.ஓக்கள் சங்கரபாண்டியன், ஜெய் ஆனந்த் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உங்களைத் தேடி திட்டத்தில் கடலாடியில் கால்வாய் பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: