வேலூர்: வேலூர் எம்பி கதிர்ஆனந்த் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை வரும் ஜூன் 5க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதி வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கதிர்ஆனந்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டது. பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்றது.
அதில் கதிர்ஆனந்த் வெற்றிபெற்றார். இதுதொடர்பாக எம்பி கதிர்ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக வேலூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கதிர்ஆனந்த் எம்பி நேற்று காலை ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் (பொறுப்பு) விசாரணையை வரும் ஜூன் 5க்கு ஒத்திவைத்தார்.
The post வேலூர் எம்பி கோர்ட்டில் ஆஜர்: வழக்கு ஜூன் 5க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.