ரூ.1.50 லட்சம் மதிப்பு காப்பர் வயர் திருட்டு வாலிபர் கைது; 4 பேருக்கு வலை தெள்ளார் பிஎஸ்என்எல் அலுவலகத்தில்

வந்தவாசி, ஏப்.24: வந்தவாசி அருகே பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்- இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, பாபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். எஸ்.காட்டேரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தெள்ளாரில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த 2 பைக்குகள் மடக்கினர். போலீசாரை கண்டதும் அதில் வந்த 5 நபர்கள் தப்பி ஓடினர். அதில் ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, நத்தமேடு நரிக்குறவர் பகுதியை சேர்ந்த ரவி மகன் பார்த்திபன்(21) என தெரியவந்தது. மேலும், தெள்ளார் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உள்ள டவரில் இருந்து காப்பர் ஒயர்களை 5 நபர்கள் திருடியது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட வயர்களை நரிக்குறவர் பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் கலைவாணனிடம் புகார் மனு பெற்றனர். பின்னர், வழக்கு பதிவு செய்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஒயர்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ரூ.1.50 லட்சம் மதிப்பு காப்பர் வயர் திருட்டு வாலிபர் கைது; 4 பேருக்கு வலை தெள்ளார் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: