திருவண்ணாமலை, ஏப். 23: செங்கம் அருகே முன்விரோத தகராறில் நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. செங்கம் தாலுகா மண்ணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருண்குமார் (19). அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு மகன் சதீஷ்குமார் (21), சக்திவேல் மகன் விக்னேஷ் (22). மூன்று பேரும் நண்பர்கள். கட்டுமானத்திற்கான சென்ட்ரிங் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அன்று மண்ணம்பட்டி ஏரிக்கரை பகுதியில், அருண்குமார், சதீஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் மது அருந்தினர்.
அப்போது, தன்னுடைய மாமா பார்த்திபன் என்பவர் திருப்பத்தூர் அருகே பைக்கில் விபத்திலிருந்து பலியானதற்கு, அவருடன் சென்ற அருண்குமார் தான் காரணம் என சதீஷ்குமார் தகராறு செய்துள்ளார். அப்போது, அருண்குமாருக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ்குமாரும், விக்னேஷும் சேர்ந்து அருண்குமாரை கல்லால் தாக்கினர். அதில், படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். சடலத்தை ஏரிக்கரை பகுதியிலேயே போட்டுவிட்டு, இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக, கொலை செய்யப்பட்ட அருண்குமாரின் தந்தை அளித்த புகாரின் பேரில். மேல் செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் அரசு கூடுதல் சிறப்பு பொது வழக்கறிஞர் பழனி ஆஜரானார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில் வாலிபர் அருண்குமாரை கொலை செய்த சதீஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் , ₹7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சதீஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post நண்பரை கல்லால் அடித்து கொன்ற 2 வாலிபர்களுக்கு ஆயுள் திருவண்ணாமலை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு செங்கம் அருகே முன்விரோத தகராறில் appeared first on Dinakaran.