வெற்றியை கோட்டை விட்டது ராஜஸ்தான் போராடி வென்றது ஆர்சிபி: ஹேசல்வுட் அசத்தல் பந்துவீச்சு

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த 42வது லீக் போட்டியில், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் பில் சால்ட், விராட் கோஹ்லி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பில் சால்ட் 26 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல், விராட் கோஹ்லியுடன் சேர்ந்து ராஜஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை பதம் பார்த்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். ஆர்ச்சர் வீசிய 16வது ஓவரில், நிதிஷ் ராணாவிடம் கேட்ச் கொடுத்து, கோஹ்லி ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். பின்னர், 3வது விக்கெட்டுக்கு டிம் டேவிட் இறங்கினார்.

இதனிடையே, சந்தீப் சர்மா வீசிய 17வது ஓவரில், நிதிஷ் ராணாவிடம் கேட்ச் கொடுத்து, தேவ்தத் படிக்கல் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 5வது பந்தில், கேப்டன் ரஜத் பட்டிதார், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல்லிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார். ஆர்ச்சர் வீசிய 20வது ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் டிம் டேவிட் 23 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 19 பந்தில் 49 ரன் (3 சிக்ஸ், 7 பவுண்டரி) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரானா 28, கேப்டன் பராக் 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜூரெல் பொறுப்புடன் ஆட கடைசி 12 பந்தில் 18 ரன் தேவை என்ற கட்டத்தில் ராஜஸ்தான் வெற்றியை நெருங்கியது. ஆனால் 19வது ஓவரை வீசிய ஹேசல்வுட், ஜூரெல் (47 ரன்), ஆர்ச்சர் (0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி ராஜஸ்தானை நிலைகுலையச் செய்தார். கடைசி ஓவரில் 17 ரன் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் வெறும் 5 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து வெற்றியை கோட்டை விட்டது. சிறப்பாக பந்துவீசிய ஹேசல்வுட் 4 விக்கெட் அள்ளினார்.

The post வெற்றியை கோட்டை விட்டது ராஜஸ்தான் போராடி வென்றது ஆர்சிபி: ஹேசல்வுட் அசத்தல் பந்துவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: