இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொடக்கப்பள்ளியில் இடைநிற்றல் பூஜ்ஜியம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

திருச்சி: திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடக்கப்பள்ளியில் இடைநிற்றல் பூஜ்ஜியமாக உள்ளது. இந்திய அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 7.7 சதவீதமாக உள்ளது. அதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதையும் விளம்பரத்துக்காக கூறக்கூடிய அரசு தமிழ்நாடு அரசு இல்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் வேதனையாக உள்ளது. சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கட்டுமான பொருட்கள் இருந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு தான் அந்த கட்டுமான பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். அது பாதுகாப்பான இடம் என நினைத்து மாணவர்கள் அங்கு சென்று அமர்ந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக யார் இருந்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவனின் குடும்பத்துக்கு பக்க பலமாக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: