சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து

மதுரை: ஐகோர்ட் கிளையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், மதுரை கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் ஆஜராகினர். தலைமை செயலாளர் முருகானந்தம் வீடியோ கான்பரன்சில் ஆஜரானார். அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.

அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘விகாஸ் சிங், நேற்று (நேற்று முன்தினம்) இரு நீதிபதிகள் அமர்வில் என்னைப் பற்றி என்ன கூறினீர்கள்’’ என்றார். அப்போது மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் அமைதியாக இருந்தார். அதற்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், ‘‘நான் தேர்தலில் நிற்கப் போவதாக கூறினீர்கள் அல்லவா? ஏன் அப்படி கூறினீர்கள்? அன்றைய தினம் வழக்கு விசாரணையின்போது என்ன சொன்னீர்கள்? திரும்ப சொல்லுங்கள்’’ என கோபமாக கூறிய நீதிபதி பின்னர் தமிழ்நாடு தலைமை செயலாளரிடம், ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்’’ என்றார்.

இதற்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம், ‘‘நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த உத்தரவில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை இருப்பதால் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணமாக கூறி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே, திண்டுக்கல், கன்னியாகுமரி வழக்குகளில் நான் பிறப்பித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லையே? ஏன்’’ என்றார். இதற்கு தலைமை செயலாளர், ‘‘இதுதொடர்பாக பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் வேண்டும்’’ என்றார். அதற்கு நீதிபதி, ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதற்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன். இந்த வழக்கின் விசாரணை ஜன. 9க்கு தள்ளிவைக்கப்படுகிறது எனக் கூறிய நீதிபதி இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.

இதன்பிறகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நான் மிகவும் சோர்வடைந்துள்ளேன். எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை ஆஜராகுமாறு உத்தரவிட முடியும்? நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தும்போது சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தலைமை செயலாளர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தால், அது உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ தவிர, மற்ற வகையில் அந்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். நிச்சயமாக, ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த முடியாத சூழ்நிலைகளும் இருக்கலாம்.

அதுபோன்றதொரு சூழ்நிலைகளை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால், சட்டம் – ஒழுங்கு என்பது ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கான காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதுவே சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமாகும். அது அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்கவே செய்யும். இதனால் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை ஜன. 9க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இந்த நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தலைமைச் செயலாளர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற அவமதிப்பு செய்தவர்கள் அன்றைய தினமும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: