அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் கலெக்டர் தகவல் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஏப்.25: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்க முன் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலையில் அடுத்த மாதம் நடைபெறும் உள்ள சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அன்னதானம் வழங்க www.foscos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர் திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயஙகி வரும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெற வேண்டும்.

மேலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரிக்கான ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர், தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தை ஆதார் அட்டை நகலுடன் சமர்பிக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ அல்லது வழங்கவோ அனுமதிக்ககூடாது.

வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யக் கூடாது. உணவு கழிவுப்பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவுக்கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் கலெக்டர் தகவல் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: