சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பத்மநாபபுரம் மனோ தங்கராஜ் (திமுக) பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வகையான வாழைகள் சாகுபடி செய்யப்படுவதால் அதனை பயன்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க அரசு முன்வருமா,’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில், சில விலை பொருட்கள் குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவில் விளையும். அவ்வாறு விளையும் பழங்கள், பூக்கள் இதர வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்க பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவ அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்.
இருப்பினும், தனியார் தொழில்முனைவோர் இத்தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் பட்சத்தில் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் வழங்கப்படும். அவ்வாறு, தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு எம்எஸ்எம்இ துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகள் வழங்கப்படும். மேலும், 20 தொழில் முனைவோர்கள் சேர்ந்து வந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம் அமைக்க பரிசீலிக்கப்படும்,’ என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.
The post தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு எம்எஸ்எம்இ துறை மூலம் மானியத்துடன் வங்கி கடன்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.