மின்சாதனங்கள் அடிக்கடி பழுது சீரான மின்சாரம் வழங்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.25: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகே திருத்தேர்வளை ஏடி காலனி உள்ளிட்ட பகுதியில் குறைவான மின் அழுத்தத்துடன் மின் விநியோகம் இருக்கிறது. இதனால் இப்பகுதியில் வாழும் 35க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை ஆன்லைனில் புகார் செய்தும், கிராம சபை கூட்டங்களில் அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை. புகார் செய்யும் போது மட்டும் கண்துடைப்பு நாடகம் நடத்தும் வகையில், அவ்வப்போது அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு மட்டுமே செய்து செல்வது தொடர் கதையாக உள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரி, மாணவ,மாணவிகள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரும் நாளுக்கு நாள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் கொளுத்தும் வெயிலால் வெப்பம் தாங்க முடியாமல், பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலைதான் உள்ளது. மின் விசிறியை ஆன்செய்து கொஞ்சம் வெப்பத்தை சமாளிக்கலாம் என்றால், அதற்கும் சீரான மின்சாரம் இல்லாததால் மின் விசிறிகள் கூட சரியாக ஓடுவதில்லை. குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுது அடைந்து வருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த 16ம் தேதி மின்வாரிய துறைக்கு புகார் தெரிவித்தனர். அன்றைய தினமே அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, ஓரிரு நாட்களில் சீரான முறையில் மின் விநியோகம் மேற்கொள்கிறோம் என உறுதியளித்தனர். ஆனால் ஒரு வாரம் கடந்த நிலையில் இன்று வரை சம்மந்தப்பட்ட பகுதியில், அதிகாரிகள் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் ஆர்.எஸ்.மங்கலம் மின்வாரிய துறை அதிகாரிகள், சீரான மின்சாரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின்சாதனங்கள் அடிக்கடி பழுது சீரான மின்சாரம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: