அதைத் தொடர்ந்து ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை மெக்கா பிராந்திய துணை ஆளுநரான இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல் அஜிஸ் மற்றும் வர்த்தக அமைச்சர் மஜித் அல்காசபி ஆகியோர் வரவேற்றனர். 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெட்டா சென்றடைந்ததும், தனது இந்த பயணம் இந்தியா, சவுதி இடையேயான நட்பை வலுப்படுத்தும் என மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். மேலும் சவுதி பட்டத்து இளவரசரை தனது சகோதரர் என வர்ணித்தார்.
விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு வந்த மோடிக்கு இந்திய வம்சாவளியினர் மோடி, மோடி என முழக்கமிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சவுதி பாடகர் ஹாஷிம் அப்பாஸ் பிரபல இந்தி திரைப்பட பாடலை பாடி வரவேற்றார். அங்கு இந்திய வம்சாவளியினர்களுடன் மோடி கலந்துரையாடினார். இந்த பயணத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது உடனான சந்திப்பில் ஹஜ் புனித பயணத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இப்பயணத்திற்கு முன்பாக அரபு செய்தியாளர்ளுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘‘சவுதி அரேபியா இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நம்பகமான நட்பு நாடு. கடல்சார் அண்டை நாடுகளான இந்தியாவும் சவுதி அரேபியாவும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்கின்றன’’ என்றார்.
The post இரண்டு நாள் பயணமாக சவுதி சென்றார் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.